பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

பல்லவர் வரலாறு



காண்கின்றன. ஒரு மண்டபம் மகேந்திரன்தூண்களைக் கொண்டது. அம்மண்டபத்தில் இரண்டு வரிசைத் தூண்கள் இருக்கின்றன. மண்டபத்தை அடுத்துச் சில அறைகள் காணப்படுகின்றன. ஒன்று - மிகச்சிறிய அறை அது பூசை அறை போலும்! அதனை அடுத்துள்ள அறை இருண்டது. அதன் ஒரு மூலையில் சுரங்கம் ஒன்று படிக்கட்டுகளை உடையதாக இருக்கிறதாம். அச் சுரங்கம் கயிலாசநாதர் கோவிலுக்குச் செல்கிறதாம். மற்றொரு மண்டபம் இடிந்தது. அதில் உள்ள தூண்கள் ஐவகைப்பட்டவை: பல்வேறு காலத்தவை. மண்டபக்கூரை கருங்கற்களால் ஆனது. அதன்மீது செங்கல் சுண்ணாம்புத் தளம் இடப்பட்டுள்ளது. இப் பல்லவர் மேடு அகழப்பெறும் நாளே பல்லவரைப்பற்றிய் நற்குறிப்புகள் கிடைக்கும் நன்னாள் ஆகும். இம்மேடு அரசாங்கத்தார் பாதுகாவலில் இருப்பது போற்றத்தக்கதாகும்.

திருமேற்றளி என்பது பிள்ளைப்பாளையத்தில் இருக்கின்றது. இக்கோவில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றதாகும். இக்கோவிலில் இருந்த திருமால் சம்பந்தர் பாடல் கேட்டுச் சிவலிங்கமாக உருமாறினார் என்பது வரலாறு. இக்கோவிலைச் சேர்ந்த மடம் ஒன்று இருந்தது. அதற்குத் தந்திவர்மன் காலத்து முத்தரையன் ஒருவன் தானம் செய்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[1]

கச்சிநெறிக் காரைக்காடு: இஃது அப்பர். சம்பந்தர் பாடல்கள் பெற்றது. எனவே, இதுவும் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில் ஆகும். இஃது இன்று ஊருக்கு வெளியே இருக்கிறது. ஆயின் பல்லவர் காலத்தில் ஊருக்குள் இருந்திருத்தல் வேண்டும்.

இங்ஙனமே ஒனகாந்தன்தளி, என்னும் சிறு கோவிலும் ஊருக்குச் சிறிது அப்பால் உள்ளது. அக் கோவில், கயிலாசநாதர் கோவில், மேற்றளிக் கோவில் இவை மூன்றும் ஏறத்தாழ ஒரே வரிசையில் உள்ளதை நோக்க, மேற்றளி பல தெருக்கட்கு இடையில் இருத்தலையும், மற்ற இரண்டும் வயல்கட்கிடையே இருத்தலையும்


  1. 89 of 1921.