பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தமிழ் நாடும் மொழியும்


கியர் உறவை இராசேந்திரன் தன் செல்வியான அம்மங்கை தேவியைக் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனுக்குக் கொடுத்து மேலும் வளர்த்துக் கொண்டான். அலி மசூதி போன்ற அராபிய எழுத்தாளரின் குறிப்புகள், 11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீன எழுத்தாளர்களின் குறிப்புகள் ஆகியவை சோழர்கள் கடல் கடந்து பல நாடுகளை வென்றமைக்குச் சான்று பகருகின்றன. கி. பி. 1033 இல் சோழமன்னன் சீனாவுக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பியதாகத் தெரிகிறது.

இராசேந்திரனின் கப்பற்படைக்கு அந்தமான், நிக்கோபார் ஆகிய தீவுகள் தப்பிப் பிழைக்க முடியவில்லை. கலிங்க நாடு, கடல் வாணிகத்தில் தமிழ் நாட்டோடு போட்டியிட்டது. எனவே சோழன் கலிங்க நாட்டை வெல்லக் கழிபேராசை கொண்டான். இராசேந்திரனால் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் இடைதுறை நாடு என்பது ரெய்ச்சூராகும் ; மான்யகடகம் என்பது இக்கால மால்காடு என்பதாகும். இராதா என்பது (இலாடம்) தென்மேற்கு வங்காளமாகும். தண்டபுத்தி என்பது பீகார் மாநிலமாகும். இலாட நாட்டு அரசனான இரணசூரன், மகிபாலன், தர்மபாலன் ஆகியோர் முடிமீதுதான் கங்கைநீர் நிரம்பிய குடங்கள் சுமத்திச் சோழநாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. வரலாற்று ஆசிரியர் சிலர் இராசேந்திரனின் இத்தகைய சீரிய வடநாட்டு வெற்றியை வேங்கி நாட்டுத் திக்குவிசயம் என்றும், கங்கை நோக்கிய புண்ணிய யாத்திரை என்றும், கங்கவாடி வெற்றியென்றும் காரணமில்லாது கூறுவர்.

இராசாதிராசன்

இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசாதிராசன் சோழ நாட்டு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் தந்தை காலத்திலேயே சோழ நாட்டு அரசியலிற் பெரும்பங்கு