பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தமிழ் நாடும் மொழியும்


பேரரசர்கள் பழுத்த சைவர்களாக விளங்கிய போதிலும், அவர்களிடம் பிற சமயக் காழ்ப்பு இல்லை. எனவே பிற சமயங்களையும் மக்கள் எவ்வித இடையூறுமின்றி பின்பற்றினர். அரசர்கள் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, பிற மதத்தினரையும் ஆதரித்தது போலவே மக்களும் சமயவெறியின்றி ஒற்றுமையாய் வாழ்ந்தனர். ஆனால் சைவ சமயத்தைச் சேர்ந்த காலமுகர், கபாலிகர், பாசுபதர் என்போர் சமயவெறியுடையவர்களாய் இருந்ததாகத் தெரிகிறது.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்மக்களிடையே அரும்பிய சமய உணர்ச்சி சோழர் காலத்தில் பெருவெள்ளமாகப் பரந்து நின்றது. மக்கள் எல்லோரும் மனங்குளிர தோத்திரப் பாமாலைகளைப் பாடியும், அடியவர் வரலாறுகளைப் போற்றியும் தம் மனமெலாம் இறை மணம் கமழ வாழ்ந்தனர். சமய குரவர்கள் புகழ்ந்து பாடப்பெற்ற ஊர்கள் தமிழ்மக்களால் பாடல்பெற்ற தலங்கள் எனக் கொண்டாடப்பட்டன; பூசிக்கப்பெற்றன. சோழப் பேரரசர்கள் இத்தலங்களில் எல்லாம் கற்றளி எடுத்தனர். இவ்வாறே பாண்டியரும் பல கோவில்கள் கட்டினர். மேலும் தமிழக வேந்தர்கள் சமயநெறி போற்றி, அந்நெறியிலே நின்று, சிறந்த முறையில் செந்தமிழ் நாட்டை ஆண்டனர். புதிய கோவில்களைக் கட்டியதோடமையாது, பழைய கோவில்களையும் புதுப்பித்தனர். எனவே தமிழகத்தில் கோவில் வழிபாடு சிறக்கலாயிற்று. புலவர் பெருமக்களும் சமய உணர்ச்சி மிக்குடையவர்களாய் பாடல் பெற்ற தலங்களையும், அங்கு உறைகின்ற தெய்வங்களையும் பற்றிப் பலபடப்பாடிப் பரவினர்.

சோழர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோவில்கள், மருத்துவக் கூடமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், பசுக்கூடமாகவும் விளங்கின. ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டன. மேலும் சிவன்