பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

விளையாட்டு உலகம்

திட்டம் தீட்டி செயல் புரிந்தவர்கள் இறுதியில் வெற்றி பெற்று விட்டார்கள்.

ஜிம்தோர்ப் தனது தங்கப் பதக்கங்களைத் திருப்பித் தந்துவிட்டான். அவனது பெயர் ஒலிம்பிக் வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. செய்யாத தவறுக்குத் தண்டனை, செம்மையாக விதிக்கப்பட்டு, சிறப்போடு நிறைவேற்றப்பட்டும் விட்டது. தன்னோடு ஆடியவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல், தான் மட்டும் பணம் வாங்கியதாகக் கூறப்பட்ட பழியையும் வேதனையுடன் தாங்கிக் கொண்டான் தோர்ப்.

தங்கப் பதக்கங்கள் இரண்டும், ஜிம்தோர்ப்புக்கு அடுத்து வந்த வீரனுக்குக் கிடைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதற்குரிய வீரன் ஸ்வீடன் தேசத்தவன். அவன் பெயர் வீஸ்லேண்டர் என்பதாகும்.

அவனை அணுகி, 'நீயே வெற்றி வீரன். இந்தப் பதக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கேட்டனர்.

அந்த வீரனோ, தங்கப் பதக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். 1912ம் ஆண்டு ஸ்டாக் ஹோமில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் நான் வந்தது இரண்டாம் இடம் தான். எனக்குரிய பரிசு வெள்ளிப் பதக்கம் தான். என்னையும் பல வீரர்களையும் வென்ற ஜிம்தோர்ப்தான் உலகிலேயே சிறந்த வீரன்.

‘இன்னொரு சிறந்த வீரனுடைய தங்கப்பதக்கத்தைப் பெற்று மகிழ்வதைவிட, நான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தையே மேலாக மதிக்கிறேன். என் உழைப்பில்