பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 பதில் கண்ணப்பன் உள்ளத்தில் முள் தைப்பதுபோல் பட்டது.

" நீ சொல்வது எனக்கும் புரிகிறது கண்ணா! உனக்கும் எனக்கும் இப்போது இளமையா போய் விட்டது: எத்தனையோ பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேலே, குழந்தை பிறந்ததில்லையா?”

கண்ணப்பன், கண்ணாவுக்கு பதில் சொல்லி விட்டானே தவிர, அவன் மனதுக்கு பதில் சொல்லிக் கொள்ள அவனால் முடிய வில்லை.

கண்ணாத்தாலின் கண்களில் நீர் கோத்து விட்டது.

"அத்தை முன்னைப் போல இப்போது என்னோடு கலகலப்பாகப் பேசுவதில்லை. பெட்டகத்துச் சாவி, உக்கிராணச் சாவி எப்போதுமே என்னிடம் தான் இருக்கும், இரண்டு சாவிகளையும் அத்தை என்னிடமிருந்து நேற்று வாங்கிக் கொண்டார்கள்."

"அம்மா, பாதுகாப்பிற்காக வாங்கிக் கொண்டிருப்பார்கள். வேறு எதுவும் காரணமிருக்காது" என்று கனிவாகச் சொன்னான் கண்ணப்பன்.

"நீங்கள் எப்போதுமே இப்படித்தான். எல்லாவற்றையும் மூடிமூடி மறைப்பீர்கள்"என்று முணுமுணுத்தாள் கண்ணா.

" உனக்கு ஏதாவது காரணம் தெரிந்தால் சொல்லு! அம்மாவை நானே கேட்கிறேன்" என்றான் கண்ணப்பன்.

"ஆறு வருஷமாக என்னிடமிருந்த சாவிக் கொத்து திடீரென்று ஏன் கைமாற வேண்டும்? பேரன் மேலே வந்த பிரியம் சின்ன மருமகள்மீது தாவிவிட்டது ! இதுதான் காரணம் "- கண்ணா இவ்வளவு கடுப்பாக என்றைக்கும் பேசியதில்லை.

"விஷயத்தை இப்படி விளக்கமாகச் சொன்னல் தானே எனக்கும் புரியும் ? அம்மா உன்கிட்டே இருந்த சாவிக் கொத்தைப் பிடுங்கி மீனாவிடம் கொடுத்துவிட்டார்கள்: அவ்வளவுதான?”

"உங்களுக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்; ஆனால் எனக்கு அப்படி இல்லை!"

"உனக்கு அவமானமாகத் தெரிகிறது என்கிறாய்! அந்த அவமானமும் என்னால்தான் வந்தது என்று எனக்கு இடித்துக்காட்டுகிறாய்!"

கண்ணா இதற்குப் பதில் சொல்லவில்லை; வாய்விட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்,