பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

87


குறையெதுவோ மதன்கனைக்கு மிகவருந்த
    எனைவிதித்த கொடியோனான
மறையவனும் கலைமகளைப் பிரிந்திருந்தால்
    தெரியுமந்த வருத்தந்தானே.”

‘என் துன்பத்தை உணர்வதற்காக என்னைப் படைத்தவனும் அதே துன்பத்தை அடைய வேண்டும்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லுகிற தெம்பு கவியுள்ளம் படைத்தவனுக்குத் தான் இருக்க முடியும்.

பணம் சம்பாதிப்பதற்காக இளம் மனைவியை ஊரில் விட்டு விட்டு இந்தக் காலத்திலும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் தொலைவிலுள்ள நகரங்களுக்குப் போகிறார்களே அவர்களில் எவராவது ஒருவராயினும் மேற்கண்ட சுந்தரக் கவிராயர் பாடியது போல் ஒரு பாட்டுப் பாட முடியுமா? முடியாது இயந்திர யுகத்தில் மோட்டார்ச் சக்கரங்கள் உருளுகிற மாதிரி உணர்ச்சிகளை வெறும் இயக்கமாக்கிக் கொண்டு விட்டோம். அவைகளில் துடிப்பு இல்லை. ஆகவே, கவிதையும் இல்லை. கவியும் இல்லை. கற்பனையும் இல்லை.

33. சொல் சுட்டது

கையிலும் காலிலுமாக மெய்யிலே சுட்ட தீப்புண்கள் விரைவில் ஆறிவிடும். அழியும் இயல்பினதாகிய உடலோடு தொடர்புடைய எல்லாப் புண்களுமே ஆறிப் போகின்றவைதாம். உடலுக்கு ஏற்படும் துன்பங்கள் மனத்தை வருத்துவதுபோலத் தோன்றினும், அந்தத் துன்பங்கள் மறைகின்ற கால எல்லையோடு அவற்றால் விளைந்த வருத்தமும் மறைந்துபோகும். உடலோடு உள்ளம் கொண்டிருக்கும் தொடர்பு பெரிது. இதனால்தான் மனத்தோடு தாக்குதல் நடத்தும், சொற்களால் புண்படுத்தும் நிலைகள் என்றுமே யாருக்கும் ஆறுவதில்லை.