பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பல்லவர் வரலாறு



பேரரசு மற்றொன்று பல்லவர் பேரரசு, சாளுக்கியர் வடக்குத் தெற்காக விந்தமலை முதல் துங்கபத்திரை வரை, கிழக்கே கிருஷ்ணை கோதாவரி யாறுகட்கிடைக்கப்பட்ட நிலம் வரை தங்கள் பேரரசை நிலைப்படுத்தி இருந்தனர். இச்சாளுக்கியப் பேரரசை நிலை நாட்டியவன் இரண்டாம் புலிகேசியை ஆவன். அவன் முதலில் மகேந்திரவர்மனாலும் பின்னர் நரசிம்மவர்மனாலும் தோற்கடிக்கப் பட்டுத் தலைநகரையும் இழந்த செய்தி முன்னரே விளக்கமாகக் கூறப்பட்டதன்றோ? அவனுக்குப் பின் அவன் மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆண்டான் எனினும், வாதாபி வெற்றிக்குப் பின் பல்லவ அரசன், பகைவர் பயமின்றி நாட்டை அமைதியாக ஆண்டு வந்தான்; தந்தை விட்டுச்சென்ற கோவிற் பணிகளைக் குறைவறச் செய்தான்.

(2) கங்கர் கிருஷ்ணையாறு முதல் காவிரியாறு வரை பல்லவப் பேரரசு நிலைத்திருத்தது. அதற்குமேற்கே முற்சொன்ன பூவிக்கிரமன் கங்க நாட்டை (கி.பி.608-670) ஆண்டு வந்தான்.

(3) சேரர்: கங்க நாட்டுக்குத் தெற்கே சேரர் சிறப்பின்றிப் பாண்டியர்க்கு அடங்கிப் பெயரளவில் அரசராக இருந்து ஆண்டு வந்தனர்.

(4) களப்பிரர் சோழநாட்டின் பெரும் பகுதி (காவிரியாறு வரை) பல்லவப் பேரரசில் கலந்து விட்டமையால், சிம்மவிஷ்ணு காலத்திருந்தே களப்பிரர் வலிகுன்றிச் சிற்றரசர் ஆகிவிட்டனர். அவர்கள் தஞ்சாவூர், கொடும்பாளுர் முதலிய இடங்களில் முறையே பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசராகவும் பாண்டியர்க்கு அடங்கிய சிற்றராசராகவும் இருந்து வந்தனர்.

(5) சோழர்: சோழர் சிற்றரசராக இருந்து திருவாரூர், உறையூர் உள்ளிட்ட பகுதியை ஆண்டு வந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்தும் அவரிடமிருந்து பெண் பெற்றும் உறவு கொண்டாடி வந்தனர்.