பயனர் பேச்சு:Ravikumar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து


முனைவர் ரவிக்குமார்

இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ’தமிழில் தொழிற்பட்ட மூன்று இலக்கிய இயக்கப் போக்குகளாக எழுத்து இலக்கியப் போக்கு, வானம்பாடி இலக்கியப் போக்கு, நிறப்பிரிகை இலக்கியப்போக்கு ஆகியவற்றை விமர்சகர்கள் சுட்டுவர். அவற்றுள் நிறப்பிரிகை இதழின் ஆசிரியராக இருந்ததோடு அந்த இதழைப் பதிப்பித்து வெளியிட்டவர் ரவிக்குமார். அந்த இதழ் ஒரு இயக்கமாக அறியப்படுவதற்கான களப் பணிகளையும் முன்னெடுத்தவர்.

பின் நவீனத்துவ சிந்தனையை தமிழ்ச் சூழலில் இலக்கிய, சமூக விமர்சனங்களுக்குப் பொருத்திக் காட்டியவர். அதற்கு உறுதுணையாக அமையுமாறு பல்வேறு சிந்தனையாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். 1995இல் எட்வர்ட் செய்த், மிஷேல் ஃபூக்கோ, உம்பர்த்தோ எக்கோ, காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ், அகஸ்தோ போவால் ஆகியோரின் படைப்புகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டவர்.

எடுவர்டோ கலியானோ, எலியா கனெட்டி முதலானவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்துத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

தமிழில் தலித், பெண்ணிய இலக்கியப் போக்குகள் வளர்வதற்கு அவரது பங்களிப்பு முக்கியமானது. தலித் என்ற இலக்கிய இதழின் மூலம் பல புதிய எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தமிழுக்கு அளித்தவர். தலித் வரலாற்றைப் பதிவு செய்வதற்காக ‘போதி’ என்ற காலாண்டிதழை நடத்தியவர்.

தற்போது அவர் ஆசிரியராக இருந்து நடத்திவரும் மணற்கேணி ஆய்விதழ் தமிழ் ஆய்விதழ்களிலேயே தனித்துவமானதாகத் திகழ்கிறது.அந்த இதழின் முக்கியத்துவம் குறித்துப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் ‘மணற்கேணி: பாதையும் திசையும்’ என ஒரு நூலாக வெளியாகியுள்ளது.

இவரது விமர்சனங்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் முதல் பின் நவீனத்துவ இலக்கியம் வரை விரிந்து செல்கின்றன. இலக்கியம் மட்டுமின்றி வரலாறு, கல்வெட்டியல்,தொல்லியல் எனப் பரந்துபட்ட தளத்தில் செயல்படும் ரவிக்குமார், Indian Express, Pioneer, Seminar, Himal , தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், இந்தியா டுடே, ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 1000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

பிபிசி தமிழோசை வானொலியில் 5 ஆண்டுகள் மாதாந்திர நிகழ்ச்சியை வழங்கியவர். தமிழ்ச் செவ்வியல், சமஸ்கிருதமும் தமிழும், தமிழ்த் தொல்லியல் ஆய்வுகள், தமிழ் பௌத்தம் முதலான பொருள்கள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளைமுன்வைத்திருப்பவர். தற்போது தமிழில் இயங்கிவரும் இலக்கிய, அரசியல் திறனாய்வாளர்களுள் முக்கியமானவர்.

தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகில் மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் 10.06.1961 ல் பிறந்தவர். மனைவி: செண்பகவல்லி, மகன்கள் ஆதவன் , அதீதன்


    கல்வித் தகுதி :

எம்.ஏ (தமிழ்) (2010) தமிழ்ப் பல்கலைக்கழகம்

பி.எல் (1983) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பி.எச்டி (2017) தமிழ்ப் பல்கலைக்கழகம்


    வகித்த பொறுப்புகள்:

1. சிண்டிகேட் உறுப்பினர்,தமிழ்ப் பல்கலைக்கழகம்

2. செனட் உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

3. உறுப்பினர், எண்பேராயம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

4. உறுப்பினர், சமூக சீர்திருத்தக் குழு, தமிழக அரசு

5. உறுப்பினர், புதிரை வண்ணார் நலவாரியம், தமிழக அரசு

     விருதுகள்

1. அறிஞர் அண்ணா விருது (2010) தமிழக அரசு

2. விகடன் மொழிபெயர்ப்பு விருது (2014) ஆனந்த விகடன் குழுமம்


      கவிதை நூல்கள்

1. அவிழும் சொற்கள் (2009) உயிர்மை

2. மழை மரம் (2010) க்ரியா

3. வானில் விட்டெறிந்த கனவு (2017) மணற்கேணி

      சிறுகதை நூல்

1. கடல் கிணறு, (2014) மணற்கேணி


       உரைநடை நூல்கள்:    

1.கண்காணிப்பின் அரசியல், (1995) விடியல் பதிப்பகம்

2.கொதிப்பு உயர்ந்துவரும் , (2001) காலச்சுவடு,

3.கடக்க முடியாத நிழல்,(2003) காலச்சுவடு

4.மால்கம் எக்ஸ்,(2003) காலச்சுவடு

5.வன்முறை ஜனநாயகம், (2004) தலித் வெளியீடு,

6.சொன்னால் முடியும், (2007) விகடன்

7.இன்றும் நமதே, (2008) விகடன்

8.சூலகம், (2009) உயிர்மை

9.கற்றனைத்தூறும் (2009) உயிர்மை,

10.பிறவழிப் பயணம் (2010) உயிர்மை

11.பாப் மார்லி (2010) உயிர்மை

12.அண்டை அயல் உலகம் (2010) உயிர்மை

13.ஆள்வதன் அரசியல் (2010) உயிர்மை

14.தமிழராய் உணரும் தருணம் (2010)ஆழி பதிப்பகம்

15.துயரத்தின்மேல் படியும் தருணம் (2010) ஆழி பதிப்பகம்

16.காற்றின் பதியம் (2010) மணற்கேணி

17.கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) மணற்கேணி

18. மீளும் வரலாறு (2010) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்

19.காணமுடியாக் கனவு (2011) ஆழி பதிப்பகம்

20.சொல்லும் செயல் (2011) மணற்கேணி

21.அ-சுரர்களின் அரசியல் (2014) மணற்கேணி

22.கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (2017) கிழக்கு பதிப்பகம்

23.சமரசமில்லா சமத்துவ வேட்கை (2017) கிழக்கு பதிப்பகம்

24. கானலால் நிறையும் காவிரி (2018) மணற்கேணி

25. ஆயிரம் பூக்கள் கருகட்டும் (2019) மணற்கேணி

26. ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும் (2019) மணற்கேணி


      மொழிபெயர்ப்பு நூல்கள்: 

1.உரையாடல் தொடர்கிறது, (1995) விடியல்

2.கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மருதம்

3.வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான் (2003) தலித்

4.பணிய மறுக்கும்பண்பாடு (2003) காலச்சுவடு

5.வரலாறு என்னும் கதை (2011) மணற்கேணி

6.வலசைப் பறவை (2011) மணற்கேணி,7.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்(2011)மணற்கேணி

8.மாமிசம் (2014) மணற்கேணி

9.அதிகாரத்தின் மூலக்கூறுகள் (2014) மணற்கேணி

10.வெள்ளை நிழல் படியாத வீடு(2014) மணற்கேணி

11.குரல் என்பது மொழியின் விடியல்(2014)மணற்கேணி

       ஆங்கில நூல்

1. Venomous Touch (2010) Samya

       தொகுத்துப் பதிப்பித்த நூல்கள்

1.தலித் கலை இலக்கியம் அரசியல்(1996) தலித் கலைவிழாக்குழு

2.தலித் என்னும் தனித்துவம்(1998) தலித் வெளியீடு

3.அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், 4 தொகுதிகள் (1999) தலித் சாகித்ய அகாடமி

4.ஜீவிய சரித சுருக்கம் - ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், (1999 ) தலித் வெளியீடு

5. தலித் காலம்,(1998) தலித் வெளியீடு

6.மிகைநாடும் கலை (2003) காலச்சுவடு

7.தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்(2008)கரிசல்

8.ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (2008) கரிசல்

9.தீண்டாமையின் வரலாறு (2008) கரிசல்

10.எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது (2010) மணற்கேணி

11.நூர்ந்தும் அவியா ஒளி (2010) மணற்கேணி

12.சுவாமி சகஜானந்தா (2010) மணற்கேணி

13.எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி

14.பள்ளிப்பருவம் (2014) மணற்கேணி

15.நூல் ஏணி (2014)மணற்கேணி


       ஆங்கிலத்தில் தொகுத்துப் பதிப்பித்தவை 

1.We the Condemned, (1998) PUCL,1998

2.Waking is Another Dream (2011) Navayana

3.Tamil Dalit Writing (2012) Oxford University Press

ஒரு பேப்பர் ஒரு உரையாடல் ..இரவிக்குமார்[தொகு]

ஒரு இலக்கியவாதியாக அறியப்பட்ட நீங்கள் எப்போது அரசியலில் ஈடுபட ஆரம்பித்தீர்கள்?

கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்பொழுது சில மாதங்களுக்கு முன்னர்தான். அதாவது கடந்த சட்டசபைதேர்தலுக்கு முன்னர். அதற்கு முன்னால் அரசியல் தொடர்பு என்பது எனது மாணவப்பருவம் தொட்டு இருந்து வருகிறது. முதலில் கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றியிருக்கிறேன். ஆதற்கு பின்னர் மார்க்சிய லெனினிய அதாவது நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு அதனுடைய மாணவர் அமைப்பிலும் அதனை தொடர்ந்து பண்பாட்டு அமைப்பிலும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் செயல்பட்டுள்ளேன். பின்னர் மனிதவுரிமைகள், குறிப்பாக தலித் இயக்கப் பிரச்சனைகள் என எனது செயற்பாடுகள் அரசியல் சார்ந்தவையாக இருந்தாலும் கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்போதுதான்.


அரசியலை ஒரு சாக்கடை என்றும் அதனால் நல்லவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற ஒரு கருத்து உண்டு. இல்லை நல்லவர்கள் அரசியலில் ஈடுபட்டால்தான் அதனை நேர்மையானதாக மாற்ற முடியும் என்ற கருத்தும் உண்டு. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

அரசியலை அப்படி எதிராகப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இன்றைக்கு இந்த தேர்தல் அரசியல் மூலமாக ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை செய்யமுடியம் என்பதை நான் நம்புகிறேன். அந்த அடிப்படையிலதான் தொடர்ந்து தேர்தல்களை புறக்கணித்துக் கொண்டிருந்த விடுதலைச்சிறுததைகள் இயக்கம் கூட தேர்தலில் பங்கெடுகக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது .. பங்கெடுக்கலாம் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். ஆகவே அரசியலைப்பற்றி எதிரான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் ஒரு எழுத்தாளன என்ற வகையில் எழுத்தாளருக்கு தேவையான கற்பனையும் ஒரு படைப்பு ஊக்கமும், imagination and creativity என்று சொல்வார்கள். இது வந்து எழுத்தாளனுக்கு அடிப்படையான விசயம் அது இன்றைக்கு அரசியலில் சுத்தமாக இல்லாத நிலையைப் பார்க்கிறோம். அதனால் புதிய திட்டங்களை புதிய அணுகுமுறையை அவர்களால் கொடுக்கமுடியவில்லை. அந்தவிதத்தில் எழுத்தாளனுக்கு உரித்தான இந்த அடிப்படைத்தகுதிகளை அரசியல் தளத்தின் ஊடாக கோண்டுபோய் சேர்க்கும்போது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான் நினைத்தேன். அதன் மூலமாக மற்றவர்கள் செய்யாத சில விடயங்களை செய்யமுடியும் என நான் நினைத்தேன். அந்தவிதத்தில் அரசியலுக்கு வருவதை நான் சாதகமாகத்தான் பார்த்தேன். இன்றைக்கு எனது குறுகிய கால அனுபவத்தில் என்னால் சிலவற்றை செய்யவும் முடிந்திருக்கிறது.


சட்டசபை, தேர்தல் என கட்சி அரசியலில் ஈடுபடாமல் இல்லாமல் ஒரு இயக்கமாக இருந்திருந்தால் .. நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூடுதலான சேவையாற்ற முடியும் என்ற கருத்திருக்கிறது அது பற்றி ..

அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை பத்தாண்டுகளுக்கு மேலாக அது தேர்தலைத் தவிர்த்த இயக்கமாகவே இருந்து வந்தது. 99ல்தான அது தேர்தலில் ஈடுபட்டது. அதுவரை அது ஒரு வலிமையான இயக்கமாக எல்லாரினதும் கவனத்தை பெற்றது என்பது உண்மைதான். ஆனால் தேர்தலுக்கு வந்த பின்னர்தான் தாழத்தப்பட்ட மக்களை இன்றைக்கு ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற முடிந்தது. அதற்கு முன்னர் இயக்கம் வலுவாக இருந்தது. இன்றைக்கு மக்கள் ஒரு வலுவான சக்தியாக மாறியிருக்கிறார்கள். அதற்கு இந்தியாவைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற அரசியல் என்பது ஒரு வழிமுறையாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.


திராவிட கழகத்தின் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் திராவிட இயக்கத்தைப்பற்றியும் பெரியார் பற்றியும் நீங்கள் தீவிரமான விமர்சனம் கொண்டவர் என அறிகிறேன் ..

நான் தொடர்ந்து திராவிட இயக்கத்துடன் நெருக்கமாக நம்பிக்கையோடு செயற்பட்டு வந்த காரணத்தால் அதனுடைய செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதன் தத்துவார்த்த தளத்தில் குறிப்பாக பொருளாதார அடிப்படையில் இருந்த போதாமை கருதியே என்னுடைய மாணவபருவத்தில் மார்க்சிய அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டேன் அதற்கு பின்னாலும்கூட தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திராவிட இயக்கம் திராவிட அரசியல் என்பது வலுவான சக்தியாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்தும் அதை நான் கவனித்து வந்தேன். குறிப்பாக 1998ல் பாரதிய ஜனதா கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கியபோது என்னை போன்றவர்களுக்கு, குறிப்பாக அதை தொடரந்தும் ஆதரவோடும் ஒரு நம்பிக்கையோடும் பாரத்துக் கொண்டிருந்தவர்கள் என்ற வகையில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் பெரியாருடைய கருத்துக்களை தமிழில் மீண்டும் எழுச்சி பெற வைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நான் ஆசிரியராக இருந்து நடாத்தி வந்த நிறப்பிரிகை பத்திரிகையில் பெரியாரியம் என்ற கூட்டு விவவாதம் ஒன்று நடாத்தினோம் அதில் எனது பங்கு முக்கியமானது. அதனைத் தொடர்ந்து பெரியாரைப்பற்றிய ஒரு விவாதம் மீண்டும் வந்து ஒரு தமிழ்ச் சூழலில் ஒரு கவனிப்பும் வருவதற்கு எனது பங்கும் முக்கியமானது. குறிப்பாக தினமணி போன்ற பத்திரிகைகளில் அதைப்பற்றிய விவாதம் தொடர்ந்து வருவதற்கு எனது கட்டுரை காரணமாக இருந்தது. அந்த நிலையில் தி;;.மு.கவின் பாஜக ஆதரவான நிலைப்பாடு என்பது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கான காரணத்தை தி;மு.க. அரசியல் சந்தர்ப்பவாதமாக இருந்தது என்றோ அல்லது அதனுடைய தலைவர் தவறாக நடந்து கொண்டார் என்றோ.. நான் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள விரும்பவில்லை அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய விரும்பினேன். ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் சோசலிசம்; வீழ்ச்சி அடைந்தபோது அதற்கான காரணங்களை ஸ்ராலினுடைய அதிகார விடயமாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோது …அதைத் தாண்டி லெனின் தேசிய இனப்பிரச்சனையை கையாண்டதில் பிரச்சனையிருக்கிறதா? மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றவர்களின் அணுகுமுறையிலேயே ஏதாவது கோளாறு இருக்கிறதா? என்கின்ற ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.. அப்படி பார்க்கும்போது தேசிய இனப்பிரச்சனைகளைப்பற்றி மார்க்ஸ் உட்பட அதற்கு பின்னால் வந்த சிந்தனையாளர்கள் எல்லாம் எப்படியெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அதற்கான காரணங்களை அறிந்தோம். அதைப்போலவே திராவிட இயக்கத்திலுள்ள இந்த நிலைப்பாட்டுக்கு அதனுடைய மூலகர்த்தாக்களாகிய பெரியார் போன்றவர்களிடம் ஏதாவது காரணங்கள் இருக்கிறாதா என மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி பார்க்கிற போது சிறுபான்மையர்களை அணுகுகின்ற விதத்தில் சில பிரச்சனைகள் தென்பட்டது. அந்த பின்னணியில் தி.மு.க வின் நிலைப்பாட்டை விளங்கிக் கொண்டேன். அதற்கு காரணம் இதுதான் என்பதை 98ல் எழுதினேன். அது திராவிட இயக்கத்தின் மீதான, அதனுடைய தொடக்கநிலை கருத்தியலாளரான பெரியாரைப்பற்றிய விமர்சனமாக நீண்டது. மற்றபடி அவர்களைப்பற்றி அவதூறாகவோ கொச்சைபடுத்தியோ எதுவும் சொல்லவில்லை. இந்த விமர்சனங்கள் என்னிடம் இருக்கிறது என்பது உண்மைதான்.


ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் .. அண்மையில் தமிழ்நாட்டிலிலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று அங்கு அவர்கள்படும் அவலங்களை ஒரு அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தீர்கள். தமிழ்நாடு அரசும் சில அனுகூலமான முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ஈழத்தமிழ் அகதிகள் அல்லது புலம்பெயர்ந்த மக்கள்பற்றிய எனது கவனம் என்பது, உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது அதற்கு இணையாக புலம்பெயரந்த மக்களின் நலன்களைப்பற்றி கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காக, குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் அங்கேயிருந்த சிந்தனையாளர்கள் ரஷ்ய அதிபர் பிரான்சுக்கு வருகை தந்தபோது, அரசாங்கம் அவரை வரவேற்க முற்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்தவர்களின் கவனத்தை ஈரப்;பதற்காக பிரான்சிலிருந்த சிந்தனையாளர்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தார்கள் என்பதை ஹியுகோவின் வாழ்க்கை வரலாற்றில் படித்திருக்கிறேன். அதுதான் ஒரு உந்துதலாக இருந்தது. உலகத்தமிழர் மாநாட்டு சமயத்தில் ஏன் நாங்கள் இப்படி முயற்சி மேற்கொள்ள முடியாது என நண்பர்களுடன் இணைந்து புலம்பெயரந்த ஈழத்தமிழர் மாநாடு என ஓன்றை நடாத்தினோம். தொடர்ந்து அகதிகள் பிரச்சனை என்பது என்னுடைய கவனத்தில் இருந்து வந்தது. அதையொட்டித்தான நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் முதல் உரையிலேயே இந்த விடயததை கவனப்படுத்தினேன். இன்றைக்கு அவர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை இரண்டு திகரிக்கப்பட்டுள்ளது. அகதி முகாம்களுடைய நிலை இன்றைக்கு சீரமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கென வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இரண்டு விடயங்களை தெரிவிக்கலாம் என நினைக்கிறேன் குறிப்பாக அகதிகளுடைய பிள்ளைகளுடைய படிப்பு. இதற்கு முன்னால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு படிப்புக்கென்று இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கு பின்னால் வந்த அதிமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டுவருவதற்கு நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது மிக முக்கியம் என்று பார்க்கிறேன. ஏனென்றால் இந்த மக்கள் என்றைக்காவது திரும்பிப் போனார்கள் என்றால் சொந்த நாட்டுக்கு போகும்போது இங்கிருந்து பண்ட பாத்திரங்களையோ வேறு சொத்துக்களையோ எடுத்திட்டு போகமுடியாது. அவர்கள் தங்களோடு கொண்டுபோகக்கூடிய ஒன்றாக கல்வி மட்டும்தான் உள்ளது. ஆகவே அவர்களை கல்வி ரீதியாக வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் மீண்டும் அவர்கள் நாடு திரும்பும்போது அவர்களால் நாட்டை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.

இரண்டாது இந்திய அளவில் அகதிகளுக்கான ஐ.நா. சபையின் தீர்மானங்கள். அதில் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது. அதன் காரணமாக அகதிகளுக்கு சட்ட ரீதியாக கிடைக்கக்கூடிய உரிமைகள் கிடைக்காமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்திய அளவில் அகதிகளின் பிரச்சனைகளை அணுகுவதற்கு தேசிய அளவில். ஒரு சட்டமும் இல்லாத நிலை இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட மாதிரிச் சட்டம் கூட இன்னமும் நடைமுறைக்கு வராமல் இருக்கிறது. ஐ.நா.சபையின் தீர்மானங்களில் இந்தியாவை கையெழுத்திட வைப்பது இந்திய அளவில் அகதிகளின் நலனுக்காக தேசியச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆகிய இரண்டும்; தேசிய அளவிலான எனது கவனமாக இருக்கிறது. இதனை தேசிய அளவிலான மனிதவுரிமை இயக்கங்களுடன் தொடர்புகொண்டு அதனை ஒரு பிரச்சாரமாக கொண்டு செல்வதை எனது அடுத்த முயற்சியாக கொண்டுள்ளேன்.


ஈழத்தில் வன்முறைகள் அதிகரித்து செல்கின்றது .. இந்நிலையில் தமிழ்நாட்டுமக்களின ஆதரவை ஈழத்தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள். அந்தவகையில் அண்மையில் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக்கூட்டணி பாராளுமன்ற உறப்பினர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களை சந்திக்க கலைஞர் கருணாநிதியும் திரு.மன்மோகன் சிங்கும் மறுத்து விட்டார்கள். திரு. மன்மோகன் சிங்கை சந்திக்காததைக் காட்டிலும் திரு. கருணாநிதி அவர்கள் சந்திக்க மறுத்தமை ஈழத்தமிழர்களுக்கு வேதனையைக் கொடுத்துள்ளது. இப்போது கலைஞர் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் நீங்கள் இதுபற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளீர்கள்?

நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறோம். இந்தவிடயத்தை சட்டசபையில் கிளப்பியதே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புத்தான். சிங்கள பொலிசாருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கப்பட்டபோது அதனை ஒரு பிரச்சனையாக எடுத்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு நாங்கள்தான காரணமாக இருந்தோம். அடுத்ததாக செஞ்சோலை சிறார்கள் மீது நடந்த விமானத்தாக்குதலை ஒட்டி, அந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் நாங்கள் முயற்சி எடுத்தோம். அங்கு ஒரு தீர்தமானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது இரண்டு முறை ஈழத்தமிழர் பிரச்சனையை முன்வைத்து வெளிநடப்புச் செய்தோம். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் ஈழத்தமிழருக்கு ஆதரவான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டையும் நாங்கள்தான கொண்டுவந்தோம். அந்த தீரமானங்களை முதலமைச்சர் மிகவும் அக்கறையாகப் படித்தார். அவர் உள்ளாரந்து ஈழத்தமிழர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். ஏற்கனவே இந்தப்பிரச்சனையால் ஓருமுறை அவர் ஆட்சி இழந்துள்ளார். அப்போது பெரும்பான்மை அரசாக இருந்தபோதே ஈழத்தமிழர் பிரச்சனையால் ஆட்சியை இழந்துள்ளார் இன்றைக்கு காங்கிரஸ் ஆதரவை வேண்டி நிற்கும் நிலையில் அந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டியதும் இன்றைக்கு ஈழத்தமிழரின் நலனுக்கு அவசியமாக இருக்கிறது. அந்தவிதத்தில் அவர் சாதுரியமாக இந்த பிரச்சனையை கையாளுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்று சொன்னால் அவர் சட்டப்பேரவையில் on record ஆக பேசியவிடயங்கள். அவ்வளவு அழுத்தம் திருத்தமாக வேறு யாரும் பேசியிருக்க முடியாது. குறிப்பாக அகதிகள் என்ற வார்த்தையை சொல்ல அவர் வாய் கூசினார் அதாவது தமிழர்களை அகதி என்று சொல்கிற நிலமை இன்றைக்கு இருக்கிறதே என்று வருத்தப்பட்டார். இது சட்டப்பேரவையின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு ஈழத்தமிழர் பிரச்சனையில் அவருக்கு அக்கறையுண்டு. இவர்களை பார்க்க மறுத்ததை ஒரு வயஉவiஉயட விடயமாகவே பார்;க்கிறேனே தவிர அவர் மனப்பூர்வமாக மறுத்துவிட்டார் என்று சொல்லமுடியாது.

இன்றைக்கு இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை தீரமானிப்பது அரசியல் என்பதை விடவும் சில அதிகாரிகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஈழப்பிரச்சனைக்கு எதிரான மனச்சாய்வு பட்டவர்களாக இருக்கிறார்கள் இது எளிதில் மாறக்கூடியதாக இல்லை. ராஜிவ் கொலை விடயமும் இருக்கிறது. ஆகவே இந்த விடயத்தை மௌ;ள மௌ;ளத்தான அணுக முடியும். ஆனால் ஈழத்தமிழருக்கு ஒரு இன்னல் என்றால் நிட்சயமாக நாங்கள் எல்லாம் எங்களால் இயன்றதை செய்து அந்த இன்னலை களைவதற்கு நாங்கள் பாடுபடுவோம் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.



சாதிகளை குறிப்பிட்டு விமர்சிப்பது சரியா? சாதிப்பிரிவினைகளை இல்லாமல் செய்யவேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? அல்லது சாதிகளை வைத்துக்கொண்டே அவற்றுக்கிடையில சமத்துவம் இருந்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?

நிட்சயமாக எந்தவொரு தலித் சமூகத்தை சேர்ந்தரும் சாதி அமைப்பு இருக்கவேண்டும் என விரும்பமாட்டார்கள். சாதிகளை வைத்துக்கொண்டே ஏற்படுத்தும் சமத்துவத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் ஏற்றுக்கொண்ட அம்பேத்கரின் பார்வை அடிப்படையாக எதை சொல்கிறதென்றால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். எப்படியெல்லாம் சாதிமனோபாவம் வெளிப்படுகிறது என்ற கோணத்தில் விமர்சிக்கிறோமே தவிர சாதி ஒழிப்பு என்பதுதான் எங்களது அடிப்படையான நோக்கம். அதுதான் எங்களது அணுகுமுறை.


காலச்சுவடு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிற்கு நீங்கள் ஒரு ஆலோசகராக இருக்கிறீர்கள். ஆனால் காலச்சுவடு பார்ப்பனிய நலன்களை (பின்தளத்திலாவது) பேணுகின்ற பத்திரிகை எனச் சொல்லப்படுகிறதே?

நான் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினரான பின்னர் அதிலிருந்து விலகி ஆலோசகராக இருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை அவர்கள் பார்ப்பன நலனைப் பேணுபவர்களாக நான் உணரவில்லை. குறிப்பாக தொடர்ந்து காலச்சுவடு பத்திரிகையில் பெரும்பாலான தலையங்கங்கள் என்னால் எழுதப்பட்டுள்ளது. அந்த தலையங்கங்கள் பலமுறை பார்ப்பனிய நலன்களுக்கு எதிரான பொருளை கொண்டிருக்கிறது. அடிப்படையில் இந்த மாதிரியான விரிவான கட்டுரைகளை நான் அதில் எழுதியிருக்கிறேன். என்னால் மட்டுமல்ல பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கிற பத்திரிகையினை பார்ப்பன நலன் பேணும் பத்திரிகையாக நான் பார்க்கவில்லை. அவர்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். இன்றைக்கு இருக்கிற ஆசிரியரோ அல்லது இதற்கு முன்னால் ஆசிரியராயிருந்த சுந்தர ராமசாமி அவர்களோ பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் ஆனால் சுந்தர ராமசாமி பார்ப்பனியத்தை ஆதரித்து எழுதியவரில்லை அதற்கு எதிரான வாழ்க்கையைத்தான் கடைப்பிடித்தார். அவரது இறப்பு கூட, இறந்ததற்கு பின்னால்கூட எந்தவித சடங்குகளுக்கு இடமுமில்லாமல் அவருடைய உடல் எரியுட்டப்பட்டது. எரியூட்டப்பட்ட இடம்கூட, வேறொரு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு சொந்தமான சுடுகாட்டில்தான் எரியூட்டப்பட்டது. அங்கு அவரது சாதிக்காரர்கள், உறவினர்கள் பத்து இருபது பேர்கூட வரவில்லை. அதைவிட தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள். அவரது எழுத்தை விமர்சிப்பவர்கள்கூட நூற்றுக்கணக்கில் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள். எனது அனுபவத்தில் நான் எல்லாவிதத்திலும் நுணுக்கமாக சாதியம் வெளிப்படுவதை அவதானிக்கிற ஆள் என்றவிதத்தில் அப்படி வெளிப்படடிருந்தால் நிச்சயமாக அதனைச் சகித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன். என்னுடைய அனுபவத்தில் அந்த பத்திரிகையை ஒரு பார்ப்பனிய நலன் பேணும் பத்திரிகை என்று சொல்ல மாட்டேன். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சனையிலும்கூட சுந்தர ராமசாமி காலத்திலும் சரி இப்போதும் சரி ஈழத்தமிழர் பிரச்சனைபற்றி எழுத்தில் ஆழமாக அணுகுகின்ற பத்திரிகையாகாத்தான் வெளிப்படுகிறது.


உங்களது அரசியல் வேலைகளால் இலக்கிய முயற்சிகள் தடைப்பட்டிருக்கும். புதிதாக ஏதாவது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

எழுத்து முயற்சிகள் குறிப்பாக ஆக்க எழுத்து முயற்சிகள் பாதிக்கப்பட்டுத்தான் உள்ளது. நான் “தலித்”; என்ற இலக்கிய பத்திரிகையை நடாத்திக் கொண்டிருக்கிறேன். இந்த இதழை ஈழத்து தமிழ்க் கவிதைகளின் சிறப்பிழாக வெளியிடவிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அது வெளிவரவிருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அறியப்படாத பல ஈழத்துக்கவிஞர்களை நான் அதில் அறிமுகப்படுத்துகிறேன். குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகளை இதில் கொண்டு வருகிறேன். அனார், விநோதினி என்கிற கவிஞரகள். இவர்கள் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அறியப்படாத கவிஞர்கள். அந்த கவிதைகள் குறிப்பாக ஈழத்து கவிதைப்போக்கை மட்டுமல்ல தமிழ்நாட்டு கவிதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அற்புதமான விதத்தில் வெளிப்படுகின்றன. அவை தமிழ் இலக்கிய உலகத்துக்கு புதிய வழியை திறந்துவிடும் என்று நம்புகிறேன். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கவிதைகள் ஈழத்து தமிழ் கவிதை சிறப்பிதழில் சேர்க்கப்பட்டுள்ளன.

2006 டிசம்பர் மாதத்தில் லண்டனிலிருந்து வெளிவரும் ஒருபேப்பர் என்ற பத்திரிகையில் வெளியான எனது நேர்காணல்- ேர்கண்டவர் கோபிரத்னம்

“எழுத்தாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் அரசியலில் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்”[தொகு]

நேர்காணல்: ரவிக்குமார் சந்திப்பு: தளவாய் சுந்தரம்

தீராநதி: தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டோம், அதனைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்து, அந்த அறிவிப்பில் நீண்டகாலமாக உறுதியுடனும் இருந்த வி டுதலைச் சிறுத்தைகள், முதல்முறையாக தங்கள் பாதையை மாற்றி 1999 பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அந்த முடிவை எடுக்க நீங்களும் ஒரு காரணமாக இருந்தீர்கள் என்று சொல்லப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்ற உங்கள் ஆலோசனைக்கு என்ன காரணம்?

ரவிக்குமார்: 1999 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கடுமையான ஒடுக்குமுறைகளை எங்கள் கட்சி சந்தித்தது. கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்தி லும் கைது செய்யப்பட்டார்கள். அன்றிருந்த தி.மு.க., பா.ம.க. கூட்டணியால் வடமாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையும் அரசு வன்முறையுமாக இரண்டு வி தமான நெருக்கடிகளை நாங்கள் எதிர்கொண்டோம். மேலும் வன்முறையாளர்கள் என்று எங்களைப் பற்றி அவப்பெயரை ஏற்படுத்தவும் சதி கள் நடைபெற்றன. எனவே அதனை எதிர்கொள்ள தேர்தலையும் ஒரு போராட்டக் களமாக மாற்றுவோம் என்று முடிவெடுத்தோம். தேர்தல் அரசி யலில் ஈடுபடுவது என்ற முடிவுக்கான முக்கிய காரணம் அதுதான். கருணாநிதி யும் ராமதாஸும்தான் நாங்கள் அந்த முடிவை எடுக்க காரணமாக இருந்தர்கள்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒருவிதமான அரசியல் யுக்தி. மார்க்சிய லெனி னிய இயக்கத்தில் இருந்து வந்தவன் என்னும் முறையில், தேர்தல் புறக்கணி ப்பைத்தான் நான் தொடர்ந்து பேசியும் பின்பற்றியும் வந்திருக்கிறேன். ஆனால், அதன்பிறகு மார்க்சிய லெனினிய அரசியலையும் இந்தியா பற்றி அது கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய போது, இந் திய பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் இந்திய அரசியல் அமைப்பையும்கூட இங்குள்ள மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்ற முடிவுக்குதான் வந்தேன். அந்த புரிதலின்மையுடன்தான் பல்வேறு நடைமுறைகளை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை, குறி ப்பாக தலித் மக்களை ஒன்று திரட்டுவதற்கு பாராளுமன்றப் பாதையை புறக்கணிப்பதைவிட அந்தப் பாதையை பயன்படுத்துவது அதிக வலி மையானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அந்தவிதத்தில் வி டுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்தபோது எனது ஆலோசனைகளைச் சொன்னேன். அது அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்க வேண்டும். என்னைப் போன்று பலரும் அவர் இந்த முடிவை நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், தேர்தல் புறக்கணிப்பிலேயே தொடர்ந்து இருக்கும் போது, அதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. அதனாலும் தேர்தல் பாதையைத்� தேர்ந்தெடுத்தொம். 1999 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் நாங்கள் போட்டியி ட்டோம். சிதம்பரத்தில் இரண்டேகால் லட்சம் ஓட்டுகள் திருமாவளவன் பெற்றார். அது தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலேயே தனியாக ஒரு வேட்பாளர் பெற்ற அதிக ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு மி கப்பெரிய திரட்சிதான். அந்தத் திரட்சி படிப்படியாக அதிகரித்து இன்று வடமாவட்டங்கள் முழுக்க பரவியிருக்கிறது. இந்தத் தேர்தலில் வடமாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கும் வெற்றிக்கு காரணம் அதுதான்.

வாக்களிப்பது என்கிற செயல்பாட்டை அவ்வளவு சுலபமாக நாம் நிராகரி த்துவிட முடியாது. மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கிற ஒரு வி ஷயமாகத்தான் அதனை நினைக்கிறார்கள். அந்தவகையில் வாக்குச்சீட்டுக்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியை மக்களின் நன்மைக்கு தக்கவாறு தி ருப்பும்போது ஒரு திரட்சி நடக்கிறது. அரசியல் என்றாலே அதை வெறுப்போடு பார்க்கிற போக்கு அதிகரித்து வரும் காலம் இது. ஆரோக்கி யமான பார்வையல்ல இது. இதனை மேதகு ஆளுநர் அவர்களும் தன் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீராநதி: உங்கள் கட்சியின் நீண்டகால போராட்டமும் லட்சியமுமான தலி த்துகள் விடுதலையை தேர்தல் அரசியல் மூலம் பெறமுடியும் என்று நம்புகி றீர்களா?

ரவிக்குமார்: இந்தியாவில் சாதிய சமூகத்தில் தலித்துகள் மட்டுமல்லாமல் அனைத்து சாதியினரும்கூட ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் எல்லோருமே சாதிய சமூகத்துக்குள் பிணைக்கப்பட்டு, அவர்களது சுதந்திரமும் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக் கிறார்கள். சாதிய சமூகத்தின் பலனை அனுபவிப்பவர்களும் இதில் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தலித்துகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே விடுதலை தேவையாக இருக்கிறது. அந்த வி டுதலை சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது. ஒரு வர்க்கம் அழியும்போது, அது தொழிலாளிக்கு மட்டுமல்லாமல் எப்படி முதலாளிக்கும் விடுதலையைக் கொடுக்குமோ அப்படி, சாதி அழியும்போது அது எல்லோருக்கும் வி டுதலையைக் கொடுக்கும். அந்த விடுதலையை தேர்தல் பாதையில் எட்டிவிட முடியும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. அது மிகப்பெரிய ஒரு போராட்டத்தால்தான் சாத்தியமாகும். இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்பு போராட்டம் என்பது ஆக வன்மையான ஒரு போராட்டமாக இருக்கும். அதற்கான பாதையை வகுப்பதில் தேர்தல் அரசியலையும் ஒரு யுக்தியாக பயன்படுத்தமுடியும். அது சிறிய அளவில் உதவவும் செய்யலாம், அவ்வளவுதான். எனவே, பாராளுமன்றப் பாதையை பயன்படுத்தும் போதே மற்ற போராட்ட வடிவங்களையும் கைவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தீராநதி: நீங்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் முடிவை எப்போது எடுத்தீர்கள்?

� ரவிக்குமார்: தனிப்பட்ட முறையில் தேர்தலில் நிற்பதை நான் விரும்பவில்லை. அதனைவிட கருத்துருவாக்கப் பணி எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வற்புறுத்தி என்னை நிற்கவைத்தார். இன்னொரு பக்கம், இந்த அமைப்பைப் பயன்படுத்தி நி றைய செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. எனவே ஒப்புக்கொண்டேன். ஜனநாயகம் என்பதன் ஆற்றலை உணர்ந்ததாலும் நான் தேர்தலில் போட்டியிட்டேன். நான் வகித்துவந்த பாதுகாப்பான வங்கிப் பணி யை ராஜினாமா செய்யும்போது தேர்தலில் வெற்றிப் பெறுவதைப் பற்றிய அதி கமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. வெற்றி வாய்ப்பை இழந்தால் செய்யவேண்டிய பணிகள் குறித்துதான் அப்போது நான் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். நான் உருவாக்கி வந்த கருத்துருவாக்கப் பணிக்கு இந்தப் பதவி ஒரு விதத்தில் இடையூறுதான் என்றாலும் இதன் வாயிலாகவும் செய்யக்கூடிய காரியங்கள் பல இருக்கின்றன என்று அப்போது எனக்குத் தோன்றியது.

தீராநதி: வெற்றிப்பெற்று சட்டசபைக்கு சென்றுபிறகு அக்கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா?

ரவிக்குமார்: நிச்சயமாக. பல போராட்டங்கள் நடத்தி அதற்குப் பிறகு சாத்தி யமாகும் விஷயங்களை இப்போது எளிதில் நிறைவேற்ற முடிகிறது. நான் சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசிய போது, ஈழப்பிரச்னை முதல் நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுவரை பல்வேறு பிரச்னைகளின் பால் அவையின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டில் வெற்றி பெறுவதும் சாத்தியமாயி ற்று. நூலகங்களுக்கு 600 புத்தகங்கள் வாங்குவது நான் பேசிய பிறகு 1000 புத்தகமாக மாறியிருக்கிறது. பத்து வருடம் போராடினாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான். சட்டப்பேரவையில் பேசினால் எல்லாவற்றையும் சாதி த்துவிடலாம் என்று நான் சொல்லவில்லை. சிலவற்றையாவது வெல்லலாம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தீராநதி: மற்ற அரசியல்வாதிகள் மாதிரியல்லாமல் ஒரு எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றவர் நீங்கள். எழுத்தாளர் என்ற அடையாளத்தை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

ரவிக்குமார்: இந்தத் தேர்தலில் என்னைத் தவிர வேறு சில எழுத்தாளர்களும் போட்டியிட்டார்கள்; என்றாலும் எழுத்தாளர் என்ற அடைமொழியோடு வாக்காளர்களிடம் சென்றது அனேகமாக நான் மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். பெரும்பகுதி கிராமங்களைக் கொண்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் எழுத்தாளன் என்ற இந்த பிம்பம் ஒரு அன்னியத்தன்மையை ஏற்படுத்திவிடுமோ என்ற தயக்கம் தொடக்கத்தில் எனக்கு இருந்தது. ஆனால், மிக விரைவில் அந்த அன்னியத்தன்மை சாதகமான விளைவையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன். “வழக்கமான அரசி யல்வாதிகளில் ஒருவரல்ல இவர்” என்ற எண்ணத்தை எழுத்தாளன் என்ற பிம்பம் எனக்கு வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கியது. அது என் மீது ஒரு பரி வுணர்வையும் உண்டாக்கியது. எனது எழுத்துலகப் பின்னணியை எடுத்துக்கூறும் விதத்தில், தேர்தலையொட்டி ‘தினமணி' மற்றும் ‘டெக்கான் க்ரானிக்கள்' நாளேடுகளில் கட்டுரைகள் வெளியாகின. அக்கட்டுரைகள் சிற்றி தழ் வட்டாரத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த என்னை ஒரு பரந்த தளத்தில் அறிமுகம் செய்துவைத்தன. நகர்புறத்தவர்கள் மத்தியில் எங்கள் கட்சி மீதி ருந்த ஒவ்வாமை உணர்வை மாற்றவும் அந்தக் கட்டுரைகளை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

ஒரு எழுத்தாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் அரசியல் தளத்தில் சாதகமான விளைவுகளேயே ஏற்படுத்தும் என்று நான் எண்ணுகிறேன். பிற அரசியல்வாதிகளிடம் இருந்து என்னை வேறுபடுத்தக்கூடிய அம்சம் அதுதான். தானும் ஒரு எழுத்தாளராக இருக்கிற முதலமைச்சரும் இதேவிதப் பண்புகளைக் கொண்டிருப்பார் என்பது என் நம்பிக்கை.

தீராநதி: தலித் வாக்காளர்களைப் பொறுத்தவரைக்கும் இந்தத் தேர்தல் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?

ரவிக்குமார்: தலித் வாக்காளர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டு அரசி யலிலேயே இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஒரு புறக்கணிக்கமுடியாத சக்தியாக தலித் வாக்குவங்கி உருவாகியிருக்கிறது. இனி மேல் தமிழக அரசியல் சூழல் வேகமாக மாற்றத்துக்கு உள்ளாகும் என்று தோன்றுகிறது.

தீராநதி: இந்திய அரசியலமைப்பை முதலாளித்துவ பூர்ஷ்வா அரசியலமைப்பு என்கிற விதமாக பேசியும் எழுதியும் வந்துள்ள நீங்கள், இப்போது அந்த அமைப்பில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு முரண் இல்லையா?

ரவிக்குமார்: எனது எழுத்துகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தவறான புரிதல் இது. மார்க்சிய லெனினிய இயக்கத்தில் இருந்தபோதும்கூட இந்திய அரசி யலமைப்பை பூர்ஷ்வா அமைப்பு என்று நான் கருதியதில்லை. அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு என்றுதான் மார்க்சிய- லெனினியவாதிகள் வரையறுத்தார்கள். அந்த வரையறையும் சரியானதில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. இந்திய சமூகத்தை மதிப்பிட இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவை. அப்படியான ஆய்வுகள் இங்கு எந்த மார்க்கசியர்களாலும் மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, மார்க்சிய சித்தாந்திகள் என்று சொல்லப்பட்டவர்கள், ஏற்கெனவே இங்கு நிலவிய இந்துத்துவ கருத்தியலோடு சமரசம் செய்து கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். மிகச்சிறந்த உதாரணம் நம்பூதிரி பாடு.

இந்தியாவை ஒரு பூர்ஷ்வா சமூகம் என்று நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உண்மையில் இந்திய சமூக அரசியல் ஒரு பூர்ஷ்வா அமைப்பு கிடையாது. முதலாளித்துவ அரசியல் அமைப்பில் தனிமனிதன் என்கிற ஒரு அங்கீகாரம் இருக்கும். இங்கு தனிமனிதனை அங்கீகரிப்பதே இல்லை. இந்திய அரசி யல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது இதுபற்றி ஒரு விவாதமே உருவானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அலகாக எதனை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, காந்தியவாதிகள் ஒரு கிராமத்தைத்தான் அடிப்படை அலகாக கொள்ளவேண்டும் என்று வலி யுறுத்தினார்கள். அப்போது, அம்பேத்கர் ஒருவர் மட்டும்தான் தனிமனிதனை அடிப்படை அலகாக எடுத்துக் கொள்ளவேண்டும், கிராமத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி அதனைக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் நமது உரிமைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு முதலாளித்துவ அரசியல் அனுகுமுறைதான். ஆனால், மனிதர்களை மனி தர்களாகவே அங்கீகரிக்காத சாதிய சமூகத்தில், ஒரு தனிமனிதனாக சுரண்டுவதற்குக்கூட தலித்துகளை எடுத்துக்கொள்ளத் தாயாராக இல்லாத சமூகத்தில், இது ஒரு முற்போக்கான நடைமுறை.

தீராநதி: அதிகார மையங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தி ஒன்றுமே செய்ய முடியாது, அதிகார மையங்களை அழிப்பது அல்லது தகர்ப்பதுதான் முக்கியமானது என்று அதிகார மறுப்பு மற்றும் பின் நவீனத்துவக் கோட்பாடுகளை பேசி வந்த உங்கள் பார்வையில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா?

ரவிக்குமார்: பின்நவீனத்துவாதிகள் என்று சொல்லப்படும் பலர் அதிகாரம் என்பதை அணுகியிருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு அதனை அணுகியவர் மி ேஷல் ஃபூக்கோதான். கார்ல் மார்க்ஸ் தொடங்கி மார்க்சியவாதிகள் அனைவரும் அதிகாரத்தின் ஒரு முகத்தை மட்டும்தான், குறிப்பாக அதன் ஒடுக்கும் பண்பை மட்டும்தான் பார்த்தார்கள். எனவே அதனை எதிர்க்கவேண்டும், நிராகரி க்கவேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுத்தார்கள். அதனை வலியுறுத்திப் பேசி னார்கள். மாறாக மிஷல் ஃபூக்கோ அதிகாரத்தின் ஆக்கும் பண்பைப் பார்த்தார். அழிப்பதை மட்டுமல்லாமல் உற்பத்தியையும் அதிகாரம் செய்யும் என்பதை அவர் அடையாளம் காட்டினார். அதிகாரம் இரட்டைத்தன்மை கொண்டதாக - இருக்கும் போது, அதுகுறித்த உங்கள் அணுகுமுறை ஒரேவிதமானதாக இருக்க முடியாது. “துப்பாக்கிக் குழலிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது. அதி காரத்தை அழிப்போம்” என்று மாவோ சொன்னது இன்று பொய்யாகிவிட்டது. புரட்சியிலிருந்தும் அதிகாரம் பிறந்திருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். அது துப்பாக்கியிலிருந்து பிறந்த அதிகாரத்தைவிடக் கொடுமையானதாகி, சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தது. விடுதலையின் பெயராலேயே ஒருவனை அடிமையாக்க முடியும் என்பதைத்தான் கம்யூனிச சமூகங்கள் நி ரூபித்திருக்கின்றன. இந்நிலையில் அதிகாரத்தைத் தகர்ப்பதல்ல, அதிகார சமன்பாடுகளை மாற்றியமைப்பதுதான் நாம் செய்யக்கூடியது என்கிறார் ஃபூக்கோ. அதாவது, நமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது.

அதேநேரத்தில் அதிகாரத்தை கைக்கொள்வதும் துறப்பதும் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும். அதாவது அதிகாரத்துக்காகப் போராடுகிற அதே நேரத்தில் அதனை துறப்பதற்கான மனநிலையும் உங்களிடம் இருக்கவேண்டும். இந்திய சமூகம் துறவையே அதிகாரத்துக்குப் பயன்படுத்திய சமூகம். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான வேட்கையையும் அதனைத் துறப்பதற்கான மனநிலையையும் ஒரே நேரத்தில் வைத்துக்கொள்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், அதனை அம்பேத்கரிடம் நான்பார்க்கிறேன். ஃபூக்கோவின் நிலைப்பாட்டுக்கும் அம்பேத்கரின் நி லைப்பாட்டுக்கும் உள்ளார்ந்த ஒரு தொடர்பு இருக்கிறது. அதிகாரத்தைப் பற்றிய என்னுடைய புரிதல் இப்படித்தான் இருக்கிறது. நான் தேர்தலில் பங்கெடுப்பது என்பது அதிகார சமன்பாட்டை மாற்றியமைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. ஆனால், அதிகார போதைக்குள் நாம் ஆட்பட்டுவிடக்கூடாது; அதனை துறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். எனவேதான் தேர்தல் முடிந்ததும் நடைபெற்ற எங்கள் கட்சியின் முதல் கூட்டத்தில் இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று அறிவித்தேன். அதற்கான தூண்டுதல் அம்பேத்கரிடம் இருந்தும் ஃபூக்கோவி டம் இருந்தும்தான் எனக்கு வருகிறது.

இலக்கியம் என்பது தத்துவத்தை அணுகுவதற்கு இன்னொரு வழி என்று மிஷல் ஃபூக்கோ குறிப்பிடுகிறார். அந்த வழியின் மூலமாக அரசியலுக்குள்ளும் நுழைய முடியும். இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவை எப்போதுமே நான் வலி யுறுத்தித்தான் வந்திருக்கிறேன். இவ்வளவு காலமும் இலக்கியத்தின் அரசியலை கண்டு சொல்கிற விமர்சகனாக இருந்த நான், இப்போது அரசியலுக்குள் இலக்கி யத்தின் பண்புகளை ஏற்றுகிற படைப்பாளியாக மாறுகிறேன்.

தீராநதி: சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கும் வி ஷயங்கள் என்ன?

ரவிக்குமார்: வெகுஜன அரசியல் கவனத்தில் கொள்ளாத அனைத்தையும் அதன் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். சட்டசபையில் நான் பேசியமுதல் கன்னிப் பேச்சே அதனை உங்களுக்குச் சொல்லும். இருபத்தைந்தாயிரம் தொகுக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. தமிழின் தொன்மையையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்த கல்வெட்டுகள்தான் ஆதாரம். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் சொல்லும் நமது வேண்டுகோளுக்கு இந்த கல்வெட்டு ஆதாரங்கள் மிக முக்கி யமானவை. எனவே இந்த கல்வெட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். மேலும், தமிழக அரசு ஆவணங்கள் பெருமளவில் லண்டன் ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. அவற்றின் நகலை இங்கே கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினேன். இவைகள் வேறு எந்த சட்டமன்ற உறுப்பினராலும் எழுப்ப சாத்தியமில்லாத பிரச்னைகள். ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரைக்கும் மிக ஆதாரமான வி ஷயங்கள். இந்த விஷயங்கள் எழுப்பப்பட்டால் அதனை மதித்து செய்ய விரும்பும் அரசாங்கம் இன்று இருக்கிறது என்பதும் சந்தோஷமான ஒரு விஷயம். எதிர்கட்சி அணியில் இருக்கும்போதும் இந்த பாராட்டைச் சொல்லவேண்டும்.

தீராநதி: பெரியார், திராவிட இயக்கம் மற்றும் திராவிடக் கட்சிகளை தொடர்ந்து விமர்சித்து வந்த நீங்கள் இப்போது ஒரு திராவிட இயக்கக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ரவிக்குமார்: நான் சொல்வது உங்களுக்கு அதிரடியானதாகக்கூட இருக் கலாம். ஆனால், ஆனைமுத்து அவர்களுக்கு அடுத்தபடியாக பெரியாரை மீண்டும் மீண்டும் படித்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். பெரியாரைப் படித்து, அதனை வெவ்வேறு சூழலுடன் பொருத்திப்� பின்நவீனத்துவ பின்புலத்துடன் அவருடைய போராட்டங்களைப் பார்த்து, மறுவாசிப்பு செய்த ஆரம்பகால எழுத்தாளர்களில் நானும் ஒருவன். பெரியார் குறித்த விவாதங்களைக் கிளப்பி, அவருடைய எழுத்துக்கள் மீண்டும் பெரிய அளவில் வாசிக்கப்படவும் நாங்கள் காரணமாக ருந்தோம். அந்த விவாதங்களி ல் நான் முன்வைத்த, மையமாக எழுப்பிய பிரச்னையை யாருமே கண்டுகொள்ளவில்லை அல்லது அதிலிருந்து நழுவிப்போக விரும்புகிறார்கள்.

1998ல் திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவு தருகிறது. எனக்கு அது ஒரு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அதனை மற்றவர்களைப் போல் தி.முக. தலைவரின் அல்லது கட்சியின் சந்தர்ப்பவாதம், நிலைப்பாடு என்று குறுக்கி என்னால் பார்க்க முடியவில்லை. அத ற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தோன்றியது. அதன் சி ந்தனையிலேயே அதற்கான காரணங்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கி னேன். அப்போது பெரியாரிடம் அதற்கான வேரைப் பார்த்தேன். குறிப்பாக, சி றுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரி ன் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். எதனைச் சொல்லியும் அவர் பேச்சுகளை இப் போது நியாயப்படுத்த முடியாது. “பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம்முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். மேலும், “சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு” என்றும் சொல்கிறார். இதனால், மத அடிப்படைவாதம் உச்சத்தில் இருந்த சூழலில், அதனை எதிர்கொள்ளப் பெரியாரியம் பயன்படாது என்று எனக்குத் தோன்றி யது.

அரசியலமைமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னால் அம்பேத்கர் சி றுபான்மையினர் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்துப் பேசி யதை, பெரியாரின் இந்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். “சி றுபான்மையினர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும் பெரும்பான்மை கையில் போகக்கூடாது” என்கிறார் அம்பேத்கர். “இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை என்பது மதப் பெரும்பான்மை. இது மாறாதது. பொதுவாக பெரும்பான்மை ஆட்சி செய்வது என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், அந்தக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவில் பொருத்தினீர்கள் என்றால் அது இங்குள்ள மதப் பெரும்பான்மையினர் கையில் அதிகாரத்தைக் கொண்டுோய்க் கொடுத்துவிடும். அது கூடாது. மதப் பெரும்பான்மையை நாம் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்” என்கிறார். முடிவாக, ”சிறுபான்மையினர் அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அதே நேரத்தி ல் சிறுபான்மை உதவி ல்லாமல் பெரும்பான்மை மட்டும் ஆட்சியமைக்க வழி இருக் கக்கூடாது” என்றும் சொல்கிறார். அம்பேத்கருடைய நிலைப்பாடும் பெரி யாருடைய நிலைப்பாடும் எதிர் எதிரானவை. இந்நிலையில், அம்பேத்கரை வடநாட்டுப் பெரியார் என்று சொல்வதும், பெரியாரை தென்நாட்டு அம்பேத்கர் என்று சொல்வதும் முட்டாள்தனமானது. இரண்டு பேரும் பார்ப்பனி யத்தை எதிர்த்தார்கள் என்பதிலும் இருவரும் அடித்தட்டு மக்களின் வி டுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்கள் என்பதிலும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால். அணுகுமுறையில், சிந்தனை முறையில் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

பெரியாரை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யவேண்டும், இன் றைய காலகட்டத்துக்குப் பொருத்தமுள்ளதாக அவரது சிந்தனைகளை மாற்றவேண்டும் என்பதுதான் என் நோக்கம். இதனை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்வதாகத் திருப்பிவி ட்டார்கள். பெரியாரை சிந்தனை தளத்தில் அங்கீகரித்து, அவருடைய சி ந்தனைகள் நமக்கு எப்படிப் பயன்படும் என்று நான் பார்த்திருக்கிறேன். உண்மையில் பெரியாரியவாதிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்வார்களானால் என்னை அவர்கள் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்கள் எனக்கு அவதூறு கடிதங்களையும் மிரட்டல் கடிதங்களையும் எழுதினார்கள். தொலைப்பேசியி ல் மிரட்டும் விதமாக பேசினார்கள். அந்தளவுக்குத்தான் பெரியாரை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்.

பெரியார், தொடர்ந்து மாறிக்கொண்டும் தன்னையே மறுத்தும் பல்வேறு நி லைப்பாடுகளை எடுத்திருக்கிறார். அவரது வாரிசுகளான திராவிட இயக் கத்துக்காரர்க ோ தி.மு.க. கட்சிக்காரர்களோ அந்தவகையில் அவரைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லாதது. பொதுவாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது என்று சொன்னார் பெரியார். மேடையில் செருப்பை வீசி னால் இன்னொரு செருப்பையும் தேடி எடுத்துக்கொண்டு வா என்று சொன்னார். அதாவது பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இந்தமாதிரி பி ரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாக பார்க்ககூடாது என்று சொல்லி, அதுபோல் வாழ்ந்தும் காட்டியிருக்கிரறார். ஆனால், அவரது வாரிசுகள், மானம் பார்க்கிறவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது என்பதுபோல் அதனை மாற்றிவிட்டார்கள். அவர்களால் அவரது உண்மையான வாரிசாக இருக் கமுடியாது. அது சாத்தியமுமில்லை. நாம் அதனை அவர்களிடம் எதி ர்பார்க்கவும் கூடாது.

திராவிடக் கட்சிகளின் கடந்த நாற்பதாண்டு ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களி ன் நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் நி லமற்றவர்களாக மாற்றப்பட்டதும் அவர்களது கல்வி நிலை மோசமானதும் தி ராவிட கட்சிகளின் ஆட்சியில்தான். மொத்தத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து அதன் அடிப்படையில்தான் அதனை விமர்சிக்கிறோம். அதேநேரத்தில் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை ஆதரிக்கவும் செய்தி ருக்கிறோம்.

தேர்தல் கூட்டணி என்பது அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக, இரண்டு வெவ்வேறு கொள்கையுள்ள கட்சிகள் ஏற்படுத்திக் கொள்கிற ஒரு தற்காலிக ஏற்பாடு. கொள்கை சார்ந்து எந்தக் கூட்டணியும் அமைய முடியாது. கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடலாமே. திராவி டக் கட்சிகளுடன் விமர்சனங்கள் வைத்திருந்தாலும் இந்தக் கூட்டணி தேவையாக இருக்கிறது.

தீராநதி: இது ஒரு சமரசம் இல்லையா?

ரவிக்குமார்: சமரசம்தான். நடைமுறையில் சமரசம் இல்லாமல் எதுவும் சாத்தி யமும் கிடையாது. ஆனால், கருத்தியல் தளத்தில் சமரசம் கிடையாது.

தீராநதி: உங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் வி ஷயங்கள் என்ன?

ரவிக்குமார்: எனது தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதுதான் இப்போது எனக்கு இருக்கும் திட்டம். அதன் மூலம் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்த விரும்புகி றேன். அது இந்த சட்டமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு புத்துயிர்ப்பைக் கொடுக்கும். பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவது, மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தில் கவனம் செலுத்தி சில முக்கியமான காரியங்களைச் செய்வது, பின்தங்கியிருக்கும் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவது, இந்திய அளவில் முக்கியமான பல்வேறு சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களை தொகுதிக்கு அழைத்துத் தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தை உருவாக்குவது என்று பலவற்றைத் திட்டமிட்டிருக்கிறேன். குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்து அந்த திட்டத்தை செயல்படுத்துவோம். நான் அதில் ஒரு அங்கமாக - இருப்பேன், அவ்வளவுதான்.

தீராநதி: இனிமேல் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கி றீர்கள். அப்போது என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

ரவிக்குமார்: நான் முக்கியமாக நினைக்கிற கருத்துருவாக்கப் பணிகளில் என்னுடைய கவனம் இருக்கும்.

தீராநதி: இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்த உங்கள் விமர்சனங்கள் என்ன?

ரவிக்குமார்: பல குறிப்பிடத்தக்க தலைவர்கள் தமிழக அரசியலில் இருக்கி றார்கள். கலைஞர் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவரளவுக்குத் தன்மைகள் கொண்ட இன்னொரு ஆளுமையை இனிமேல் பார்க்க முடியாது. எழுதுகிற, பேசுகிற, படிக்கிற ஆற்றல் கொண்ட தலைமுறை கிட்டத்தட்ட அவருடன் முடிகிறது. இதனால் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆளுமையாக அவர் இன்று இருக்கிறார். ஜெயலலிதா துணிவு, தன்னம்பிக்கை, தைரியம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்கிற அளவுக்கு ஒரு ஆளுமையாக இருக்கிறார். பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு அதுபற்றிய எந்தவொரு எண்ணமும் ல்லாமல் இருக்கும் நல்லக்கண்ணுவும் அவருடைய எளி மையும் மிகவும் போற்றக்கூடியவை. இளையதலைமுறை தலைவர்களிள் வேறு � யாரைவிடவும் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஒரு ஆளுமையாக தி ருமாவளவன் இருக்கிறார். இவ்வளவு சக்திவாய்ந்த, வித்தியாசமான பல்வேறு ஆளுமைகளை வேறு எதாவது இந்திய மாநிலங்களில் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களிடம் இருந்து அடுத்தத் தலைமுறையினர் சாதகமான பண்புகளை உள்வாங்கவேண்டும். நிச்சயமாக இந்தத் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் ஆரோக்கியமான பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று நினைக்கக் கூடியவனாகத்தான் நான் இருக்கிறேன்.

தீராநதி: தலித் இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது ஏன் சாத்தியமி ல்லாமல் இருக்கிறது?

ரவிக்குமார்: பிற்பபடுத்தப்பட்டோர் என்று பொதுவாக பேசினாலும் அதற்குள் இருக்கும் சாதிகள் எப்படி தனித்தனியாக இருக்கிறதோ, அதுபோல் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் இருக்கும் சாதிகளும் தனித்தனி யாகத்தான் இருக்கின்றன. இது முக்கிய காரணம். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதி யினருக்கு இடையிலான உறவு, இந்து மதத்துக்குள் இருக்கும் சாதியினருக்கு இடையில் இருப்பதுபோல் பகைமைத்தன்மை கொண்டதாக இல்லாமல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையின் அடிப்படையி ல் அவர்களுக்கு இடையே ஒரு ஒருமித்தப் பண்புகள் இருக்கின்றன. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்தி எல்லோருக்குமான கோரிக்கைகளை வலி யுறுத்தி முன்னே செல்லும்போது பரந்த தளத்தில் அவர்கள் அனைவரையும் தி ரட்டமுடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. உட்சாதிப் பிரிவுகளை கடந்துபோகவேண்டும் என்ற பார்வையும் கருத்துப் பின்புலமும் எங்களுக்கு இருக் கிறது. அதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து இடைவிடாமல் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சில தலைவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட ஈகோ காரணமாக அது சாத்தியப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இன் னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையே மட்டுமல்லாமல் மற்ற எல்லா சாதியினருக்கும் இடையேயும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்களில் ஒன்று.

(தீராநதி ஜூலை 2006 இதழில் வெளியான நேர்காணல்)


"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravikumar&oldid=975094" இலிருந்து மீள்விக்கப்பட்டது