பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: துறவிகளுக்கு உணவு முதலியன கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காகவே, மற்றவர்கள் தவம் மேற்கொள்வதைத் தள்ளி. வைத்தாற் போலும். புதிய உரை: ஐம்புலன் நுகர்ச்சியை விரும்பி, தனது துறவு நிலையை மறந்த துறந்தவர்களுக்கு அவர்களது அறிவானது தாழ்ப்பாள் போல தடுத்து நிறுத்துவதுதான் தவமாகும். அதுவே மன ஒருமை உடைமையின் பெருமையாகும். விளக்கம்: உடலுக்கு வெளிப்பகை ஆறு. பேறு, இழவு, நரை, திரை, மூப்பு சாவு என்பவையாகும். மனத்துக்கு உட்பகை ஆறு. காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாச்சரியம். இந்தப் பனிரெண்டும் ஒரு மனிதனைப் பாடாய் படுத்திவிடும். அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக அமைந்து விட்டால், அந்த மனிதன் மீளவே முடியாது. அவற்றின் பிடியில் அடங்கியே அழிவான். துறவறம் பூண்டவர்கள் ஐம் புலன் நுகர்ச்சியில் ஆசைப்படுகிற போது, அவர்கள் தங்களையே மறந்து விடுகின்றார்கள். அப்படி ஐம்புலன்களை ஆட்டுவிக்கும் போகங்கள் 8 என்று கூறுவர். 1. பெண், 2. ஆடை, 3. அணிகலன், 4. உணவு, 5. தாம்பூலம், 6. வாசனைப் பொருட்கள், 7. பாட்டு, 8. மலர் படுக்கையில் உறங்குதல். அன்றாடம் வாழ்க்கையில் எதிர்பார்க்கிற அனுபோகங்கள் இவை. இவற்றில் ஈடுபாடு கொள்ளாமல், இதயத்தை நழுவவிடாமல், எதிர்ப்போராட்டம் நடத்தி, வெற்றி கொள்ளும் வித்தையும் வீரமும் கொண்ட விவேகமான செயல்தான் தவமாகும். அப்படி அவர்கள் தங்களை மறக்கும்போது, யார் வந்து தடுக்க முடியும்? தானே தனக்குப் பகைவனும் நட்டானும் என்பதும், தன்னைத் தலைவனாகச் செய்வானும், தன்னைச் சிறுவனாகச் செய்வானும் தானே தான் என்பதும் உண்மையான மொழியல்லவா!