பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

155

புதருக்கு அப்பால் வழிப் போக்கர்கள் நடந்து செல்லும் சாலை ஒன்றிருந்தது. அந்தச் சமயத்தில் முன்பு சதாசிவ நாவலரோடு அவர் தந்தையிடம், ஒருசாலை மாணாக்கராயிருந்து கற்ற படிக்காசுப் புலவர் அவ்வழியே அவசரமாக எங்கோ போய்க் கொண்டிருந்தார். காட்டுப் புதருக்குள்ளிருந்து காரிகைப் பாடலின் ஒலியைக் கேட்டு வியந்துபோய், மேலே நடக்கத் தோன்றாமல் சாலையில் நின்று விட்டார் அவர், “இதென்ன விந்தை! மக்கள் நடமாட்டமற்ற காட்டிலிருந்து காரிகைப் பாடல் ஒலி கேட்கிறது! இங்கே வந்து யார் இதைப் பாடுகிறார்கள்?” என்று கூறிச் சாலையிலிருந்து புதருக்குள் வந்து பார்த்தார், படிக்காசுப் புலவர்.யாரோ சில பிள்ளைகள் தூதுவளைகாயையும் பறித்துக்கொண்டே பாடலையும் சொல்லி உருப் போடுவதைப் பார்த்தார் அவர். ஆச்சரியம் தாங்கவில்லை அவருக்கு பக்கத்தில் ஓடிவந்து, “பிள்ளைகளே! நீங்களெல்லாம் யார்? காரியத்தையும் செய்துகொண்ட காரிகையையும் மனப்பாடம் பண்ணுகிறீர்களே?” என்று அவர்களைக் கேட்டார்.

“ஐயா! நாங்கள் சதாசிவ நாவலரின் மாணவர்கள்” என்று பதில் கூறினர் பிள்ளைகள்.அதைக் கேட்ட படிக்காசுப் புலவருக்கு மெய்சிலிர்த்தது. தம் நண்பர் சதாசிவ நாவலரின் முகம் நினைவுக்கு வந்தது அவருக்கு அந்தப் பிள்ளைகளைப் பார்த்து, “சதாசிவ நாவலரின் தந்தை எங்களுக்கெல்லாம் தமிழ் கற்பித்தார். சதாசிவ நாவலர் இப்போது உங்களுக்கெல்லாம் தமிழ் கற்பிக்கிறார். நீங்களோ காட்டுக்கும் செடிக்கும் தமிழ் கற்பிக்கிறீர்கள்” என்று. கூறி வியந்து உடனே ஒரு கவிதையைப் பாடினார் படிக்காகப் புலவர்.

கூடும் சபையில் கவிவாரணங்களைக் கோளரிபோல்
சாடும் சதாசிவ சற்குரு வேமுன்உன் தந்தைதம்மாற்
பாடும் புலவர்களானோம் இன்றிச் செம்மற் பட்டிஎங்கும்
காடும் செடியும் என்னோ தமிழ்க் காரிகை கற்பதுவே"

கவிவாரணம் = கவிகளாகிய யானைகள், கோளரி = சிங்கம், சாடும் = வெல்லும்.