ஞானச் செருக்கு

விக்கிமூலம் இலிருந்து
ஞானச் செருக்கு
எழுதியவர்: நா. பார்த்தசாரதி


1[தொகு]

சமூக சீர்திருத்த வாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது முதிர்ந்தும் பிடிவாதத்தைத் தளரவிடவில்லை அவர்.

எவ்வளவு வேண்டியவர்கள் வீட்டுத் திருமணமாயிருந்தாலும் வரதட்சிணை, சீர்செனத்தி என்று பெண்ணைப் பெற்றவர்களைக் கசக்கி பிழியும் கல்யாணங்களுக்கு அவர் போவதில்லை. அப்படி ஒரு விரதம் வைத்திருந்தார். சம்பந்தப்பட்டவர்களே நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாலும் அத்தகைய திருமணங்களை மதித்துப் போகாமல் புறக்கணித்தார். பெண்ணுரிமை இயக்கத்துக்காக கடந்த முப்பது ஆண்டுகளாக அலுக்காமல் சலிக்காமல் போராடி வந்தார் அவர். இந்தப் போராட்டம் அவரை வெகுஜன விரோதியாக்கி இருந்தது.

"பத்தாயிரம், இருபதாயிரம் என்று விலை கொடுத்து வரதட்சிணைக்கு மாப்பிள்ளை தேடுவது என்பது சந்தையில் காளைமாடு பிடிப்பது போல அநாகரிகமாக நடந்து வருகிறது. இது சாஸ்திரங்களின் படியும் சரி அல்ல, மனிதாபிமானப்படியும் சரியல்ல. பெண்ணடிமைத்தனத்தின் அடையாளங்களில் முதன்மையானது வரதட்சிணை" என்று அவர் முழங்கிய மகாநாடுகளும் கூட்டங்களும் கணக்கில் அடங்காதவை. வரதட்சிணை வாங்கிய கல்யாணத்தில் மறியல் செய்து ஜெயிலுக்குக் கூடப் போய்விட்டு வந்தார்.

இப்படி அவரும் அவரைப் போன்ற சமூக சீர்த்திருத்த வாதிகளும் எவ்வளவோ கரடியாகக் கத்தியும் நாடு திருந்திவிடவில்லை. பழக்கங்கள் மாறிவிடவில்லை. அதுதான் அவரைக் கூடச் சற்றே விரக்தியடைய வைத்தது.

"தன் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுத்து, ரிஸ்ட் வாட்சிலிருந்து பாத்திரம் பண்டம் வரை சகலமும் வாங்கிக் கொடுத்துச் சிரமப்பட்ட ஒரு தாயோ தந்தையோ, அதை மனத்தில் வைத்துக் கொண்டு தன் பிள்ளைக்கு மணமகளாக வருகிற பெண்ணிடம் கருணையாக நடந்து கொள்வதில்லை. அந்தப் பெண்ணணயும் அவளுடைய பெற்றோரையும் கசக்கிப் பிழியவே தயாராயிருக்கிறார்கள். இதை எல்லாம் தவிர்க்க ஒரே வழி படித்த பெண்ணே துணிந்து முன் வந்து 'வரதட்சிணை வாங்கிக் கொள்ளும் எந்த மணமகனையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று மறுப்பதுதான். இப்படி மறுக்கத் துணியாமல் பெண் ஆணுக்குப் பணிந்து பயந்து போகிறவரை சமூகத்தில் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை. நாம் எதிர்பார்க்கிற பெண்ணுரிமையும் கிடைக்கப் போவதில்லை" என்று அவர் கூறிய யோசனையை யாரும் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. உலகம் எப்போதும் போலத்தான் நடந்து கொண்டிருந்தது.

"சுகவனத்துக்கென்ன? பிள்ளையா? குட்டியா? ஒன்றும் இல்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்" என்று அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லாததால்தான் அவர் இப்படி எல்லாம் மேடைகளில் முழங்குவதாகச் சிலர் பேசிக் கொண்டார்கள். யார் என்ன பேசினாலும், எப்படிக் கிண்டல் செய்தாலும் பெண்ணுரிமை இயக்கத்திலும், வரதட்சிணை ஒழிப்பு இயக்கத்திலும் அவருடைய தீவிரம் குறையவே இல்லை. வயது முதிர்ந்த பின்னும் அவரைப் பொறுத்த வரை இளமையின் வேகத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவ்வப்போது சிறு சலிப்பு ஏற்படுவது மட்டும் தவிர்க்க முடியாததாயிருந்தது.

ஒரு சமயம் பக்கத்து வீட்டில் குடியிருந்த சிவன்கோயில் குருக்களின் பெண் குழந்தையான சிறுமி காமு, தெருவில் பாண்டி விளையாடினாள். அப்போது பாண்டி விளையாட்டுக்கான கட்டங்களையும், கோடுகளையும் ஒரு பையன் காலால் அழித்தான். அவனை நோக்கி ஆத்திரத்தோடு, "உங்க மாதிரி திமிர் பிடிச்ச ஆம்பளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாரு!" என்று அவள் பதில் சொன்னதற்காக அவளைப் பாராட்டித் திண்ணையிலிருந்தே கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கிக் கொடுத்திருந்தார், சுகவனம். பெண்ணுரிமை இயக்கத்தில் அவருக்கு இருந்த வெறி காரணமாக, யார் ஆண்களைத் திட்டினாலும், ஆண்களின் கொடுமையைப் புரிந்து கொண்டு திட்டினாலும், புரியாமலே திட்டினாலும் அவர்களுக்கு அவருடைய பாராட்டுக் கிடைத்தது; பரிசும் கூடக் கிடைத்தது.

"மாமா, இப்ப நீங்க எதுக்காகக் கைதட்டினீங்க? எதுக்காக என்னைக் கூப்பிட்டுச் சாக்லேட் வாங்கித் தர்றீங்க?" என்று அன்றைக்கு அந்த அறியாப் பருவத்துச் சிறுமி காமு கேட்ட போது, "உனக்கு அதெல்லாம் இப்பப் புரியாது அம்மா! உன் மாதிரி ஒவ்வொரு பொண்ணும் நெனைவு தெரிந்து வயசு வந்த பின்பும் அந்த மாதிரி தைரியமாக ஒவ்வொரு ஆம்பளைக் கடங்காரனின் கொட்டத்தையும் ஒடுக்கறதுன்னு துணிஞ்சிட்டீங்கன்னா, அன்னியிலேருந்து பெண்குலம் உருப்பட ஆரம்பிச்சுடும்" என்று பதில் சொல்லியிருந்தார் அவர்.


2[தொகு]

பல வருஷங்களுக்கு முன்பு நடந்தது இது. ஆண்களையும் அவர்கள் கொடுமைகளையும் அஞ்சாமல் எதிர்க்கும் பெண்கள் உருவாக வேண்டும் என்பது சுகவனத்தின் ஆசை. நாடு முழுவதும் ஓடியாடி நகரங்களில் சிற்றூர்களிலும், சமயம் வாய்த்த போதெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தார் சுகவனம். பெண்கள் மகாநாடுகளைக் கூட்டித் தீர்மானம் போட்டார். என்ன பிரசாரம் செய்தும் பயன் இல்லை. அவருடைய மனைவியே அவரைக் கேலி செய்தாள்.

"உங்களுக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்? யார் எப்படி வேணும்னாலும் போயிட்டுப் போகட்டும். குடுக்கிறவா குடுக்கிறா. வாங்கிக்கிறவா வாங்கிக்கிறா. நீங்க பிரசாரம் பண்ணி யாரும் எதையும் விட்டுட்டதாகத் தெரியலியே!"

"நான் அதைப் பத்திக் கவலைப்படலே. நாடு பூரா என்னுடைய நல்ல கருத்துக்களை விதைக்கிறேன். எங்கேயாவது ஒரு சின்ன விதை தப்பித் தவறி முளைக்காமலியா போயிடப் போறது?"

"எப்பிடி முளைக்கும்? நீங்க முளைக்கும்னு சொப்பனம் கண்டுண்டு திண்ணையிலே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். உங்க சொந்தத் தம்பியே நீங்க புலம்பறதைக் காதுலே போட்டுக்கலியே! அவரோட மூத்த புள்ளை கல்யாணத்துக்கு இருபத்தையாயிரம் கையிலே, வைரத்தோடு, வெள்ளிப்பாத்திரம், முப்பதுசவரன் நகை, புள்ளைக்கு ஸ்கூட்டர்னு பொண் வீட்டாரைக் கொள்ளையடிச்சார். போன மாசந்தான் நடந்தது. உங்க தங்கை அடுத்த மாசம் தான் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணப் போறா. பொண் பி.காம். படிச்சுப் பாங்க்லே ஆபீஸரா இருக்கா. மாசம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கறா. ஆனாலும் உங்க தங்கை அவளுக்குக் கைநிறைய வரதட்சிணையைக் கொடுத்துத்தான் மாப்பிள்ளையைத் தேடப் போறா. உங்க உபதேசங்களை உங்களோட சொந்தத் தம்பி தங்கைகளே கேட்டுக்கத் தயாராயில்லாதபோது ஊராரா கேட்கப் போறா?"

அவள் சொன்னவை எல்லாம் உண்மைதான். மனைவியை மறுத்துப் பேச அவரிடம் எந்த வாதமும் இல்லை.

"நீங்க சொல்ற லட்சியங்களை நீங்களே கடைப்பிடிச்சு மத்தவாளுக்கு முன்மாதிரியா நடந்து காமிக்கலாம்னா உங்களுக்கு பகவான் குழந்தை குட்டிகளையே குடுக்கலை."

மனைவி இதையும் சிரித்துக் கொண்டேதான் சாதாரணமாகச் சொன்னாள். ஆனாலும் அவருக்கு இது உறைத்தது. ஆசார்ய சுவாமிகளிடம் போய் ஆசி பெற்றுத் திருமணம் செய்யும் பெரிய மனிதர்கள் கூட அவருடைய உபதேசங்களான, 'வரதட்சிணை கூடாது, ஆடம்பரங்கள், ஜானவாசம் எல்லாம் வேண்டாம்' என்ற அறிவுரைகளைப் பொருட்படுத்துவதில்லை. வரவரக் கல்யாணம் என்ற புனித உறவு ஒரு வியாபாரம் போல ஆகிவிட்டது. ஆண், பணத்தின் துணையோடு ஒரு பெண்ணைத் தேடிப் போனால் அது பாவமாகவும், குற்றமாகவும் கருதப்படுகிறது. சமூகப் பழிக்கும் இழிவுக்கும் கூட ஆளாகிறது. ஆனால் ஒரு பெண் எத்தனை அழகியாயிருந்தாலும் அவளுடைய பெற்றோர் அநியாய விலை கொடுத்துத்தான் அவளுக்குக் கணவனைத் தேட வேண்டியிருக்கிறது. அதை யாரும் பாவமாகவோ குற்றமாகவோ கருதுவதில்லை. சமூகமும் பழிப்பதில்லை.

நினைக்க நினைக்க அவர் மனம் குமுறியது. நாட்டில் ஒரு படித்த பெண்ணாவது இதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த மாட்டேனென்கிறாளே! சுயமரியாதையுள்ள, மானமுள்ள, ரோஷமுள்ள, ஒரு புதுமைப் பெண் கூட இன்னும் இங்கே பிறக்கவே இல்லையா? ஒரு புருஷனின் துணைக்காகவும் சுகத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பெண் கொள்ளை விலை கொடுப்பது அவளுக்கே உறைக்கவில்லையா?

இவ்வளவு அவமானமும், பணப் பேரமும், தாழ்வும் ஏற்பட்டும் குனிந்த தலை நிமிராமல் இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு எப்படியாவது புக்ககத்தில் நுழைந்து விடத் தயாராயிருக்கும் பெண்கள் உள்ளவரை இந்நாட்டில் பெண்ணுரிமையாவது வெங்காயமாவது!


3[தொகு]

பெரிய நகரங்களில் பெண்ணுரிமை மகாநாடு என்று போட்டுப் பந்தல் நிறையப் படித்த பெண்களைக் கூடச் செய்து, அவர்களின் உற்சாகமான கரகோஷத்துக்கிடையே முப்பது வருஷமாகத் தாம் முழங்கிய முழக்கங்கள் ஒரு பயனும் அளிக்கவில்லையே என்று எண்ணியபோது சுவனத்துக்குத் தம்மேலேயே வெறுப்பாயிருந்தது; கோபம் கோபமாக வந்தது.

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திரும்புவதில்லையாம்"

என்று பாடிய மகாகவி பாரதியின் புதுமைப் பெண் ஒருத்தியை இந்த இருபதாம் நூற்றாண்டில் தமது எழுபதாவது வயதில் கூட அவரால் எங்கும் காணமுடியவில்லை. மிகவும் ஏமாற்றமாயிருந்தது அவருக்கு. முதுமையும் மனத்தளர்ச்சியும் அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டன. கூட்டங்களுக்குப் போவது குறைந்தது. பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றி முழங்கி வந்த அவர், தமது கொள்கைகளில் எந்தத் தவறும் இல்லை என்று இன்னும் திடமாக நம்பினாலும் நாட்டில் அந்தச் சிந்தனைகள் அறவே முளைக்க மறுப்பதை எண்ணி வெதும்பினார். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் துடுக்குத்தனம் நிறைந்த பேதைச் சிறுமியாயிருந்த போது, 'உங்க மாதிரி ஆம்பிளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாருடா!' என்று ஒரு பையனைப் பார்த்துச் சவால் விட்ட பக்கத்து வீட்டுக் குருக்களின் பெண்ணுக்கு இப்போது கல்யாண வயது. காமு படித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தாள். மாதச் சம்பளம் அறுநூறு வந்தது. ஆனாலும் அவளுக்குத் திருமணம் முடியவில்லை. கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் ரூபாய் வரை தேவைப்பட்டது. பாவம்! குருக்கள் அவ்வளவு தொகைக்கு எங்கே போவார்? சிரமப்பட்டார்; திணறினார்.

அதை எல்லாம் விட வேடிக்கை, படித்துப் பட்டம் பெற்றும் தங்கள் பையனுக்கு வேலை கிடைக்காததால் பெண் வேலை பார்க்கிறாள், பையன் வேலை கிடைக்காமல் சும்மாயிருக்கிறான் என்று கேவலமாகப் பேசுவார்கள். ஆகவே கல்யாணத்துக்கு முன்னால் பெண் வேலையிலிருந்து விலகி விட வேண்டும் என்று குருக்களிடம் நிபந்தனை போட்டிருக்கிறார் ஒரு தந்தை. அது ஒன்று மட்டும் நிபந்தனை அல்ல. கையில் ரொக்கம் பத்தாயிரம், இருபது சவரன் நகை, வைரத்தோடு, பாத்திரம் பண்டங்கள் என்று செலவுள்ள பெரிய பட்டியல் வேறு!

படித்து வேலை பார்க்கத் துப்பில்லாத பையனுக்காக இவ்வளவு சீர் செனத்திகளும் பண்ணி, ஏற்கெனவே தான் பார்த்துக் கொண்டிருக்கிற வேலையையும் விட்டுவிட்டுத் திண்டாடக் காமு தயாராயில்லை. அந்த ஏற்பாடு பிடிக்காததால் கல்யாணம் தட்டிப் போயிற்று. சில பையன்கள் சம்பாதிக்கிற, வேலை பார்க்கிற பெண் தான் வேண்டுமென்று வந்தார்கள். ஆனால் பெண் சம்பாதிக்கிறாள் என்பதற்காக வரதட்சிணை, இருபது சவரன் வகையறாக் கோரிக்கைகளில் எதையும் அவர்கள் குறைத்துக் கொள்ளத் தயாராயில்லை.

இந்த விவரங்களை எல்லாம் மனைவி மூலந்தான் அறிந்து கொண்டார் சுகவனம். அவரைப் பொறுத்த வரை வெளி நடமாட்டமே இல்லாமற் போயிற்று. படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கும் நோயாளியாகி விட்டார் அவர்.

இப்படிப் பக்கத்து வீட்டுக்குச் சுமார் ஆறு மாத காலத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் வந்து பார்த்துத் தட்டிப் போயிற்று. 'காமுவுக்கு ராசியில்லை' என்று கெட்ட பேர் வேறு உண்டாகி விட்டது. படித்த பெண்ணாகிய காமுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தடியன் தடியனாக ஆண் பிள்ளைகள் பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் வந்து இனிப்பு காரம், காபி சாப்பிட்டுவிட்டுத் தாறுமாறாகக் கேள்வி கேட்டுவிட்டுப் பாட்டுப் பாடச்சொல்லி ரசித்துவிட்டுப் போவது ஒரு நடைமுறையாகிவிட்டது.

கண்காட்சியில் விற்பனைக்கு ஊதுவத்திக் கடை வைப்பது போல் இந்தியப் பெண்கள் ஆகிவிட்டார்களே! எவன் வேண்டுமானாலும் வந்து மோந்து பார்த்துப் பேரம் கூடப் பேசிவிட்டு வாங்காமலே போய் விட வசதி இருந்தது. காமு உள்ளூற மனம் குமுறினாள்; கொதித்தாள்.


4[தொகு]

பதின்மூன்றாவது ஆளாக அன்று இன்னொரு பிள்ளை பார்க்க வரப்போவதாகக் குருக்கள் சொல்லியிருந்தார். அலுவலகத்தில் அரை நாள் லீவு போட்டு விட்டுப் பிற்பகலிலேயே வீடு வந்துவிட்டாள் காமு. தாய் காமுவைச் சிங்காரித்தாள். பெண் பார்க்கும் நாடக விழாவுக்குத் தயாராக்கினாள். இனிப்பு காரம், காபி எல்லாம் தயாராயின.

பிளட் பிரஷர், பலவீனம், அசதி எல்லாமாகச் சேர்ந்து அன்று சுகவனத்தை மிகவும் தளரச் செய்திருந்தன. அடித்துப் போட்டது போல் படுக்கையில் கிடந்தார். வீட்டுக்கு வெளியே நடமாட்டம் இல்லாது போய் மாதக் கணக்காகி விட்டது.

மாலை ஏழு மணி இருக்கலாம். படுக்கையருகே யாரோ விசும்பி விசும்பி அழும் ஒலி கேட்டுச் சுகவனம் கண் விழித்தார்.

நன்றாக அலங்கரித்த கோலத்தில் பக்கத்து வீட்டுக் குருக்களின் மகள் காமு கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தாள்.

"மாமா, நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். அப்பா என்னை அடிக்க வரா..."

"ஏன்? நீ என்ன தப்புப் பண்ணினே?"

"ஒரு தப்பும் பண்ணலே மாமா! இன்னிக்குச் சாயங்காலம் என்னை ஒருத்தன் பொண் பார்க்க வந்தான். அவனோட அப்பா அம்மாவும் கூட வந்திருந்தா. எல்லாம் முடிஞ்சு வரதட்சிணை பேரம் பேசறப்போ ஒரு ஸ்கூட்டர் கண்டிப்பா வாங்கித் தரணும்னு அந்தப் பையனே வற்புறுத்தினான்.

"இப்ப உடனே முடியாது. கலியாணம் ஆகட்டும். ஆடிக்கு அழைக்கறப்ப ஸ்கூட்டர் விஷயம் கவனிக்கிறேன்னு அப்பா பணிவாக் கெஞ்சிப் பார்த்தார்.

"அவன் கேட்கலே. இப்பவே வாங்கியாகணும்னு பிடிவாதம் புடிச்சான். இந்தக் கல்யாணத்தையே, அப்பா பரம்பரை பரம்பரையா ஆண்டு அநுபவிச்ச வீட்டை விலைக்கு வித்துத்தான் பண்ணப் போறார். அதுலே ஸ்கூட்டரும் சேர்ந்ததுன்னா அவராலே தாங்க முடியாது. என்னோட போகலே. இன்னம் எனக்கு ரெண்டு தங்கைகள் வேற இருக்கா, எங்க வீட்டிலே.

"நிலைப்படி ஓரமா நின்னு இந்தப் பேரத்தைக் கவனிச்சிண்டிருந்த எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். முடியலை. திடீர்னு முன்னாலே போய் நின்னு, 'அப்படீன்னா நீ ஸ்கூட்டரையே தாலி கட்டிக் கல்யாணம் பண்ணிக்கோடா! எனக்குத் தாலி கட்ட வேண்டாம். போடா வெளியிலே!" என்று கூப்பாடு போட்டு அவங்களை எல்லாம் துரத்திட்டேன்.

"'காரியத்தைக் கெடுத்திட்டியேடீ பாவி! நான் கடனோ உடனோ வாங்கி ஸ்கூட்டரைக் குடுத்துட்டுப் போறேன். நீ ஏண்டி குறுக்கே வந்து பேசினே?' என்று அப்பா கையை ஓங்கிண்டு என்னைத் துரத்தறார். நீங்களே சொல்லுங்கோ நான் செஞ்சது தப்பா மாமா?"

"ஒரு தப்பும் நீ பண்ணலே, குழந்தை. நீ பண்ணினது தான் சரி. உன்னை, இதுக்காக மனப்பூர்வமாப் பாராட்டறேன். இந்தா, இதை வச்சுக்கோ" என்று படுக்கைக்கு அருகே ஸ்டூலில் இருந்த பழக் கூடையிலிருந்து ஆப்பிள் ஒன்றை எடுத்துக் காமுவிடம் கொடுத்தார் சுகவனம்.

அவள் பல வருடங்களுக்கு முன்னால் பேதைப் பருவத்துச் சிறுமியாகத் தெருவில் பாண்டி விளையாடும் போது, 'உன்னை மாதிரி ஆம்பிளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேனா இல்லையா பாரு!' என்று ஒரு பையனிடம் சவால் விட்ட போது கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கியளித்து அவளைப் பாராட்டிய அதே உற்சாகத்தோடு இப்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார் சீர்திருத்தவாதி சுகவனம்.


5[தொகு]

அப்போது அவருடைய மனைவி அவருக்குக் காபி கொடுக்க வந்தாள். சுகவனத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. ஒரே உற்சாக மயம்.

"இதோ பாருடீ காமுவை! நான் தூவிய சிந்தனை விதைகள் எங்குமே முளைக்கலேன்னியே. இங்கே பக்கத்திலேயே முளைச்சிருக்குடி. ஸ்கூட்டர் வாங்கித் தந்தால்தான் தாலி கட்டுவேன்னு சொன்ன பேடிப் பயலைப் பார்த்து, 'நீ ஸ்கூட்டரையே கட்டிக்கோ; போடா'ன்னு மூஞ்சியிலே துப்பிட்டு வந்திருக்கா" என்று மனைவியிடம் காமுவை வியந்து பாராட்டினார். அவர் மனைவி வருத்தப்பட்டாள்.

"ஐயையோ! திமிர் பிடிச்ச பொண்ணுன்னு, கண்டபடி யாரையும் எதிர்த்துப் பேசும்னு கெட்ட பேராயிடப் போறதே!"

"போடீ பைத்தியம்! இது திமிர் இல்லே. இந்தியப் பெண்களுக்கு இப்படி ஒரு ஞானச் செருக்கு வரணும்னு தான் அன்னிக்கே பாரதியார் ஏங்கினார். நானும் ஏங்கினேன். பாரதியாரை விட நான் அதிர்ஷ்டசாலிடி! இதோ என் கண் முன்னாலேயே அப்படி ஒரு பொண்ணை நான் நேரே பார்த்தாச்சு" என்று கூறியபடியே காமுவின் பக்கம் திரும்பி, "நீ கவலைப்படாதே, குழந்தை! பெண்மையின் சுதந்திர உணர்வுகளைப் புரிந்து கொண்டு மதிக்கும் உண்மையான நல்ல ஆண்பிள்ளை ஒருவனைத் தேடி உனக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று உறுதியளித்தார் சுகவனம்.

"ராத்திரிக்குக் கஞ்சியா? கேப்பைக் களியா?" என்று அவருடைய இரவு உணவைப் பற்றி விசாரித்தாள் மனைவி.

"ரெண்டுமே வேண்டாம். வடை, பாயசத்தோடு சமையல் பண்ணு, உடனே இதைக் கொண்டாடியாகணும்" என்று காமுவை நோக்கிப் புன்னகை புரிந்தபடி மனைவிக்கு மறுமொழி கூறினார் சுகவனம்.

(முற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=ஞானச்_செருக்கு&oldid=1526712" இலிருந்து மீள்விக்கப்பட்டது