பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தமிழ் நாடும் மொழியும்


வர்மன் உதவினான். மானவர்மன் செய்த இவ்வுதவிக்காக நரசிம்மன் ஒரு கப்பற்படையை அனுப்பி ஈழத்தில் மறுபடியும் மானவர்மன் தனது ஆட்சியை நிலை நாட்டச் செய்தான். மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் இப்படையெழுச்சியைக் குறிப்பிடுகிறது. எனினும் நரசிம்மன் காலத்தில் நெல்லையை ஆண்ட பாண்டிய மன்னனால் இவன் எதிர்க்கப்பட்டனன் எனத் தெரிகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்று சொல்லப்படும் பாண்டியன் நெடுமாறன் ஆவான்.

'தந்தையை ஒப்பர் மக்கள்' என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே.

சீனயாத்திரிகனான யுவான்சுவாங் இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும் அவன் கூறியதாவது:- இங்குள்ள நிலம் வளமும் செழிப்பும் மிக்கது. இங்குள்ள மக்கள் உடலுரமும், கல்விப்பற்றும், உறுதியும் உடையவர்கள். தலை நகராகிய காஞ்சிபுரம் ஆறு கல் சுற்றளவு உடையது. இங்கு 100 புத்தப் பள்ளிகள் உள; 1000 புத்தத் துறவிகளும் உளர். வேறு சமயங்களும் உள. அவற்றுள்ளே திகம்பர சமயம் நன்கு வளர்ந்துள்ளது.

நரசிம்மனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் மகேந்திரவர்மன் பட்டம் பெற்றான். பல்லவ மன்னருள்