பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

பல்லவர் வரலாறு



நாகநந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியார்க்குப் படிமம் எடுக்கப்பட்டடது’ என்பது காணப்படுகின்றது. இதனால் இப் பேரரசன் காலத்தில் பல்லவ நாட்டில் சமணர் சிலரும் இருந்தமை தெளிவாம். புத்தரும் அக்காலத்தில் இருந்தனர் என்பதைத் திருமங்கை ஆழ்வார் பதிகங்கள் வலியுறுத்துகின்றன.[1]

கல்வி நிலை

பல்லவ மல்லனிடம் கொடை பெற்ற மறையவர் அனைவரும் சிறந்த கலை விற்பன்னராவர்; நான்கு வேதங்கள். ஆறு அங்கங்கள் முதலியவற்றில் துறை போனவர் செய்யுள், கூத்து, இதிகாசம், கதைகள் இவற்றில் வல்லவர்; எல்லாவகைச் சடங்குகளிலும் தேர்ச்சியுற்றவர் நல்ல ஒழுக்கம் உடையவர். இவரை, ‘இருள் அகற்றும் ஒளி அனையர்’ என்று காசக்குடிப் பட்டயம் முதலியன கூறுகின்றன. ‘பல்லவ மல்லனே சிறந்த கல்விமான் படைக்கலப் புலவன்: இசை விருப்பன்: செய்யுட்கள் செய்வதில் வால்மீகி போன்றவன்; வில்வித்தையில் இராமன். அரசியலில் பிரகஸ்பதி’ எனப் பலபடப் பட்டயங்கள் பகர்கின்றன.

பல்லவப் பேரரசு

இரண்டாம் நந்திவர்மன், தன் காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் பல போர்கள் செய்தனன் ஆயினும், தன் பெருநாட்டில் ஒரு சிறு பகுதியையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவனது தமிழ் மண்டலம் வட வேங்கடம் முதல் புதுக்கோட்டைவரை பரவி இருந்தது. இவனது பேரரசு முன்னிலும் மிக்க வன்மை பெற்று விளங்கியது. நாட்டில் கல்வி நிலை, சமய நிலை முதலியன நன்றாய்ப் பரவின என்னல் மிகையாகாது.

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசன் சீபுருடன் (கி.பி. 726-788), சாளுக்கியமன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746),


  1. பெரிய திருமொழி - 2,6,5:2,1,7; 7,9,2; 9,7,9; 7,45 முதலியன.