பக்கம்:படித்தவள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

51



“பெண் இன்று ஆண்களைப் போல அவதிப்பட வேண்டி இருக்கிறது. முன் நாங்கள் வீட்டில் இருந்தோம்; அவர்கள் பொருள் ஈட்டி எங்களைப் போற்றி வந்தார்கள். ‘மனைமாட்சி’ என்று கூறி எங்களை இல்லத்து அரசி என்று புகழ்ந்தார்கள்; இன்று வினைமாட்சி தேடி இன்மைக்கு அரசி என்று அலைய வைக்கிறார்கள்.

சுதந்திரம் என்று பேசுவது எங்களுக்கு அல்ல; ஆண்களுக்கு நாங்கள் தருவது தான் சுதந்திரம். நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக அவர்களை வற்புறுத்துவது இல்லை. “நீ தான் தெய்வம்” என்று பூசித்து அவர்கள் தரும் வரங்களுக்காகக் காத்துக் கிடந்தோம். அது பழைய காலம். “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள்” பெண் என்று கூறி எங்களை அடிமைப்படுத்தி வந்தார்கள். அந்த அடிமை நீங்கி விட்டது. எங்கள் தொழுகையில் அவர்களைச் சிக்க வைத்தோம்; அவர்கள் எங்கள் அழுகையில் அடிமைப் பட்டிருந்தனர்.

இன்று அவர்கள் ஏமாறுவது இல்லை; பொருள் ஈட்டுவதில் இருவர்க்கும் சம பங்கு உண்டு என்று வற்புறுத்தப்படுகிறது. எங்களையும் உழைக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். ‘படித்த பெண் வேண்டும்’ என்று புதிய கோஷம் எழுந்து விட்டது. எதற்காக? அவள் சம்பாதிப்பாள்; வீண் சுமையாக வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்க மாட்டாள்.

‘காதல் ஒருவனைக் கைப்பிடித்துக்
காரியம் யாவும் செய்து முடிப்போம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/53&oldid=1139515" இலிருந்து மீள்விக்கப்பட்டது