பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

பல்லவர் வரலாறு



பல்லவருள் ஒருவனான முதலாம் சிம்மவர்மன் (கி.பி. 436-450) இம் மடத்தை நன்கு ஆதரித்தான் என்பது, ‘லோக விபாகம்’ என்னும் நூலைக்கொண்டு குறிப்பாக உணரலாம். இவனுக்கு அடுத்தவனாக இம் மடத்தைப் பெரிதும் ஆதரித்தவன் மகேந்திரவர்மன் ஆவன் அக்காலத்திற்றான் அப்பர் இங்குத் தருமசேனராக இருந்தார். அவர் சைவராக மாறினதும் அரசனும் நன்கு யோசித்துச் சைவனாக மாறினான்; பாதிரிப்புலியூர் மடத்தை அடியோடு அழித்து, அப் பொருள்களைக் கொண்டு திருவதிகையில் கோவில் கட்டி, அதற்குக் ‘குணதர ஈசுவரம்’ என்று தன் பெயரிட்டான் என்பன பெரியபுராணத்தால் அறிகிறோம். இந்நிகழ்ச்சியால், அறிவுக் களஞ்சியமாக இருந்த சமண மடம் அழிந்தது. சமணர், பேரரசன் ஆதரவை இழந்தனர். அதன் பிறகு பாடலிபுரத்துச் சமணர் பெருமை பிற்கால வரலாற்றில் கேட்கப்படவே இல்லை.[1]

திருப்பருத்திக்குன்றம்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள இந்த இடம் சமணகாஞ்சி எனப்படும். இது பல்லவர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இடமாகும். இது வேகவதி யாற்றங்கரையில் காஞ்சிக்கு இரண்டு கல் தொலைவில் உள்ள கலைப்பீடமாகும். இந்த இடத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று பல்லவர் காலத்துக் கோவில் என்னலாம்; மற்றொன்று பிற்காலத்ததாகலாம். இத் திருப்பதியைப் பற்றி அறிஞர் T.N. இராமச்சந்திரன்[2] என்பார் அழகிய ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார். இங்குள்ள ஓவியங்கள் பழையன: மூர்த்தங்கள் பழையன; பல்லவர் காலச் சிற்ப-ஓவியக் கலைகளை ஓரளவு இங்குக் கண்டு மகிழலாம். இச் சிற்றுர் பல்லவர் காலத்திற் சிறப்புடையதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது பார்த்தவுடனே நன்கு வெளியாகிறது. திருப்பருத்திக்குன்றம் பல்லவர் காலத்தில்


  1. திருவதிகை-கோவிலுக்கு ஒரு கல்தொலைவில் பாழ்பட்டுக் கிடந்து இப்போது வெளிக்கொணரப்பட்ட சிறிய கோவிலே ‘குணதர ஈச்சுரம்’ என்று அறிஞர் கூறுகின்றனர்.
  2. Vide “Tiruparuthikunram and its Temples’.