பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வித்துவான்

ந. சேதுரகுநாதன்
தமிழ் விரிவுரையாளர்,
செ. நா. கல்லூரி.

விருதுநகர்,
29–5-59.


அணிந்துரை

நாட்டுக்கும் மொழிக்கும் இலக்கிய உணர்வுக்கும் உயிரின் அடித்தள உண்மையாக இலங்குவது வரலாறு. அதன் கண் உண்மை உண்மையாகவே மிளிர வேண்டும். பொய்மை பொய்மையாகவே போக்கப்பெறல் வேண்டும். எனவே வரலாற்றைப் பலரும் விரும்பிப் படித்தும் உணர்ந்தும் வரலாற்றுத் தெளிவு உடையவராக ஆவதற்கு மிகப்பல தெளிந்த நூல்கள் நம் தென்னகத்துச் செந்தமிழின் கண்ணே எழுதப்பெறல் வேண்டும். இத்தகைய அவா எனக்குத் தோன்றியதுபோல் பலருக்கும் தோன்றுவது இயல்பே. திரு அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் 'தமிழ் நாடும் மொழியும்' என்ற இந்த நூலைத் தெளிவாக எழுதி வழங்கியுள்ளார்கள்.

தொகுத்துச் சுட்டியும் வகுத்துக்காட்டியும் தெளி பொருள் விளக்கமாகவும் பல்வேறு பேரறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக் காட்டியும் காலவரையறைகளை நிறுவியும் மறுக்க வேண்டிய கருத்துக்களை முறையாக மறுத்தும் பொருள்களைக் கால வரிசையில் நிரல்பெற நிறுத்தியும் இலக்கண இலக்கிய வரலாற்றுடன் நுட்பமாக விளக்கியும் திராவிட மொழிகளின் பொதுவியல்பு புலப்படுத்தியும் எழுதப்பெற்ற இந்த நூல் சொற்பொழிவின் ஆற்றலுடன் அமைந்து விளங்குகின்றது. உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்கும் மாணவர்கட்கும், பொதுவாக வரலாற்றுத் தெளிவுபெற விரும்பும் அறிஞர்க்கும், அரசியற்பணிமனை அலுவற்குத் தேர்வு எழுத விரும்பும் மாளுக்கர்கட்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உதவும் பாங்காக இந்நூல் இலங்குகின்றது. இந்நூலின் ஆசிரியர் இன்னும் இதுபோல் பல திட்ப நுட்பமான நல்ல நூல்கள் எழுதித் தமிழுக்கும் உலகுக்கும் தமக்கும் நற்பயன் விளையும் வண்ணம் இலங்க எங்கும் நிரம்பிய திருவருளை நினைந்து வாழ்த்துகின்றேன்.

ந. சேதுரகுநாதன்