லா. ச. ராமாம்ருதம்

விக்கிமூலம் இலிருந்து

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப் பற்றி எழுதுகிறார்: " தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது."


ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிவந்து காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங்கள் கடந்து கடைசியில் களைப்புற்று தன் வீடு திரும்புகிறான். திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அதில் அவன் சுற்றி வந்த உலகம் முழுதையும் கண்டு அவன் ஆச்சரியப்பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக் கிடக்கிறது.


லா.ச. ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப் பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும், பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான். ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள, நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேச கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகில் காலம் உறைந்து விட்டது போலும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்ப பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.


முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவுகளின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலக தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறுதான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம். கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், "ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித்துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபில்லிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா? இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வுகளோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்திய தர பிராமண குடும்ப பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இரூக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப்பட்டவர். லா.ச. ராமாம்ருதம் பிதிரார்ஜிதமாகப் பெற்ற இந்த குறுகிய கதை உலகத்தை அவர் மிகக் கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடமிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம்ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலையில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், பிம்பங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர ப. 9-10).


க.நா. சுப்ரமண்யம் லா.ச. ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி ஒரு விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று க நா.சு சொல்கிறார். ராமாம்ருதமும் இதை சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். " நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப் பற்றித்தான் இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறேன் நான்," என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதிக்கு இணை என்று சொல்லத் தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத் தக்க விசேஷமான புத்தகம். லா.ச. ராமாம்ருதம் பாற்கடலை தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச் செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாக பதிபவர்கள். அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத் தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையான நினைவுகளைச் சொல்கிறது.


இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தாநதி ராமாமிர்தம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்கு சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம் பெறுகின்றன. இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை இன்னும் வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. மற்ற எவரையும் விட, அவரது குடும்ப தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா,கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்களனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ளனர். இவர்கள்தான் அவருக்கு ஆதர்சமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்ப தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதை கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும் கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதை சாதாரணமாகச் சொல்லிவிடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது.


ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம் தான் எவ்வளவு பக்தி உணர்வு கொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சிவசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கி காப்பது போன்று, அதற்கு உயிர் கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும். குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக்கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது)


திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங்கள், நமஸ்காரங்கள், - (எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப்பட்டவை) - எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப்படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாக தொ டர்ந்து வருவதன் இலக்கிய வெளிப்பாடுதான் ராமாமிருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச் சக்தி வாய்ந்ததும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம்தான். இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார், இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.


ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக்கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை, வேதனைகள் தரும் சந்தோஷமும்தான். பெரும்பாலும் பின்னதே உண்மையாகவும் இருக்கும். எல்லாம் தடித்த கோடுகளில் வரையப்பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச் சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான் மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பதுதான் என்றுசொல்கிறார் போலும். இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்றுசொல்வது கடினமாகி விடும். இது ஒரு பிரும்மாண்ட அளவிலான சலனங்களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.


தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்ச பூதக் கதைகள்‘ என்கிறார் ராமாமிர்தம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமான ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்சபூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி. அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம், பெண்ணை அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்த பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத் திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்த குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற்சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதைசொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும். அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனிதமன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மனம ஆராய்ச்சிகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை. பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறி பிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்க துன்பியல் நாடக பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத் தான் அவர்கள் விரைந்து கொண்டிருப்பார்கள். ராமாமிர்தத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசை யில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கிய திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனித பாத்திரங்கள், காவிய ரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்குகளாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போல பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சி போல. தலை விரித்த பெண் கால் சம்மட்டியிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.


ஏன், ராமாமிர்தமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும் போதும் அவர் உணர்வு மேல்நிலைப் பட்ட மனிதர் தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும்போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்த உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல. அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடிவைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்வம்தான் பக்திகொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்வம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும் தெய்வமும். உணர்வு திரும்பிய வெளிச்சப்பாடு, பழைய சாதுவான மனிதன் தான். ராமாமிர்தமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான். அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனைசெய்துகொண்—ருக்கும் மனிதரா இந்த ராமாமிர்தம் என்று வியக்கத் தோ ன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லக்ஷ்மியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்கவில்லை இன்னம். இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாமிர்தமும்.


என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வநிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான்.


கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாமிர்தம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவ்ரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்திலேயே அவற்றை எழுதியது யாரென்று தெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாமிர்தத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கியதுமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப்படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாமிர்தத்திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள். அவரது ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மதுவுண்ட நிலையில் கிறங்கிக் கிடக்கும் வட்டம் அது. ராமாமிர்தத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழிபெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும். ராமாமிருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல.வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாச்சார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாமிர்தம் த்வனி என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமான சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாமிர்தத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து ற்கும். இதன் விளைவு,மொழிபெயர்க்கப்பட்ட ராமாமிர்தம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாமிர்தமாக இருக்கப் போவதில்லை.


ராமாமிர்தத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடையை அவ்வாறு கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதை கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் றைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதை கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக்கூடும். ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் நிழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாமிர்தம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச் செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப்பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம்.நெருப்பு என்று சொன்னால் வாய்வெந்து போக வேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.


திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு லைக்கு உயர்கிறது. குறிப்பாக ரிக்வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசனமும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவியிருக்கும் கவித்வமும். ராமாமிருதம் சமஸ்கிருதம் அறிந்தவரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்ப பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.


ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்சியா மார்க்வேசின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை மச்சுப் பிச்சுவின் சிகரத்திலிருந்து வருவது போல. ஆனால் ராமாமிருதத்தின் எழுத்தில் அது ரிக்வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித்தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாச்சாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவர் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.


ராமாமிருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லி வரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ஃபாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாமிருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ஃபாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக் கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வா சகர் கூட்டத்தை வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட திரும்பி; போகலாம். ஆஃப்ரிக்க மரச் சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990களில் கூட.

குறிப்புகள்[தொகு]

ஆங்கில மூலம்: Indian Literature,No. 138, July-August, 1990 Sahitya Akademi, New Delhi

"https://ta.wikisource.org/w/index.php?title=லா._ச._ராமாம்ருதம்&oldid=26733" இலிருந்து மீள்விக்கப்பட்டது