பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பல்லவர் வரலாறு



11. பரமேசுவரவர்மன்
(கி.பி. 670-685)[1]

இரண்டாம் மகேந்திரவர்மன் (668-670)

இவன் நரசிம்மவர்மன் மகன். இவன் வரலாறு கூறும் பட்டயம் ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ‘இவன் அவ்வவ் வகுப்பார் நடக்க வேண்டும் முறைகளைக் கூறும் அறநூல்வழி ஆண்டான்’ என்று மட்டுமே வேலூர் பாளையப் பட்டயம் கூறுகிறது. இவன் நெடுங்காலம் ஆண்டனன் என்பது தெரியவில்லை. இவனுக்குப் பின் வந்த பரமேசுவரவர்மன் காலம் கி.பி. 670-685 என்னலாம்.

பல்லவர் - சாளுக்கியர் போர்

பரமேசுவரன் காலத்தில் சாளுக்கிய அரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆவான். அவன் சிறந்த போர்வீரன். அவன் தன் தந்தை அடைந்த இழிவையும் தலைநகரம் அடைந்த அழிவையும் போக்கிக்கொள்ள அவாவிப் பல்லவநாட்டின் மீது படையெடுத்தான். இப் படையெடுப்பைப் பற்றிச் சாளுக்கியர் பட்டயங்களும் பல்லவர் பட்டயங்களும் குறிப்புகள் தருகின்றன. அவ் விரண்டையும் ஆராய்ந்து முடிவு காணலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) முதலாம் விக்கிரமாதித்தன் வெளியிட்ட ‘கர்நூல்’ பட்டயம் கூறுவது: “விக்கிரமாதித்தன் தன் தந்தையின் பட்டத்தைத் தன் வலிமையால் அடைந்தான்; மூன்று கூட்டரசரை வென்று தன் உரிமையை நிலைநாட்டினான்; தன் பகைவரைப் பல நாடுகளில் வென்று தன் உரிமையைப் பெற்றான்,” என்பது.


  1. அடுத்த பகுதியில் கூறப்படும் சீனச் செய்தியைக் கொண்டு பரமேசுவரன் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 685உடன் முடிந்ததாகக் கொள்ளப் பட்டது.