பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

187

கூடிநின்ற பெண்களெருக் கொள்வதற்குக் கூடையெடுத்
தோடிவந்தார் நீபார்த்தா யோ!"

-தனிப்பாடல்

மிருதங்கத்தின் முதுகில் தான் அடித்ததை விடத் தன் முதுகில் யாராவது பலமாக ஓங்கி அடித்திருந்தால் கூட இவ்வளவு அவமானம் ஏற்பட்டிராது ‘கற்றுக் குட்டிக்கு’ புலவர் தம் வார்த்தைகளாலேயே மிருதங்கக்காரனின் மானத்தை வாங்கிவிட்டாரே.

63. மருந்து மரம்

பிறருக்குக் கொடுத்து மகிழ்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய பேறாகக் கருதின காலம் ஒன்று இருந்தது. ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று கொடைக்குச் சட்டம் வடித்திருந்த பொற்காலம் இப்போது பழங்கதையாகி விட்டது. இப்போது கொடுக்கிறவர்கள் மிகக் குறைவு வாங்குகிறவர்கள் தாம் அதிகம். ஆசைகளும் தேவைகளும் பெருகி ஒவ்வொருவரும் தன்னைத்தானே திருப்தி செய்து கொள்ள முடியாத காலத்தில் இன்று நாம் வாழ்கிறோம்.கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையை விடச் சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையே இன்று அதிகமாகியிருக்கிறது.

பிறருக்குக் கொடுத்து மகிழ முடியாத நிலையைத் தன் வாழ்வின் பயனற்ற காலமாகக் கருதிக் காட்டுக்கு ஓடின மனிதன் ஒருவனைப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளப்போகிறோம். பழைய நாளில் அறம் என்று கூறப்பட்ட ஒழுக்கம் கடமையாகக் கருதப்பட்டது. இன்றோ, அது மனம் நெகிழ்கிற போது தற்செயலாக உண்டாகிற பலவீனமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் அறம்தான் பொதுவாழ்க்கைக்கு வலுத் தரும் பலமாக இருந்தது.அதே அறம் இன்று பலவீனமாகி விட்டதா?