பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

317



சைவத்திரு முறைகள் (கி.பி. 250-850)

திருமூலர் திருமந்திரம், பேயம்மையார் பாடியபதிகங்கள், சமயகுரவர் திருமுறைகள், ஐயடிகள் ‘க்ஷேத்திர வெண்பா.’ திருத்தொண்டத் தொகை, சேரமான் பெருமாள் பாடிய அந்தாதி, உலா முதலியன பல்லவர் காலத்தனவே ஆகும். அவற்றைத் தனித்தனி விரிக்கிற் பெருகும். அவற்றுள் திருமுறைகள் பற்றிய குறிப்புகள் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளன.

நந்திக் கலம்பகம் (கி.பி. 830-850)

இந்நூல் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றியதென்பது முன்பே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இவனதுவேலூர் பாளையப் பட்டயத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது. இஃது இல்லாவிடில் இப்பேரரசன் முதலிற்செய்த வடநாட்டுப் போர் விளக்கம்பெறாது ஒழிந்திருக்கும். ‘குறுகோட்டை’ என்ற பெயர் ஒன்றே வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை நன்கு விளக்கப் பேருதவி புரிந்தது. மேலும் பட்டயத்திற்குறிக்கப்படாத இவனது தமிழ்ப் புலமை, தமிழ்ப் புரவலனாந்தன்மை. பிற நல்லியல்புகள். இவன் மனைவியர். தம்பி முதலியவர் செய்திகளும் இன்னபிறவும் அறிந்து வரலாறு கட்ட இச் சிறு நூல் பேருதவி புரிந்துள்ளது. இம்மூன்றும் நந்திவர்மனே பெரிய புராணம் கூறும் காடவர்கோன் கழற்சிங்கன் என்பதை அறிய உதவிபுரிந்தது. இந்நூலே ஆகும். இதனால், கழற்சிங்கன்வரலாற்றுச் சிறப்புப்பெற்று விட்டான் அல்லனோ? இவன் அவனி நாரணன் என்றொரு பெரும் கொண்டவன் என்பது கலம்பகம் கூறும் நற்செய்தியாகும். காவேரிப்பாக்கம் ‘அவனி நாராயணச்’ சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. சையாமில் இருந்த குளம் ஒன்று (தமிழன் பல்லவ நாட்டினன் வெட்டியது) அவனி நாரணம் எனப்பட்டதாக அங்குக் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. பின்னிரண்டை ஒப்புநோக்கக் கலம்பகம் எத்துணைப் பேருதவி புரிகிற நிலையில் இருக்கிறதென்பது தானே விளங்கும். இவற்றோடு, இச்சிறு நூல், தமிழ்மொழியில், கலம்பகம் என்னும் பிரபந்த முறையில் இன்றுள்ள முதல் நூல் என்று கூறத்தக்க பழைமையும் பெற்ற தென்னலாம்: