பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

241



(3) மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) தெள்ளாற்றில் தன் பகைவரான தமிழ் வேந்தரை முறியடித்தான். அக்காலத்தில் சோழர் சேனைத்தலைவராக இருந்தவர். கோட்புலி நாயனார்[1] ஆவர். பல்லவர்க்கும் தமிழ் அரசர்க்கும் இருந்த மனக் கசப்பையும், போரில் கோட்புலியார் காட்டிய வீரத்தையும் சுந்தரர் தம் பதிகங்களில் பாடியுள்ளார்.[2] இக் கோட்புலி நாயனார் போருக்குச் சென்ற பிறகு நாட்டில் பெரும் பஞ்சம் உண்டானது. அவர் சிவனடியார்க்கு என்று வைத்திருந்த நெல்லை அவர் உறவினர் உண்டுவிட்டனர்.[3] இக்குறிப்பினால், சுந்தரர்-மூன்றாம் நந்திவர்மன் கோட் புலியார் காலத்தில் (கி.பி. 825-850) தென்னாட்டில் பஞ்சம் உண்டானது என்பதை அறியலாம். இங்ஙனம் பல்லவர் ஆட்சியில் பல காலங்களில் பஞ்சம் உண்டாயின என்பது தேற்றம்.

பஞ்சம் ஒழிப்பு வேலை

பெரும் போர்களில் ஈடுபட்டிருந்த பேரறிவும் பெரும் பக்தியும் கொண்ட பல்லவப் பேரரசர் சிற்றுர்களில் முன்னெச்சரிக்கையாக, அல்லது போர் நடந்தபிறகு (இயன்ற வரை குடிகட்குத் துன்பம் உண்டாகாமற் காக்கப்) பஞ்ச வார வாரியம் ஏற்படுத்தி இருந்தனர் என்பது ஊகித்து உணர்தற்பாலது. ஒவ்வொரு சிற்றுரிலும் அறுவடையானவுடன் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு பகுதி நெல் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதனைச் சேர்த்தல், மேற்பார்வை இடல். காத்தல், பஞ்ச காலத்தில் குடிகட்குத் தந்து உதவல் முதலிய

  1. Dr. C. Minakahi’s “Administration and Social Life under the Pallavas’, pp.304-305.
  2. “பல்லவற்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமான்” - சுந்தரர். “கூடாமன்னரைக் கூட்டத்து வென்ற கோட்புலி”
  3. கோட்புலி நாயனார் புராணம், செ.4-10