பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4சீவக சிந்தாமணி


யுள்ளமை, சங்க இலக்கியப் பாடல்கள் அவற்றின் உவமை மரபுகள் வருணனைகள் இதில் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.

எனவே சீவக சிந்தாமணி பழந்தமிழ் இலக்கிய மரபுகளைக் காத்துத்தரும் ஒரு பெட்டகம் என்று கூறலாம். காலத்தில் முற்பட்டது என்பதால் மொழி நடை சற்றுப் பொருள் உணர அரியதாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் விளக்கவுரை தந்துள்ளார்.

நச்சினார்க்கினியர் தரும் செய்திகள் மிகவும் அரியன. பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய இப்பேராசிரியர் இதற்கும் உரை தந்திருப்பது பல அரிய வழக்குகளை அறிய உதவுகிறது.

இதனை உரைப்படுத்தி இதன் கதையை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சியே இது.

கதை சுவை மிக்கது; வீரகாவியம், இதில் கூறப்படும் நீதிக் கருத்துக்கள் அருமையானவை; வாழ்க்கைக்குப் பயன்படுபவை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள் தரும் நீதிகளை இந்நூல் ஆங்காங்குத் தருகின்றது. அவற்றில் இல்லாத நீதிக் கருத்துகளும் புதுமையாக இதில் தரப்படுகின்றன.

எனவே இது உரைநடையாக்கம் செய்வதால் தமிழ்ப் புதையலை வெளிக் கொணரும் பணி செய்ததாக ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.

இதனை நேர் கவி பெயர்ப்பாக எழுதினால் அது பொழிப்புரையாகுமே அன்றி உரை நடையாக்கம் ஆகாது. எனவே இதன் உள்ளடக்கமும் செய்திகளும் சிதையாமல் அதற்கு வடிவம் தரவேண்டிய தேவை ஏற்பட்டது.