பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை எழுதியிருக்கும் முறை தலைப்பில் குறளைக் கொடுத்திருக்கிறோம் அதைத் தொடர்ந்து அந்தக் குறளுக்குரிய சொற்களின் பொருள் விளக்கம் தந்திருக்கிறோம். சொல் விளக்கம் என்ற பகுதியைத் தந்து, ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பல பொருள்களில், பொருத்தமான புதுப்பொருளைத் தெரிந்து எடுத்து, புதிய உரையைத் தெளிவாக்கியிருக்கிறோம். பாரினில் புகழ்பெற்ற பரிமேலழகர் உரையை, முற்கால உரை என்று படிப்பவர்களின், பார்வைக்கும், பரிசீலனைக்கும் கொடுத்திருக்கிறோம். அடுத்ததாகத், தற்கால உரை என்ற தலைப்பில், இருபதாம் நூற்றாண்டில், முற்கால உரையைவிட வித்தியாசமாக விளக்கம் தர வேண்டுமென்று விரும்பியவர்களின் தேர்ச்சி பெற்ற உரை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக், கற்பவர்களின் கருத்துக்கு இதம் சேர்த்திருக்கிறோம். மூன்றாவதாகப், புதிய உரை என்று எனக்குள் ஏற்பட்ட, எண்ண எழுச்சியின் வெளிப்பாட்டைச்சுருக்கமான உரையாகச் சொல்லி இருக்கிறேன். புதிய உரையைத் தொடர்ந்து புதிய உரை எழுந்ததற்கான சூழல்; சொல்லிய புதிய உரைக்கு, தெள்ளிய விளக்கம், இலக்கியத்தேடல்கள், அந்தக் குறிப்புகள் கொடுக்கின்ற உறுதிப்பாடுகள், குறிப்பிட்ட குறளை எவ்வாறு மேன்மைப் படுத்துகிறது என்பதாக விளக்கம் பகுதி அமைந்திருக்கிறது. வாசகர்கள் எந்த விதக் குழப்பமுமின்றி, புதிய உரையை சுவைத்துப் படித்து ரசித்து மகிழ இத்தகைய பாகுபாட்டு முறை பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.