பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

25

கொள்ளும் வாய்ப்பினையும் அந்த வீரன் பெற்றுவிட்டான். சிறந்த ஓட்டக்காரன் என்ற புகழையும் பெற்றிருந்த அந்த வீரன், அந்த ஆண்டு மாரதான் ஓட்டத்தினை அவன் தான் வெல்வான் என்ற நம்பிக்கையையும் பெருவாரியாகப் பெற்றிருந்தான்.

லண்டன் மாநகரத்தில் நடந்த பந்தயத்தில் மாரதான் ஓட்டப்பந்தயம் தொடங்கியது. லண்டன் மாநகரத்து மக்களுக்கெல்லாம் அந்த 22 வயது இளைஞன்மீது அளவிலா அன்பு இருந்ததற்குக் காரணமும் இருந்தது. இங்கிலாந்து நாட்டின் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் என்பவரைப் போன்ற முகச் சாயல், மீசை அமைப்பு, உடல் தோற்றம் கொண்டிருந்ததும், ஒரு காரணமாகும். அந்த இளைஞன் பெயர் டோரண்டோ பியட்ரி.

ஓட்டம் தொடங்கி, முடியக்கூடிய நேரம். அந்தப் போட்டி மாரதான் ஓட்டமாகும். மக்கள் குழுமியுள்ள அரங்கத்தில் ஒரு சுற்றுடன் ஓட்டம் முடிய வேண்டும் என்பதும் ஒரு விதி. டோரண்டோவும் முதல் மனிதனாக 26 மைல் துாரத்தை ஓடி முடித்துவிட்டு, அரங்கத்துள் நுழைந்துவிட்டான்.அங்கிருந்த அத்தனை பேரும் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள். ஆனால், விதி அங்கு வேறுவிதமாக விளையாடிக் கொண்டிருந்தது.

வலது புறமாக ஓடவேண்டியவன், தவறாக இடது புறமாக ஓடத் தொடங்கிவிட்டான். கொஞ்ச துாரம் சென்ற பிறகுதான், மக்கள் கூட்டம் கூச்சல் போடத் தொடங்கியபோதுதான், அவனுக்குப் புரிந்தது. தவறைத் திருத்திக்கொண்டு, திரும்பி சரியான பாதைக்கு வந்து ஓட ஆரம்பித்தான்.

வி. உ.-2