பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைப்பதல்ல; நீர்க்குமிழி போல மறைந்தொழியும் என்று மனத்துக்கு ஊக்கம் தரவே இந்தக் குறளைத் தந்திருக்கிறார் வள்ளுவர்" (ப.230). - சான்றோர் பேசும் முறையினைத் திருவள்ளுவர் வாயிலாகத் தெரிவிக்கிறார். 'பிறருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த மட்டும் பேச்சு உதவவில்லை; தன்னை வளப்படுத்தவும் நிலைப்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுகிறது என்பதால், நல்லவை பேசாவிட்டாலும் பரவாயில்லை. அல்லவை பேசாமல் இருந்தால், அதுவே அருமையான வாழ்வை அளிக்கும்" (ப.274) என்று வள்ளுவ உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்த்துகிறார். பேசும் சொற்களை ஆறுவகைப் படுத்துகிறார்: 1. பயனற்ற சொல், 2. பலரும் அறியும் பெருஞ்சொல், 3. இடக்கரடக்கல், 4. நலிந்த சொல், 5. கொஞ்சு மொழியாம் மிழற்றல், 6. இழி மக்கள் பேச்சு (ப. 275). சொற்களின் தரமும் திறமும் அறிந்து பெரியோர் தெளிவுறப்பேசுவர். ஈகை பற்றி எடுத்தியம்பும்போது, 'ஒரு சமுதாயத்திலே வாழ்கிற மக்களை மூன்று நிலைகளாகப் பார்க்கலாம்' என்பர், தொல்காப்பியர் மொழியினைப் பயன்படுத்தி விளக்கம் தருகிறார். “தனக்குத் தாழ்வாக உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிறபோது, கொடு என்று அதிகாரம் செய்வது ஒரு நிலை, தனக்குச் சமமாக் உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிறபோது தா என்று இயல்பான முறையில் கேட்பது ஒரு நிலை. தனக்கு மேலாக உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிறபோது ஈ என்று சொல்லில் குழைவையும் நெளிவையும் காட்டிக் கேட்பது மூன்றாம் நிலை" (ப.320) கள்ளாமை என்பதற்குப் பிறர் பொருளைக் கவரக் கருதாமை என்பது பொருள். கள்ள ஆசாரம் கொண்டதுதான் கள்ளமெய் என்று கூறி, வேசிக் கள்ளர், ஆசாரக் கள்ளர், கும்பிடு கள்ளர், அழுகள்ளர், மாசாலக் கள்ளர் என்று பட்டியலிட்டுக் காட்டும் பேராசிரியர், உடம்பால் களவு செய்யாத மெய் துறவியருக்குப் பெரிதும் தேவை என்பர். கள்ளாமை பேராசிரியர் பார்வையில் கள்ளா மெய் ஆகிறது! அறத்துப் பாலின் முப்பத்தெட்டு அதிகாரங்களுக்கும் புதுமை விரவிய நோக்கும் மதுகைப் போக்கும் கொண்டவராகப் பேராசிரியர் நவராஜ் செல்லையா, எல்லோருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உரை வரைந்துள்ளார். நூலாசிரியரின் மதி நுட்பமும் செயல் திறமும் மனத் திட்பமும் வியக்கத்தக்கவை. பாளையங்கோட்டை பா. வளன் அரசு ,