பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

பல்லவர் வரலாறு



இதுகாறும் கூறிவந்த செய்திகளால், தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே - பல்லவருக்கு முன்னரே கோவில்கள் இருந்தன: கோவில் மதில்கள் இருந்தன; கோபுரங்கள் இருந்தன: கோபுரங்களில் சுண்ணாம்பு, மண் இவற்றால் செய்யப்பட்டவேலைப்பாடுகள் இருந்தன என்பதை நன்கறியலாம்.

நமது கால எல்லைப்படி, கி.பி. 200 முதல் 250க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கட் சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பர், சம்பந்தர் தம் பதிகங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். கோச்செங்கணான் கட்டியவை மாடக்கோவில்கள் எனப்படும். மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானைகள் செல்லக்கூடாதிருக்கும் திருமுன்பையும் உடையது.[1]

தேவார காலத்துக் கோவில்கள்

தேவார காலத்துத் தமிழகத்தில் ஏறத்தாழ 200 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் இயன்றவையே என்பது சங்க நூற்பாக்களால் முன்னரே உணர்த்தப்பட்ட செய்தி ஆகும். இச் செய்தியை அப்பர் காலத்து மகேந்திரவர்மன் தன் மண்டபப்பட்டுக் கல்வெட்டினால் உறுதிப்படுத்தியுள்ளான் என்பதையும் மேற் காட்டினோம் அல்லவா? இங்ஙனம் அமைந்த பழைய கோவில்கள் பலவகைப்படும். அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில். (3) மணிக்கோவில், (4) கரக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலாகப் பல வகைப்படும். இவற்றுள் பெருங்கோவில்கள் 78.அப்பர்காலத்தில் இருந்தன என்று அப்பரே கூறியுள்ளார். பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்து வந்துள்ள (பெரிய கோவில் திருச்சுற்றில் உள்ள) சிறிய கோவிலே இளங்கோவில் எனப்படும். பிறவும் ‘இளங்கோவில்’ எனப் பெயர் பெறும். இத்தகைய இளங்கோவில்கள் சில தேவார காலத்தில்


  1. “Sivasthala Manjari,’ p.51.