பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

பல்லவர் வரலாறு



இவன் திருச்சிராப்பள்ளிக் கடுத்த திருக்கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன்; திருவிடை மருதூரிற்கோவில் திருப்பணி செய்துள்ளான். இவன் காலத்தில் திண்டிவனம் கூற்றத்தில் ‘திகைத்திறலார்’ என்றவர் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டினார், நந்திவர்மன் மனைவி யான் மாறம் பாவையார் தஞ்சையை அடுத்த நியமம் என்னும் சிற்றுாரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர் 5 நாழியும், அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன் அளித்தான்.மேலும் இவ்வம்மை செய்துள்ள திருப்பணிகள் பல. இவள் கணவனான கழற்சிங்கன் காவேரிப்பாக்கத்துக்கு ‘அவனி நாராயணசதுர்வேதி மங்கலம்’ என்ற தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக அளித்தான். இங்ஙனம் மூன்றாம் நந்திவர்மன் செய்த தேவதானங்கள் பல; விடுத்த பிரமதேயங்கள் பல; செய்தகோவில் திருப்பணிகளும் பல. இவனுடைய சிற்றரரும் பிறரும் செய்த அறப்பணிகள் பல. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திரு ஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வழுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான்.[1] நந்திவர்மன், பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு அவ்வூரையே தேவதானமாக விட்டான்[2] ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவில் நந்தா விளக்குக்காகப் பொன் அளித்தான்.[3] ஒருவன் செந்தலை - சுந்தரரேசுவர் கோவிலுக்கு நிலமளித்தான்[4] திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றுார்கள் தேவதானமாகவிடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஒதுவார் உள்ளிட்ட பல பணி செய்வோர்க்கு 2000 காடி நெல்லும், 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன.[5] ஒருவன் திருப்பராய்த்துரையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[6] ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தாவிள்க்குகட்கும் நெய்க்குமாக நிலமளித்தான்.[7]


  1. 347 of 1914.
  2. S.I.I. Vol.1 p.567.
  3. 52 of 1895.
  4. 11 of 1899,
  5. S.I.I. Vol. III p.93
  6. 180 of 1907.
  7. Ep.Ind. Vol.II p.224.