பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

பல்லவர் வரலாறு



இவற்றை எழுதிய முறை

கற்பாறைகள் மீது இந்த அழகிய ஓவியங்கள் எங்ஙனம் வரையப்பட்டன?[1] “சுவர்ப்புறம் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருப்பதற்காகச் சுவர்மீது ஒரு நெல் அளவுக்குச் சுண்ணாம்புச்சாந்து பூசப்படும். பாறை, தன்மீது தீட்டப் பெறும் நிறத்தை ஏற்றும்கொள்ளும் இயல்பு அற்றது. ஆதலின், சுண்ணச் சாந்து அதற்குப் பயன்பட்டது. சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கலந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைத்தசாந்து சுவரில் அல்லது கூரையில் உறுதியாகப் பற்றிக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஓவியக்காரன் மஞ்சட் கிழங்கைக் கொண்டு இரேகைகளை வரைந்து கொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றுவதுடன் பிறகு அழியாமல் இருக்கும் தன்மையும் வாய்ந்தது. ஒவியக்காரன் புனையா ஓவியம் என்னும் இந்த இரேகைகளை முதலில் வரைந்துகொண்டே பிறகு நிறங்களைத் தீட்டுவான்; சிவப்பு, மஞ்சள், வெள்ளை. நீலம், பச்சை கறுப்பு ஆகிய நிறங்களைத் தரும் பச்சிலை நிறங்களையே பயன்படுத்துவான்....; ஈரம் காய்ந்த பிறகு சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்னரே கூழாங் கற்களைக்கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெருகிடுவான். இங்ஙனம் தீட்டப்பட்ட ஓவியம் அழியாது நெடுங்காலம் இருக்கத்தக்கதாகும்.”[2]

பல்லவர் சிற்பம்

பல்லவர் பெருவேந்தர் குடைவித்த கற்கோவில்களிலும் எடுப்பித்த பெருங்கோவில்களிலும் உள்ள சிற்பங்களைப்பற்றி விளக்கம் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஒன்றே சிறந்த பல்லவர் சிற்பக்கூடம் என்னலாம்; அங்குள்ள அருச்சுனன் தவநிலை காட்டும் சிற்பமும், எருமைத்தலை அசுரனும்


  1. Dr.C.Minakshi’s “Administraion and Social Life under the Pallavas” pp.292, 293-295
  2. P.N. Subramanian’s “Pallava Mahendravarman pp.107-109.