பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பெயரகராதி

237



இராசசிம்ம பல்லவனிடம் சீன தூதனாக வந்த ஒருவன் சீனப் பேரரசனால் கொடுக்கப்பட்ட மீன் உருவம் அமைக்கப்பட்ட பை ஒன்றுடன் வந்தான் என்னும் குறிப்பினால், இராசசிம்மன் பாண்டியரும் பாராட்டத்தக்க நிலையில் பேரரசனாக இருந்தான் என்பதைச் சீனப் பேரரசனும் மதித்துவந்தான் என்று விளக்குகின்றது என்று அறிஞர் கருதுகின்றனர்.[1]

(4) நந்தி இலச்சினைக்கு மேல் ‘மானபரா’ என்பது பொறிக்கப்பட்டுள்ள காசுகள் சிலவாகும். இக்காசுகளின் பின்புறம் சங்கு ஒன்று பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதே போலப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் ‘கதிரவன்’ என்று எலியட் கூறுவர். இஃது ‘அதிமான’ என்று தன்னைக் கூறிக்கொண்ட இராசசிம்மனது காசாகாலம் என்று டாக்டர் மீனாட்சி அம்மையார் கருதுகின்றனர். ‘சங்கு’ தெளிவாகப் பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளதை நன்கு நோக்க, இக்காசுகள் வைணவப் பற்றுடைய பல்லவ அரசர் காலத்தவை எனக்கோடலே பொருத்தமாகும். (பிற்காலப் பல்லவருள்) வைணவப் பற்றுடையராக இருந்தவருள் சிறப்பாக முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் என்போரைச் சொல்லலாம். ஆதலின், சங்கு பொறிக்கப்பட்ட காசுகள் இவர்கள் காலத்துக் காசுகளாக இருக்கலாம். வழிவழியாக வரும் நந்தி இலச்சினைக்குப்பின் தாம் மேற்கொண்டசமயத்தைக் குறிக்கச்சங்கு சக்கரம் இவற்றைக் காசுகளின் பின்புறத்தில் பொறிக்க இவ்வைணவ அரசர் விழைந்திருத்தல் இயல்பே அன்றோ?

(5) நண்டு, ஆமை, கப்பல் முதலியன பொறிக்கப்பட்ட காசுகள் பல்லவரது கடல் வாணிபச் சிறப்பைக் குறிப்பன ஆகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.90.