பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரசிம்மவர்மன்

119



மகேந்திரவர்மனைப் பின்பற்றிக் குகைக் கோவில்களையே அமைத்தான். இவன் அமைத்த கோவில்களைக் கண்டறிதல் எங்ஙனம்? இவன் அமைத்த குகைக் கோவில்களில் இவனுடைய விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஓவிய வேலை மிகுதியாக இருக்கும். குகைக்கோவிலின் முன்மண்டபச் சுவர்களில் மிக்க அழகிய சிலைகளும் அணி அணியாய் அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் வெட்டுவித்திருக்கும். மகேந்திரன் அமைத்த கோவில் தூண்கள் சதுரமாயும் கனமாயும் இருக்கும். ஆனால், நரசிம்மவர்மன் எடுத்த கோவில் தூண்களின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ்த்துணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடியில் ஏறக்குறைய இரண்டு முழ அகலமும் இரண்டு முழு உயரமும் கொண்டு திறந்த வாயுடன் இருக்கும். சிங்கங்கள் தூண்களைத் தம் தலைமீது தாங்கி இருத்தல் போன்ற வேலைப்பாடு காணப்படும். இவற்றைநோக்க, இம் மன்னர் மன்னன் தன் பெயரைக் குறிக்கவே இச் சிங்கத்தூண்களை அமைத்தனனோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது.[1]

நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமான் குகைக்கோவில் இம் மன்னன் காலத்தது. அதன் சுவர்களில் புராணக் கதைகள் சிற்ப வேலையில் விளக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள குகைக் கோவில் இவன் காலத்தது. இதன் கிழக்குப் பக்கத்தில் சிவன் கோவிலும் மேற்குப் பக்கத்தில் பெருமாள் கோவிலும் குடையப்பட்டுள்ளன. இவ்விரண்டு கோவில்களுக்கும் இடையில் உள்ள பெரிய மண்டபச் சுவர் மீது, சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி ஆகியவர் உருவங்கள் செவ்வையாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மரவிட்டங்கள் போலக்கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு இன்புறத்தக்கது. இக் கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட குபேரன் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


  1. Archaeological Report for 1918-1919, pp. 16-30. இத்தகைய தூண்கள் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலுக்குள் இருக்கின்றன.