பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழ் இலக்கியக் கதைகள்

"இல்லையே. ஒன்றுமில்லை...” என்று ஏதோ மழுப்பி விட்டு மறுபடியும் சிரிக்க முயன்றார் வடுகநாதர். எங்கோ வீட்டின் ஒரு மூலையில் அழுகையோடு இலேசாக விசும்பும் ஒலிகள் புகழேந்தியின் காதில் அரைகுறையாக விழுந்தது. புலவர் தயங்கினார். வடுகநாதர் இந்தக் குறிப்பை உணர்ந்து கொண்டாரோ என்னவோ, எங்கோ எழுந்து போய்விட்டு வந்தார். இப்போது ‘விசும்பல்’ ஒலி கேட்கவில்லை.

விருந்து முடிந்தது. புகழேந்திப் புலவர் தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வடுகநாதர் அடக்க ஒடுக்கத்தோடு நின்றவண்ணம் இருந்தார். சற்று நேரத்தில் புகழேந்திப்புலவர் விடை பெற்றுக் கொண்டார்.

வடுகநாதர் வீட்டு வாசற்படியை விட்டு இறங்கிநாலு எட்டு நடந்திருப்பார். பக்கத்தில் ஒரு வீட்டிலிருந்து வந்த பேச்சொலி தெளிவாக அவர் காதில் விழுந்தது. .

“என்னதான் வள்ளலாக இருக்கட்டுமே! அதற்காகத் தம்பி இறந்து போனால் அவன் பிணத்தையும் மூடி வைத்து விட்டு விருந்திட வேண்டுமா என்ன?”நெருப்பாகப் பாய்ந்து தாக்குவது போலிருந்தது புலவருக்கு வடுகநாதரின் வள்ளன்மைத் தியாகம் எவ்வளவு பெரிது என்று அளவிட முடியாமல் தவித்தது அவர் மனம். பயங்கரமான ஆனால், பண்பாடு என்ற பிடிவாதம் பொருந்திய வடுகநாத வள்ளலின் தியாகத்தைப் பாட்டாகப் பாடியவாறே நடந்தார் புகழேந்திப் புலவர்.

தன்னுடன் கூடப் பிறந்த
சகோதரத் தம்பி உயிர்
அந்நிலை மாண்டது தோன்றாமல்
மூடிவைத்து அன்னமிட்டான்
மன்னவர் போற்றிடவாழ்
செங்கலங்கை வடுகனுக்குக்
கன்னனும் சோமனுமோ
இணையாகக் கழறுவதே"