பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து பொருள் விளக்கம்: அனிச்சம் = விருப்பமின்மையும் முகம் திரிந்து - அதனால் முக மாறுபாட்டுடனும் மோப்ப = (விருந்து படைப்பவர்) சுவாசிக்கிற போதும் நோக்க - பார்க்கிறபோதும்; குழையும் = நெருங்கி உறவாடுகிற விருந்து = விருந்தினர்கள் குழையும் = வாடிப்போவர் சொல் விளக்கம்: அனிச்சம் = விருப்பமின்மை, ஒரு நீர்ப்பூ மோப்பம் = முகர்தல் (பூரகம், இரேசகம் போன்ற) சுவாசித்தல் குழையும் - நெருங்கி உறவாடும், வாடும், மனம் இளகும். முற்கால உரை: அனிச்சப்பூ மோந்த விடத்து வாடும். விருந்து முகம் மாறுபட்டு பார்க்க வாடும். தற்கால உரை: மிக மெல்லிதாகிய அனிச்சப்பூ முகர்ந்து பார்த்தவுடன் வாடிவிடும். ஒருவர் முக மலர்ச்சி வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் முகம் வாடிப்போய்விடும். புதிய உரை: விருப்பமின்மையால் விடுகிற மூச்சுக் காற்றால் அகம் மாறியதால் முகம் மாறிய விழி நோக்கும், நெருங்கி உறவாட வந்த விருந்தை வாட்டிவிடும். விளக்கம்: மனம் மலர்ச்சியாக இருக்கிறபோது இருக்கும் சுவாசம் மணக்கும். வெறுப்பு கொண்ட மனத்தின் மூச்சில் அனல் பறக்கும். முகம் என்பது அகத்தின் வெளிப்பாடு. விழி என்பது முகத்தின் ஒளிப்பேடு. ஆகவே, விருந்தினரைப் பேசித்தான் புண்படுத்த முடியும் என்பதல்ல. சுவாசக் காற்றும், சுழிக்கும் விழியும் போதும். ஆகவே, உடலியல் நிலையைக் காட்டி உளவியல் இயல்பைக் காட்டி, விருந்தோம்பலின் நுண்மையை வன்மையை மிகத் துல்லியமாக பத்தாவது குறளில் வெளிக்காட்டுகிறார் வள்ளுவர்.