பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தமிழ் நாடும் மொழியும்


கலிங்கம் முழுவதும் சோழனுக்குச் சொந்தமாயிற்று. இக்கலிங்க வெற்றியையே கலிங்கத்துப்பரணி மூலம் கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டதேவர் பாடியுள்ளார். கலிங்க வெற்றிக்கு முக்கிய காரணம் கருணாகரத் தொண்டைமானே. கலிங்க அரசனான அனந்தபத்மன் சோழநாட்டைச் சேர்ந்த இராசசுந்தரியின் மகனாவான். இவன் போரிலே தோற்றோடிவிட்டான்.போரிலே சோழன் வெற்றிபெற்றபோதிலும் கலிங்கநாடு சோழ நாட்டோடு சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. கி. பி. 1118-இல் கலியாணிச் சாளுக்கிய அரசனான ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டைக் கைப்பற்றினான். சோழப் பேரரசின் பரப்பு மிகவும் சுருங்கியது. எனினும் குலோத்துங்கன் இயன்றவரை அச்சுருக்கத்தைத் தடுத்தான். இங்கிலாந்தை ஆண்ட வில்லியம் என்பவனைப் போலக் குலோத்துங்கனும் நாட்டை அளந்து வரி விதித்தான். பின்னர் இவன்காலத்தில் சுங்கவரி நீக்கப்பட்டது. இதனால் இவன் சுங்கந் தவிர்த்த சோழன் என்று புகழப்பட்டான்.

குலோத்துங்கன் காலத்தில் தமிழும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார், அடியார்க்கு நல்லார், பரணி பாடிய சயங்கொண்டார் ஆகியோர் இவன் காலத்தில் வாழ்ந்தவராவர். குலோத்துங்கன் இராமானுசரை நாட்டைவிட்டு விரட்டினான் என்றும், அதனால்தான் அவர் மைசூரை ஆண்ட பித்திதேவனிடம் அடைக்கலம் புகுந்தார் என்றும் சிலர் கூறுவர். இதற்கு ஆதாரமில்லை.

குலோத்துங்கனுக்குப் பின்பு அவன்றன் நான்காவது மகனான் விக்கிரம சோழன் பட்டம் பெற்றான். இவன் சமயப் பொறை மிக்கவன். எனவே இராமானுசர் மைசூரை விடுத்துச் சோழநாடு வருவதை இவன் தடைசெய்யவில்லை. தியாகவிநோதன் எனக் கம்பரால் இராமகதையிற் குறிப்பிடப்பட்