பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்காலப் பல்லவர்

45



வெளியிட்டது. ஆந்திர பதத்தில் (பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘விரிபரம்’ என்னும் சிற்றுரை இரண்டு பிராமணர்க்கு உரிமையாக் கினமை இப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுரிமை, இளவரசன் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவனது ஆட்சி 10 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. இது காஞ்சியிலிருந்து விடப் பட்டதாகும். இது தான்ய கடகத்தில் இருந்த (பல்லவர்க்குரிய தெலுங்கு நாட்டைத் தலைவனாக இருந்து ஆண்ட) தலைவனுக்கு அனுப்பப் பட்டது.

(2) ஹிரஹதகல்லிப் பட்டயம்

‘ஹிரஹதகல்லி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள சிற்றுர், இப் பட்டயம் பல்லவ - தர்ம - மகாராசாதிராசன் சிவஸ்கந்தவர்மன் விடுத்ததாகும். இஃது இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்டது. பப்பமகாராசன்[1] விடுத்த தானத்தை உறுதிப் படுத்தவும் விரிவு படுத்தவும் இது விடப்பட்டது. தானம் பெற்ற தோட்டம் உள்ள ஊர் ‘சில்லரேக கொடுங்கா’ என்பது. அது சாதவாகனராட்டிரத்தில் உள்ளது. இதில் அரசியல் அலுவலாளர் பெயர்களும் பிறவும் குறிக்கப்பட்டுள்ளன. சிவஸ்கந்தவர்மன் அக்நிஷ்டோமம், வாஜபேயம், அசுவமேதம் என்னும் பெரு வேள்விகளைச் செய்தவன் என இப் பட்டயம் குறிக்கிறது.

(3) குணபதேயப் பட்டயம்

இது விசய-ஸ்கந்தவர்ம மகாராசன் ஆட்சிக்காலத்தில், இளவரசன் புத்தவர்மன் மனைவியும் புத்தியங்குரன் தாயுமான சாருதேவி என்பவள் விடுத்தது. தாலூராவில் உள்ள பெருமாள் (நாராயணன்) கோவிலுக்கு அவ்விளவரசி நிலத்தைத் தானமாக விட்ட செய்தி இதில் காணப்படுகிறது. விசய ஸ்கந்தவர்மனுக்கும் இளவரசன் புத்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது இதில் குறிக்கப்படவில்லை.


  1. பப்ப அப்பன் என்பது பொருள். எனவே ‘பப்பமகாராசன்” என்பது சிவஸ்கந்தவர்மன் தந்தையாதல் வேண்டும். ஆனால், அவனது இயற்பெயர் இன்னதென்று விளங்கவில்லை. Vide D. Sircar’s Successors of the Satvahanas’ p. 183.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/65&oldid=583590" இலிருந்து மீள்விக்கப்பட்டது