பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பல்லவர் வரலாறு


மகாப்பிடுகு[1] நயபரன், விக்ரமன், கலகப் (போர்) பிரியன், மத்தவிலாசன், அநித்தியராகன்[2] சங்கீரண சாதி, நரவாகனன். உதாரசித்தன், பிரகிருதிப் பிரியன், அலுப்தகாமன்.[3] நிரபேக்ஷன் (ஆசையற்றவன்) முதலியன. பல தெலுங்குப் பட்டங்கள் இருத்தலையும் குண்டுர்க் கோட்டத்தில் ‘சேஜர்லா’ என்னும் இடத்தில் இவன் கல்வெட்டுக் காணப்படலையும் நோக்க, இவன் கிருஷ்ணையாறுவரை ஆண்ட பேரரசன் என்பது நன்கு விளங்குகிறது.

மகேந்திரன் வளர்த்த கலைகள்

மகேந்திரவர்மன் நாகரிகக் கலைகளான இசை, நடனம், சிற்பம், ஒவியம், நாடகம் இவற்றை நலமுற வளர்த்தவன், புதுக்கோட்டைச் சீமையில் உள்ள இவன்கல்வெட்டுகளே இவற்றை விளக்கவல்லன. சித்தன்னவாசல் குகைக் கோவில் இவன் காலத்தது. அதில் உள்ள காரைச் சுவர்க்கோலங்கள் (Farcoes) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு ஓவியக் கலையை உலகிற்கு உணர்த்தும் ஆற்றல் பெற்றுள்ளன. அவற்றைக்கண்டு வியவாத ஆராய்ச்சியாளர் இல்லை; ஒவியத்திறவோர் (நிபுணர்) இல்லை. அங்கு ஓவியக் கலையில் நடனக்கலையை உணர்த்தலே பின்னும் சிறந்ததாகும். யாழோர் (கந்தருவ) நடனமாதர் இருவர் நடிப்பைக் குறிக்கும் ஓவியங்களே கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பனவாகும். அக் கோவில் சமணர் கோவிலாதலின் தீர்த்தங்கரர் உருவச் சிலைகள் காண்கின்றன. அவற்றால் அக் காலச் சிற்பக்கலை உணர்வை நன்குணரலாம். இங்ஙனம் சித்தன்னவாசல் குகைக்கோவில் ஓவியம், சிற்பம், நடனம் என்னும் மூன்று சிறந்த கலைகளைத் தெளிவாக உணர்த்தும்


  1. பகைவர் மேல் இடிபோலப் பாய்பவன்.
  2. நடன இசைக் கலைகளின் அறிஞன்.
  3. 'கலப்புப் பிறவியுடையவன்-தந்தை பல்லவன், தாய்தமிழ்ப் பெண் ஆக இருக்கலாம்’ என்பவர் திரு. பி.டி. சீனிவாசா ஐயங்கார் Vide his"pallavas’ part II, p.13. இது தவறு. ‘சங்கீரணம்’ என்னும் தாளவகைகளைப் புதியனவாகக் கண்டுபிடித்தவன் என்பதே இதன் பொருள்.