பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

விளையாட்டு உலகம்

முதன் முதலாக 100மீட்டா் ஓட்டம். உலகசாதனை நேரம் 11 வினாடிகள். அடுத்தது 200 மீட்டர் ஓட்டம் அதிலும் தங்கப் பதக்கம். 400 மீட்டர் துாரம் ஓடுகின்ற தொடரோட்டம். அதிலும் வென்று தங்கப் பதக்கம். மூன்று தங்கப் பதக்கங்களை கழுத்தில் அணிந்து கொண்டு, உலகம் போற்றும் உன்னத வீராங்கனையாக வந்தாள் அந்தப் பெண்.

ரஷ்ய நாட்டினரும் ‘ஒலிம்பிக் ராணி’ என்று போற்றிப் புகழும் வண்ணம் புகழ் பெற்ற வீராங்கனை வில்மா ருடால்ஃப் என்பது அவள் திருநாமம். விரைவோட்டத்தில் இவ்வளவு சிறப்பாக யாரும் ஓடியதில்லை என்று பெயரெடுத்து, பெற்றோர்களையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திய வில்மாவின் வாழ்க்கையைப் பாருங்கள்.

அவள் தேர்ந்தெடுத்தப் பாதை சிறந்த பாதை. விளையாட்டுத் துறையான அந்த ஒப்பற்றப் பாதையில் நடந்தாள். அவளது பயணம் சீராக, சிறப்பாக, பாா்த்தவர்கள் புகழ்கின்ற பயணமாக அமைந்தது. உலகப்புகழ் பெற்றாள். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாகத் திகழ்கிறாள்.

ஒருவரின் புகழுக்கு பணமோ, பதவியோ, குடும்பப் பாரம்பரியமோ மட்டும் உதவாது. உயர்ந்த லட்சியமும் உண்மையான உழைப்பும், பண்பான பயணமும் பாதையுமே வெற்றி நல்கும் என்று வரலாறு கண்ட வில்மா ருடால்ஃபை நினைத்துக் கொள்வோம். விளையாட்டுத் துறைதரும் சிறந்த பாதைக்கேற்ற பயணத்தை நாமும் தொடர்வோம். பயன் பெறுவோம்.