பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

பல்லவர் வரலாறு



உயரிய ஆராய்ச்சிக் கல்வியையும் அளித்து வந்தது என்பதை நன்குணரலாம்.

அக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர் வடமொழிச் சாத்திரங்களைக் கற்றனர். அவற்றைப் போதிக்க வடமொழிப் புலவர் பலர் இருந்தனர்.

மயூரசன்மன் பல்லவ அரசனால் கல்லூரியிலிருந்து விரட்டப்பட்டான் என்பதிலிருந்து, கல்லூரி பல்லவ அரசனது பார்வையின் கீழ் இருந்தது என்பது தெளிவாகும்.

பல கலை வல்லார் இங்குக் கூடிப் பேசலும் மரபு. ஒரு கலையிற் புலமை எய்திய ஒருவர், தாம் கண்டதைக் கூறிப்பிறர் இசைவைப் பெறவும் இக்கடிகை பயன்பெற்றது. சமந்தபத்திரர், பூச்யபாதர் முதலிய சமண சமய ஆசிரியரும் பெரும் புலவரும் ஆகிய பெருமக்கள் இங்கு வந்திருந்தனர் எனின், இக்கடிகை, மதுரைத் தமிழ்ச் சங்கம் போல அனைவர்க்கும் பொதுக் கடிகையாக இருந்ததென்னலாம். இங்குப் பேசுதல் அக்காலத்தில் சிறப்பளித்த ஒன்றாகக் கருதப்பட்டது. இதனால், இச்சிறப்பைப் பெறப் பல நாட்டார் இங்கு வந்து சென்றனர்.[1] இங்கிருந்துதர்மபாலர் நாலந்தாப் பல்கலைக் கழகப் பேராசிரியராகச் சென்றார். எனின் இக்கடிகை அஃகாலத்தில், பெற்றிருந்த பெருஞ் சிறப்பை என்னென்பது இதனை நன்கு அறிந்தே அப்பர் பெருமான், “கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்” எனப் பாராட்டியுள்ளார்.

கடிகாசலம்

இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோளிங்கர் (சோழ சிங்கபுரம், கடிகாசலம்) மலைமீதுள்ள கடிகைக்கு மானியம் விடப்பட்டதாகத் திருவல்லம் கல்வெட்டுக் குறிக்கிறது. இது நீண்ட காலமாக அங்கு இருந்திருக்கலாம். இது வைணவர் கலைப் பீடமாக இருந்திருத்தல் கூடியதே.


  1. N.V.K. Rao’s “Gangas of Talakad’, pp.257-258.