பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தமிழ்நாடும் மொழியும்


நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் நல்ல சமணர், நந்தா விளக்காம் சிந்தாமணி எழுதிய திருத்தக்கதேவர் சமணர். நன்னூல் என்பது பவணந்தி முனிவர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. காரிகை என்னும் யாப்பிலக்கண நூலை யாத்தவர் அமிதசாகரர் என்னும் சமணராவார். சின்னுரல் செய்த குண வீர பண்டிதர் சமணரே. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணரால் செய்யப்பட்டவையே. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்ருகிய சூளாமணி சிறந்ததொரு சமணத் தமிழ்க் காப்பியமாகும். முதன் முதலில் தமிழில் நிகண்டுகள் செய்தவர்கள் சமணர்களே. சூடாமணி நிகண்டு என்னும் நூல் இவர்தம் தலை சிறந்த நிகண்டு நூலாகும். இவர்கள் இயற்றிய அந்தாதி, கலம்பகம் போன்ற பல திறப்பட்ட சிற்றிலக்கியங்கள். அனைத்தும் சமண சமயப் பொருள்களையும், சமணப் பெரியோர்களையும் புகழ்ந்து கூறும் சின்னூல்களாகும். மேரு மந்தர புராணம், நரிவிருத்தம், யசோதர காவியம் போன்ற நூற்கள் சமண சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் நன்கு எடுத்துக் கூறுகின்றன. திருநூற்றந்தாதி, திருக்கல்ம்பகம் என்ற இரண்டும் சமணர் போற்றிப் படிக்கும் செந்தமிழ் நூல்களாகும். நாலடியார், அறநெறிச் சாரம், சிறு பஞ்சமூலம் என்பன சமணர்தம் அற நூல்களாகும்.

கடைச் சங்க காலத்திற்கும் தேவார காலத்திற்கும் இடையே வாழ்ந்த சமணர்கள் தமிழகத்தே தம் சமயக் கருத்துக்களைப் பரப்ப எண்ணினர். அதன் காரணமாகத் தோன்றியதே திராவிட சங்கம் என்ற சங்கமாகும். இதனைத் தோற்றுவித்தவர் வச்சிர நந்தியாவார். காலம் கி. பி. 470 ஆகும். அச்சமண சங்க வாயிலாகத் தோன்றிய நூல்களே, பழமொழி, சிறு பஞ்சமூலம், ஏலாதி முதலியனவாகும். இன்னும் பல நூல்கள் சமணரால் இயற்றப்பட்டன. ஆனால் அவையெல்லாம் முற்றிலும் இன்று கிடைக்கப்பெறவில்லை.