பொய்மான் கரடு/மாப்பிள்ளை

விக்கிமூலம் இலிருந்து

மாப்பிள்ளை

செம்பவளவல்லியின் தகப்பனார் சிவராமலிங்கக் கவுண்டர் மிகவும் கண்டிப்பானவர். செம்பா அவருடைய மூத்தமகளாகையால் அவளுடைய இஷ்டத்துக்காக இத்தனை நாளும் பொறுத்திருந்தார். இனிமேல் கண்டிப்பாகப் பொறுக்க முடியாது என்று அவருடைய மனையாளிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

"செங்கோடன் வந்து பெண் கேட்கப் போகிறான் என்று காத்திருந்தால் செம்பா கன்னிப்பெண்ணாகவே இருக்க வேண்டியதுதான்!" என்றார்.

"அவன் கேட்காவிட்டால் என்ன! நீங்கள்தான் கூப்பிட்டுச் சொல்லுங்களேன்? சிறு பிள்ளைதானே? தாயா, தகப்பனா-அவனுக்குப் புத்தி சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்?" என்றாள் செம்பாவின் தாயார்.

"அப்படி என்னத்திற்காகப் போய் அவன் தாவாக்கட்டையைப் பிடிக்க வேணும்? நம்ப செம்பாவுக்கு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?"

"இந்தப் பக்கத்திலேயே செழிப்பான வயல் காடும் வற்றாத கேணியும் செங்கோடனுக்கு இருக்கிறது. பணமும் சேர்த்து வைத்திருக்கிறான்..."

"இன்னும் எத்தனை நாளைக்கு அவன் காடும் பணமும் இருக்குமோ. சந்தேகந்தான். கேட்டாயா சங்கதி; செங்கோடனுக்குத் துர்ச்சகவாசம் ஏற்பட்டிருக்கிறது. சின்னமநாயக்கன்பட்டிக்கு யாரோ இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் வந்திருக்கிறார்கள். அவர்கள் துர்நடத்தைக்காரர்கள். அவர்களில் ஒருவன் எங்கேயோ கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் களவாடிக் கொண்டு வந்துவிட்டானாம். அவன் மேலே வாரண்டு இருக்கிறதாகக் கேள்வி..." "அதென்ன, கோ-ஆபரேடிவ் என்று என்னமோ சொன்னீங்களே?"

"அதெல்லாம் விளங்கச் சொல்ல இப்போது நேரமில்லை. பொதுப் பணத்தைக் கையாடிவிட்டு வந்திருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷ்யர்களோட செங்கோடன் சேர்ந்து கொண்டு ஏழெட்டு நாளாய்த் திரிகிறானாம்! இங்கே சோளமும் நெல்லும் காய்கிறதாம்! எப்படி இருக்கிறது கதை?"

"கொஞ்சங்கூட நன்றாயில்லை. நம்ம செங்கோடன் அந்த மாதிரி வழிக்கெல்லாம் போவான் என்று யார் நினைத்தது? நீங்கள்தான் கூப்பிட்டுப் புத்தி சொல்கிறதுதானே?"

"இப்போது நாம் சொல்கிற புத்தி ஏறாது! அந்தக் காவாலிப் பயல்கள் செங்கோடனுடைய பணத்தைப் பிடுங்கிக் கொண்டு அவன் தலையில் கூழைக் கரைத்து விட்டுப் போன பிறகுதான் புத்தி வரும்."

"அப்புறம் அவனுக்குப் புத்தி வந்து என்ன லாபம்?"

"அதனால் தான் அவனை விட்டு விடலாம் என்கிறேன். வேறு மாப்பிள்ளை கையில் வைத்திருக்கிறேன். நீ சம்மதம் கொடுக்க வேண்டியதுதான்."

"நான் சம்மதம் கொடுத்தால் போதுமா? செம்பாவின் சம்மதம் வேண்டாமா?"

"உன்னை யார் சம்மதம் கேட்கிறார்கள்? செம்பா சம்மதத்தைத்தான் சொன்னேன். அவளுக்கு நீ புத்தி சொல்லித் திருப்பவேணும்."

"அப்படி யார் வேறு மாப்பிள்ளை கையில் வைத்திருக்கிறீர்கள்?"

"ஒரு போலீஸ்காரர் புதிதாக வந்திருக்கிறார். ரொம்ப நல்ல மனுஷர். முதல் தாரம் செத்துப் போய் விட்டது. பிள்ளைக் குட்டி கிடையாது. இரண்டாந்தாரமாகக் கேட்கிறார். வயது அதிகம் ஆகவில்லை முப்பத்தைந்து, நாற்பதுதான் இருக்கும். முப்பது ரூபாய் சம்பளம். மேல் வருமானம் நூறு இருநூறு கூட வரும்."

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவுண்டரின் மகன் முத்துசாமி, "அக்காவைப் போலீஸ்காரருக்குக் கட்டிக் கொடுத்தால் ரொம்ப நல்லது. அவரை அழைத்துக் கொண்டு வந்து இந்த ஊரிலே எனக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் பத்து, பத்து அடி முதுகிலே வெளுக்கச் சொல்லுவேன்! வாத்தியார் என்னை இனிமேல் தொட்டு அடிச்சால், போலீஸ்காரரைக் கூப்பிட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிடச் சொல்லுவேன். அக்கா! அக்கா! நீ போலீஸ்காரரையே கட்டிக்கொள்" என்றான்.

எல்லாவற்றையும் சமையல் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த செம்பா வேகமாக நடந்து வந்து முத்துசாமியின் முதுகில் நாலு அறை அறைந்துவிட்டுத் திரும்பிப் போனாள்.

"பார்த்தீர்கள் அல்லவா, உங்க மகளுக்கு வருகிற கோபத்தை!"

"யாருக்கு என்ன கோபம் வந்தாலும் சரி, இன்னும் மூன்று நாள் பார்க்கப் போகிறேன்; அதற்குள் செங்கோடன் வந்து 'செம்பாவைக் கட்டிக்கொடு' என்று கேட்கவேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிடுவேன். அப்புறம் பிரம்மதேவன் வந்தால் கூட மாற்ற முடியாது!" என்றார் சிவராமலிங்கக் கவுண்டர்.

மழையும் மரங்களும் அதிகமில்லாத புன்செய்க்காடுகளில் மாலை நேரம் எப்போதுமே மனோரம்மியமாயிருக்கும். அதிலும் முன்நேர நிலாக் காலமாயிருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. இந்த உலகமே சொர்க்கத்துக்கு ஈடாகிவிடும். செங்கோடக் கவுண்டன் தன் குடிசையை அடுத்துப் போட்டிருந்த வைக்கோற் கட்டின் மீது உட்கார்ந்திருந்தான். வானத்து வைரச் சுடர்களுக்கு மத்தியில் வெள்ளிப் படகு மிதந்து கொண்டிருந்தது. பச்சைச் சோளப் பயிரின் மீதும் தென்னங்குருத்துக்களின் மீதும் நிலவின் கிரணங்கள் விழுந்து தகத்தகாமயமாய்ச் செய்தன. குயில்கள் முறை வைத்துப் பல்லவி பாடின. குடிசைக்குள்ளேயிருந்து அடுப்பில் வெந்த வெங்காயக் குழம்பின் மணம் வந்து கொண்டிருந்தது. இதிலெல்லாம் அதிசயமோ அசாதாரணமோ ஒன்றுமில்லை. எப்போதும் போலத்தான். ஆனால் செங்கோடனுடைய மனநிலையில் மட்டும் ஏதோ ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. அது என்ன மாறுதல்? எழெட்டுத் தினங்களாக அவன் அந்தப் பட்டணத்து மனிதர்களிடம் அதிகமாகப் பழகி வருவது உண்மைதான். அவர்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதர்கள் அல்ல; யோக்கியர்களாகவும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணின் நடத்தையும் பேச்சுங்கூட அவ்வளவாகத் தனக்குப் பிடிக்கவில்லை, ஆயினும் அவர்களைக் கானப் போவதில் அத்தனை ஆவல் ஏன்? அந்தப் பெண்ணின் மோகம் தலைக்கு ஏறிவிட்டதா? மோகம் லாகிரியாக மாறி விட்டதா? அல்லது, அல்லது....செங்கோடனுக்கு ஒரு கேவலமான சந்தேகம் உதித்தது. லாகிரி வஸ்துக்கள் என்று அவன் கேள்விப்பட்டதுண்டு. கஞ்சா என்றும் அபினி என்றும் பேசிக்கொண்டதைக் கேட்டதுண்டு. உண்மையாகவே அத்தகைய லாகிரிப் பொருள் எதையாவது தனக்கு அவர்கள் கொடுத்து விடுகிறார்களோ? இல்லாவிட்டால், தனக்கு ஏன் அவ்வளவு சிரிப்பு வருகிறது! பாட்டுப் பாடக் கூட அல்லவா வருகிறது? வீதியில் நடக்கும்போதே வானத்தில் மிதப்பது போல் ஏன் தோன்றுகின்றது? யாரையாவது பார்த்தால் வாய் சம்பந்தமில்லாத வார்த்தகளை ஏன் உளறுகிறது? தகாத பேச்சு என்று மனசுக்குத் தெரிந்திருக்கும்போதே வாய் ஏன் அப்படித் தாறுமாறாகப் பிதற்றுகிறது?-இது என்ன தனக்கு வந்துவிட்டது? எந்தப் படுகுழியை நோக்கி அவன் போய்க் கொண்டிருக்கிறான்? பொய்மான் கரடு தன்னை வா வா என்று அழைத்து உச்சியில் ஏறச்செய்து கீழே ஒரே தள்ளாய்ப் பிடித்துத் தள்ளிவிடுவதுபோல் ஏன் அடிக்கடி தோன்றுகிறது? ஒருவேளை தன் மூளை தான்... அப்படியொன்றும் பிரமாதமான மூளையில்லை; ஆயினும் இருக்கிற மூளையும் சிதறிக்கொண்டிருக்கிறதோ? தனக்குச் சித்தபிரமை உண்டாகிவிடுமோ? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தன்னை அடைத்து விடுவார்களோ? அப்படியானால் இந்த வயல்களின் கதி என்ன? நெல் பயிர், சோளப் பயிர் என்ன ஆவது? புதைத்து வைத்திருக்கும் பணந்தான் என்ன ஆவது? ஆகா! அந்த மனிதர்கள் தன்னுடைய குடிசைக்குள் புகுந்து ஏன் அப்படியும் இப்படியும் பார்த்துத் திருதிருவென்று விழித்தார்கள்! ஒரு வேளை....

ஏதோ காலடிச் சத்தம் கேட்கவே செங்கோடன் திடுக்கிட்டு அங்குமிங்கும் வளைந்து பார்த்தான். அவனை நோக்கி மிகச் சமீபத்தில் ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது. அது பெண் உருவம். செம்பவளவல்லிதான்! வேறு யார்? அவளைப் பார்த்த அதே நிமிடத்தில் செங்கோடனுடைய உள்ளத்தில் ஞானோதயம் உண்டாயிற்று. வாழ்க்கை என்பது ஒரு பெரிய அலை மோதும் ஏரி; அல்லது காவேரி வெள்ளம் என்று சொன்னாலும் சரி தான். அந்த ஏரி அல்லது காவேரி வெள்ளத்தில் தான் முழுகிப் போகாமல் தன்னைக் காப்பாற்றக்கூடிய தெப்பம் செம்பா. அவளை உடனே தான் பற்றிக் கொள்ள வேண்டும். கூடிய சீக்கிரத்தில் அவளைக் கலியாணம் செய்து கொண்டுவிட வேண்டும். தன்னுடைய பாழுங் குடிசையில் அவள் விளக்கேற்றி வைப்பாள். வாழ்க்கை இருட்டில் அவளே குல தீபமாக விளங்குவாள். அவளால்தான் கடைத்தேறலாம். தன் ஜன்மம் சாபல்யமாகும். தனிமை என்னும் சாபக்கேடு போகும். வீட்டுக்கும் வெள்ளாமைக்கும் அவளால் எவ்வளவோ நன்மையுண்டு.

"வா! செம்பா! வா! ஏது இத்தனை நேரங்கழித்து இருட்டிய பிறகு வந்தாய்? அப்பா அம்மா கோபித்துக் கொள்ளமாட்டார்களா?" என்றான் செங்கோடன்.

அதைக் கேட்ட செம்பா திரும்பிப் பத்து அடி தூரம் நடந்து சென்று தென்னங் கன்றுக்குச் சமீபமாகப் போய் நின்றாள்.

"இது என்ன மாய்மாலம்! இத்தனை தூரம் வந்து விட்டு ஏன் போகிறாய்?" என்றான் செங்கோடன்.

சட்டென்று விம்மல் சத்தம் அவன் காதில் விழுந்தது. உடனே பதைபதைப்புடன் எழுந்து ஓடினான். செம்பாவை அன்புடன் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து தான் உட்கார்ந்திருந்த வைக்கோற் பொதியில் அவளையும் உட்கார வைத்தான்.

"என் கண்மணி! உன் கண்ணில் கண்ணீர் வருவதை நான் பார்த்துச் சகிக்கமாட்டேன்!" என்று சொல்ல அவளுடைய கன்னத்தைத் தூக்கிப் பிடித்துக் கண்ணீரைத் துடைத்தான்.

"என்னதான் சமாசாரம், சொல்! உன்னை உன் அப்பன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டானா?"

செம்பா தேம்பிக்கொண்டே, "அப்படிச் செய்தால் பரவாயில்லையே? என்னைக் கொன்று போட்டுவிட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனால்..." என்று தயங்கினாள். "ஆனால் வேறு என்ன, உன்னை எந்தப் பயல் கொல்லத் துணிவான்? உன் அப்பனாயிருந்தாலும் முடியாது. நீ எனக்குச் சொந்தமானவள்..."

"இப்படித்தான் நீ ரொம்பா நாளாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாய். பேசி என்ன பிரயோஜனம்?"

"பின்னே என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் தான், 'இந்த வருஷம் கழியட்டும்; வெள்ளாமை வீட்டுக்கு வரட்டும்; உடனே கலியாணம் வைத்துவிடலாம்' என்று சொன்னேனே?"

"அதுவரையில் யார் காத்திருப்பார்கள்? இன்னும் மூன்று நாளைக்குள் நீ வந்து கலியாணப் பேச்சை எடுக்கா விட்டால் அப்பா என்னை வேறிடத்தில் கலியாணம் செய்து கொடுத்துவிடப் போகிறார். மாப்பிள்ளை கூடப் பார்த்து விட்டார்!"

"அது யார் அவன்? நான் காதலித்த பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளத் துணிந்து வருகிறவன்! அவனுக்குத் தலையிலே கொம்பா? அவன் என்ன விக்கிரமாதித்ய மகாராஜாவா அல்லது மதனகாமராஜனா?"

"அப்படிப்பட்டவர் யாரும் இல்லை. சின்னமநாயக்கன்பட்டியில் புதிதாகப் போலீஸ்கார ஐயா வந்திருக்கிறாராம். அவர் என்னைக் கலியாணம் செய்து கொள்ளக் கேட்கிறாராம். பரிசத்துக்குப் பணம் கொடுக்கக் கூடத் தயாராயிருக்கிறாராம்!"

செங்கோடன் திடுக்கிட்டுப் போனான். வேறு யாருடைய பெயரையாவது சொல்லியிருந்தால் செங்கோடன், "அவனை விட்டேனா பார்! குத்திவிடுவேன்! கொன்று விடுவேன்!" என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பான். ஆனால் சிவப்புத் தலைப்பாகைக்காரனோடு யார் சண்டை போட முடியும்? அவனுடைய மனத்தில் உடனே ஒரு நிச்சயம் ஏற்பட்டது. அதைச் செம்பாவிடமும் வெளியிட்டான்.

"என் கண்மணியே! என் செல்லக் கிளியே! ஆடும் மயிலே! பாடும் குயிலே! உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா? காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோக நான் பார்த்திருப்பேனா? நாளைக்கே உன் தகப்பனாரிடம் போய்க் கேட்டு விடுகிறேன். கலியாணத்துக்குத் தேதியும் வைத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். நீ இல்லாமல் இனிமேல் ஒரு விநாடி கூட என்னால் உயிர் வாழ முடியாது" என்றான் செங்கோடன்.

இந்த மாதிரி 'கிளியே! மயிலே!' என்றெல்லாம் சொல்வதற்கு அவன் சினிமாக்கள் பார்த்தது மட்டும் காரணமில்லை. கஞ்சாவின் போதை இன்னும் சிறிது இருந்ததும் காரணமாகும். ஆனாலும் செம்பவளவல்லிக்கு அவனுடைய பேச்சு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தது. அவளுடைய ஆனந்தத்தைச் செய்கையினாள் காட்டினாள். இருவரும் சிறிது நேரம் கரை காணாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தார்கள். ஏதேதோ அர்த்தமில்லாத வார்த்தைகளைப் பேசினார்கள். ஆனால் அந்த அர்த்தமில்லாத வார்த்தைகள் அமுதத்தைப்போல் இனிமையாக இருந்தன. சட்டென்று செம்பா எழுந்து நின்றாள்.

"நான் இனியும் இங்கே இருப்பது நியாயம் இல்லை. வீட்டுக்கு ஓடவேண்டும். அப்பாவும் அம்மாவும் அம்மன் கோயிலுக்குப் போன சமயம் பார்த்து வந்தேன். அவர்கள் திரும்புவதற்குள் நான் திரும்பிவிட வேண்டும்."

செங்கோடன் தடுத்த போதிலும் அவள் கேட்கவில்லை.

"அப்படியானால் நான் கொஞ்ச தூரம் வந்து உன்னை ஊர் அருகில் கொண்டு விட்டு வருகிறேன்!" என்று செங்கோடனும் எழுந்தான்.

இருவரும் நெல்வயல் வரப்பின் வழியாக நடக்கத் தொடங்கினார்கள். பத்து அடிகூட அவர்கள் நடந்திருக்கமாட்டார்கள்.

"ஐயோ! அதோ பார்!" என்று செம்பா சுட்டிக் காட்டினாள். அந்தத் திசையைச் செங்கோடனும் உற்று நோக்கினான்.

சோளக் கொல்லையில் சலசலவென்று சத்தம் கேட்டது. முதலில் ஒரு நாய் தென்பட்டது. அது 'லொள்' என்று குரைத்து ஒரு தடவை பயங்கரமாக உறுமிற்று. அந்த நாயின் பின்னால் சோளப் பயிருக்கு மேலே ஒரு போலீஸ்காரனின் தலைத் தொப்பி தெரிந்தது. அவன் தோளில் சாத்தியிருந்த துப்பாக்கியின் மேல்முனையும் பயங்கரமாய்க் காட்சி அளித்தது.

செம்பவளவல்லியின் உடல் முழுதும் நடுநடுங்கிற்று. செங்கோடனும் மனங் கலங்கினான். ஐயோ! இது என்ன எதிர்பாராத விபரீதம்! இந்தப் போலீஸ்காரன் இங்கே எதற்காக வருகிறான்? ஒரு நொடிப்பொழுதில் செங்கோடக்கவுண்டனுடைய மனத்தில் பலவிதமான பீதிகள் வந்து மோதின. அவனுடைய கால்கள் மிகவும் தடுமாறின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பொய்மான்_கரடு/மாப்பிள்ளை&oldid=6436" இலிருந்து மீள்விக்கப்பட்டது