பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

பல்லவர் வரலாறு



கொண்ட நிலப்பரப்பே ‘நிவர்த்தனம்’ எனப் பெயர்பெற்றது. (3) பட்டிகா (பட்டி) என்பது ஆட்டை ஓர் இடத்தில் கட்டி அதன் கயிற்றின் உதவியால் சுற்றும் அளவையுடைய நிலப்பகுதியை ஆகும். (4) பாடகம் என்பது 240 குழிகொண்ட நிலமாகும். பிற்காலப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் ‘வேலி குழி’ என்பன அளவைகளாகக் காண்கின்றன. குழி என்பது 144 சதுர அடி முதல் 576 சதுர அடிவரை நாட்டுக்கேற்ப வழங்கப்பெற்றது. நிருபதுங்கன் காலத்தில் ஒரு குழி 81 சதுர அடி அளவை உடையதாக இருந்தது.

இந்த அளவைகளோடு (1) நாலு சாண் கோல், (2) பன்னிரு சாண் கோல், (3) பதினாறு சாண் கோல் முதலிய நீட்டல் அளவைகள் இருநதன என்பதும் கல்வெட்டுகளால் அறியத்தகும் செய்தியாகும்.[1]

முகத்தல் அளவை

நாழிகள் பல பெயர்கள் பெற்றிருந்தன; அவை, (1) கரு நாழி (2) நால்வா நாழி (3) மாநாயநாழி (4) பிழையா நாழி (5) நாராய(ன) நாழி முதலியன. உறி என்பது ஒருமுகத்தல் அளவைக்கருவியாகும். ஒரு கல்வெட்டில் ‘பிருதி(வீ) மாணிக்கஉறி’ என்னும் பெயர் காணப்படுகிறது. ‘பிருதிவீ மாணிக்கம்’ என்பது நிருபதுங்கவர்மன் மனைவி பெயராகும் இங்ஙனம் பல அளவைகள் கோப்பெருந் தேவியர் பெயர்களை கொண்டனவாக இருந்திருக்கலாம். ‘விடேல் விடுகு உழக்கு என்பது பொதுவாக மூத்திரையிடப் பட்ட பல்லவர் கால முகத்தல்கருவியாகும். அஃது எல்லாப் பல்லவ அரசர்காலத்தும் இருந்து வந்ததாகலாம் எண்ணெய், நெய் பால் முதலிய அளக்கப் பயன்பட்ட சிறிய அளவை ‘பிடி’ எனப்பட்டது. இவை அன்றி, நெல்முதலியன அளக்கச் சோடு, நாழி, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன பயன்பட்டன.[2]


  1. இத்தகைய நீட்டல் அளவைகள் கங்க நாட்டில் வரிசைக்கோல், கங்ககோல், பெருந்த கோல், மர்குந்தி கோல், சச்சவி கோல் எனப் பலவாறு வழங்கப்பெற்றன. Vide “Gangas ofTalakad,’ P. 144.
  2. Dr.C.Minakshi’s “Administration and SocialLife under the Pallavas'