பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

விளையாட்டு உலகம்

இதுவரை இப்படி ஒரு சாதனையை யாரும் செய்ததில்லை என்று சாதித்த அந்த மாவீரனின் பெயர் ஜிம்தோர்ப்.

‘ஏன் தன்னுடைய தங்கப் பதக்கங்களைத் திருப்பிக் கேட்கின்றார்கள்?’ என்று விவரம் புரியாமல் விழித்தான் ஜிம்தோர்ப். தங்கப் பதக்கங்களை தனக்கு அணிவிக்கும்போது, ஸ்டாக்ஹோமில் நடந்த 5வது ஒலிம்பிக் பந்தயங்களை வேடிக்கைப் பார்க்க வந்த அத்தனை பேருமே எழுந்து நின்று மாியாதை செலுத்திய காட்சியும், அந்த மாவீரன் மனக்கண் முன்னே வந்து நின்றது.

தங்கப் பதக்கங்களுடன் தன் தாயகமான அமெரிக்கா வந்து சேர்ந்தபோது, அமெரிக்க நாடே முன்னெழுந்து வந்து நின்று மலர்மாரிப் பொழிந்தது போல, வாழ்த்துக்களைப் பொழிந்து வரவேற்ற காட்சியும் அவ்வீரன் நினைவுக்கு வராமல் இல்லை. இன்பம் தராமல் இல்லை.

இந்த நினைவுகளுக்குள்ளேதான், ஏன் தன்னிடமிருந்து தங்கப் பதக்கங்களைக் கேட்கின்றார்கள் என்ற வினாவும் எழுந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதுவும், தங்கப் பதக்கங்களைப் பெற்று ஓராண்டு கழித்து ஏன் கேட்க வேண்டும் என்பதுதான் அந்த வினாவுக்குள் கிளைத்தெழுந்து தொடர்ந்த வினா, அவனது ஆச்சரியத்தை மேலும் விரட்டியது.

அமெரிக்க இந்தியனான ஜிம்தோர்ப்பின் வெற்றி, அங்கிருந்த ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை. வேப்பங்காயாகக் கசந்தது என்றாலும் வெற்றியையும், புகழையும் குறுக்கே விழுந்து தடுக்க முடியவில்லை. அதனால்,