பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



21. நன்னூலும் நடைமுறை
இலக்கணமும்

இலக்கணம் என்றால் என்ன?

இயற்கையாக - தானாக ஓடும் ஆறு, கண்டபடி ஓடி எதையும் சிதைக்காதவாறும் அதன் நீரும் வீணாகாதவாறும், இடைக் காலத்தில் மக்களால் செயற்கையாக இரு பக்கமும் கட்டப்பட்ட கரைகள் போன்றதாகும் மொழிக்கு இலக்கணம். இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பது அறிந்த செய்தி. மக்களின் பேச்சு வழக்குதான் இலக்கியமாகும். அப்பேச்சு வழக்கு பின்னர் எழுத்து வடிவம் பெற்றது.

பேச்சு வழக்கு, தொடக்கத்தில் கரையின்றி ஓடும் ஆறு போல் ஊருக்கு ஊர் சிதைந்து வேறுபட்டிருந்தது. அதையொட்டி எழுத்து வடிவிலும் சிதைவு காணப்பட்டது. இந்நிலைமையை எண்ணிப் பார்த்த அறிஞர் சிலர், கண்டவர் கண்டபடி பேசுதலும் எழுதுதலும் கூடா; மொழியை இப்படித்தான் பேச வேண்டும் - இப்படித்தான் எழுத வேண்டும் - என்று பொதுவான சில விதிகளை அமைத்தனர். ஆறு செவ்வனே ஓடும்படி இடப்பட்ட கரை போல, மொழி செவ்வனே இயங்கும்படி வகுக்கப்பட்ட விதிகளே இலக்கணம் என்னும் பெயர் பூண்டன.

பயன்

மேலும் மேலும் மொழி சிதையாமலும் பிரியாமலும் இருக்க உதவுவது இலக்கணம்; மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணம்; இலக்கியங்களைச் சுவைத்து இன்புற உதவுவது இலக்கணம்,