பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

பல்லவர் வரலாறு



(6) பல்லவர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொன் காசுகள் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளது. பொன்[1] என்பது ஒரு காசின் பெயர் பழங்காசு என்பன சிறந்த வேலைப்பாடு கொண்டவை; ‘பழங்காசினோடு உறைப்ப துளைப் பொன்’ என வருதல் காண, பிற்காலக் காசுகள் அப்பழங்காசு நிலையில் இருந்தனவா என்பது சோதிக்கப்பட்டன[2] என்பது அறியத்தகும். பழங்காசு நிலையில் இல்லாத பொற்காசுகள் வாசி இன்றி (வட்டம் இல்லாமல்) செல்லாவாயின. இவ்வரிய நுட்பமான செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியக்கிடத்தல் காண்க. அம்மட்டமான காசுகளைக் ‘கறைகொள் காசு’ என்று சம்பந்தர் கூறல் காண்க.[3] துளைப்பொன் என்பது துளையிடப்பட்டபொற்காசு, ‘விடேல் விடுகு - துளையிட்ட செம்பொன்’ என்பது துளையிடப்பட்ட விடேல் விடுகு முத்திரை பெற்ற காசாகும். கழஞ்சுக் காசு என்பது ஒரு கழஞ்சு எடையுள்ள பொற்காசு.

பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்

(1) மழை பெய்யாவிடில் பயிர் விளையாது; நாட்டில் பஞ்சம் ஏற்படுதல் இயற்கை. அத்துடன் ஓயாத பெரும் போர்களாலும் அரசியல் நிலைகுலைய-மூலபண்டாரம் வற்ற-அவ்வந்நாட்டுப் பண்டாரங்கள் வற்ற-நாட்டில் பஞ்சக் கொடுமை தலைவிரித் தாடலும் இயல்பு பல்லவப்பேரரசில் தொண்டை நாடு ஆற்றுவளம் நிரம்பப்பெற்றதன்று. மழை இன்றேல் ஏரிகளில் நீர் இராது. பல்லவர் ஆட்சிக்குட்பட்ட சோணாட்டில் ‘செவிலித்தாய்’ என்ன ஒம்பும் தீம்புனற்கன்னியாறு மழை பெய்யாவிடில் என்ன செய்யும்! ஆற்றில் மழை நீர் வரினும், நாட்டின் செல்வ நிலை இழிவுற்றிருப்பின்,


  1. கங்க நாட்டில் அரைச்சுவரன் ‘பொன்’ எனப்பட்டது. Vide “Gangas of Talakad’ p.145.
  2. Ibid. p.92.
  3. ‘வாசி திரவே காசு நல்குவீர்’ என்னும் சம்பந்தர் பாடல் இங்கு ஆராய்ச்சிக்குரியது - திரு இருக்குக்குறள். பதிகம்: (12): 1.