பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பல்லவர் வரலாறு



வந்த கதம்பர், தமக்கு வடக்கே சாளுக்கிய அரசை உண்டாக்கி அதனை வலுப்படுத்த முயன்ற சாளுக்கியருடன் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர் என்பதேயாகும்.[1]

பல்லவர் - சோழர் போர்

காஞ்சியைக் கைப்பற்றிய குமார விஷ்ணுவின் மகனான புத்த வர்மன் சோழருடைய கடல் போன்ற சேனைகட்கு வடவைத் தீப்போன்றவன் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இதனால், நாம் முன்னர்க் கூறியாங்கு, குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றிய பின், தெற்கே இருந்து தமக்கு இடையறாத துன்பத்தை உண்டாக்கி வந்த களப்பிரரை வெல்லவோ, அல்லது எஞ்சிய தொண்டை நாட்டையும் சோணாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தாலோ புத்தவர்மன் தன் படையுடன் சென்றான். பல்லவரை எதிர்க்கச்சோழரும்களப்பிரருடன் சேர்ந்திருப்பர். போரின் விளைவு தெரிந்திலது. எனினும் இப் போரில் புத்தவர்மன் வெற்றி பெற்றதாகக் கூறற் கிடமில்லை. ஏன்? கி.பி. 575 இல் அரசனாக வந்த சிம்மவிஷ்ணுவே காவிரி வரையுள்ள நாட்டை வென்றவனாதலின் என்க. எனவே, காஞ்சிமீது படையெடுத்து வந்த களப்பிரரையும் சோழரையும் புத்தவர்மன் விரட்டி இருக்கலாம்; மேற்கொண்டு தெற்கு நோக்கிப் போகவில்லை எனக் கோடலே பொருத்தமாகும்.

சாளுக்கியர் தோற்றம்

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சிற்றரசராக இருந்து உயர்நிலைக்கு வந்தவர் சாளுக்கியர். அவருள் முதல்வள் விசயாதித்தன். வாதாபியைத் தலைநகராகக் கொண்டசாளுக்கிய அரசை ஏற்படுத்தினான்.

பல்லவர் சாளுக்கியர் போர்கள்

விசயாதித்தனுக்கும் திரிநயனப் பல்லவற்கும் போர்கள் நடந்தன என்று கதை கூறப்படுகிறது. அது மெய்யென்பார் சிலர்; பொய் என்பார்


  1. M.V.K. Rao’s “Ganges of Talakad,’ pp.37-38.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/90&oldid=583615" இலிருந்து மீள்விக்கப்பட்டது