பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27


"நாமா அவனைப் போகச் சொன்னாேம்? கண்ணாத்தாள் போட்ட தூபத்திலே அவன் கோபப்பட்டு போய் விட்டான். அதற்கு நாம் என்ன செய்வது?"

"கோபத்திலே போனால் அவனை அப்படியே விட்டு விடுவதா?"

"எனக்கொன்றும் அவன் மீது கோபமில்லை! அவன் என்ன எனக்குப் பகையாளியா? பெற்ற மகன் தானே?”

"என்ன ஆனாலும் பரவாயில்லை. நாளைக்கே கொச்சிக்குப் போய் அவனையும், கண்ணாத்தாளையும் திரும்பிக் கூட்டிவருவதுதான் எனது முதல் வேலை!"

"கோபித்துக் கொள்ளாதீர்கள். அது மட்டும் உங்களால் நடக்காது. கண்ணப்பன் வந்தாலும் வருவானே தவிர, கண்ணாத்தாள் ஒரு நாளும் வரமாட்டாள். அவள் ஒரு சபதம் போட்டுவிட்டுத்தானே போயிருக்கிறாள்!"

"அப்படி என்ன அவளுக்கும். நமக்கும் அவ்வளவு கொடிய மனஸ்தாபம்?"

"இந்த வீட்டுக்கே இனிமேல் அவளுக்கு வளைகாப்பு நடத்தி விட்டுத்தான் வருவாளாம்; போகும் போதே இப்படி ஒரு சபதத்தோடு போயிருக்கிறவளைக் கூப்பிட்டால் வருவாளா ? அவன்தான் அனுப்புவானா?"

"அங்கே உற்பத்தியாகிற கரு இங்கே இருந்தால் உற்பத்தியாகாது என்கிறாளா ? இது என்ன பைத்தியக்காரத்தனமான சபதம்!" என்று முத்துக் கருப்பர் முனங்கிக் கொண்டிருந்தார்!

இந்தச் சமயத்தில் வாசல்பக்கமாக இருந்து மீனாவின் மகன் ஓடி வந்து முத்துக்கருப்பரிடம் கூவினான்.

"தாத்தா பெரியம்மா வந்துக்கிட்டிருக்கு!"

"அட போடா இவனாெருத்தன்! உங்க பெரியம்மா உன்னைப் போலே ஒரு பிள்ளையைச் சுமந்து கொண்டுதான் நம்ம வீட்டுக்கே வருவாளாம்!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.

ஆனல் சிறுவன் சொன்னது உண்மைதான்.

கண்ணாத்தாள் தங்க ரதத்தைப்போல உள்ளே வந்து கொண்டிருந்தாள், முத்துக்கருப்பரும், அவர் மனைவியும் திகைத்துப் போனார்கள்.