பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

 இதைத் தவிர வேறு சமாதானத்தை கண்ணப்பனால் சொல்ல முடியவில்லை.

"உங்கள் சமாதானம் உங்களுக்கு வேண்டுமென்றால் சரியாகப்படலாம். வயிறு எரிகிறது என்கிறேன், நீங்களோ - வாழைப் பழத்தைச் சாப்பிடு சரியாகிவிடும் என்கிறீர்கள்’’.

"கண்ணா, நீ வருத்தப்படுவதிலே நியாயம் இருக்கிறது. ஆனால் உன் வருத்தம் உடனடியாகத் தீரக் கூடியதா? இதற்கு மருந்து கடைவீதியில் கிடைக்குமென்றால் என்ன விலை கொடுத்தும் வாங்கிவந்து விடுவேனே".

"இரும்புப் பெட்டியில் பணம் இருந்தால்தான் அதற்குப் பெயர் பெட்டகமாம்! இல்லாவிட்டால் அது வெறும் இரும்புதானாம். அத்தை அடிக்கடி இப்படி என்னை இடித்துக் காட்டிப்பேசுகிறார்கள்!"

"உனக்கிருக்கும் மனத்தாங்கல் எனக்கும் இருக்கிறது. ஆனால் உன்னைப் போல் என்னால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லையே! பெண்கள் வீட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் கொஞ்ச நாளில் கூடிக்கொள்வார்கள். அதுவே ஆண்கள் மத்தியில் வந்துவிட்டால் பாகப் பிரிவினை வரை போய்த்தான் நிற்கும்! இந்தப் பிரச்சினையால் எனக்கும் தம்பிக்கும் அபிப்பிராயபேதம் வந்துவிடக் கூடாதே என்றுதான் பார்க்கிறேன், எதற்கும். ஒரு முடிவு வரும். அதுவரை காத்திருப்போம்” என்று கண்ணப்பன் கண்ணாவின் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னான்.

இந்தச் சமயத்தில் கண்ணப்பனின் தந்தை முத்துக்கருப்பர் உள்ளே வந்தார்.

"என்னம்மா, காலை நேரத்திலேயே அவனைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்திருக்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டேதான் நுழைந்தார். அவர் தோளில் அவரது பேரப் பிள்ளை - மீனாவின் மகன்- தொத்திக்கொண்டிருந்தான்.

"பெரியப்பர்வைக் கேளுடா, என்னைப் போல ஒரு புள்ளையை நீங்களும் பெத்தா என்னப்பானு கேளுடா" என்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார் முத்துக் கருப்பர்.

இதைக் கேட்டதும் கண்ணப்பன் துணுக்குற்றுப் போனான். கண்ணா எவ்வளவு பெரிய தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை அப்போது தான் நிதர்சனமாகத் தெரிந்துகொண்டான்.