பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ் இலக்கியக் கதைகள்

மரத்தை இழுத்துக்கொண்டிருந்த செம்படவர்கள் சிலர் எதிர்ப்பட்டனர்.

பசி, முகம் அறிந்து இடமறிந்தா விசாரிக்க விடுகிறது? அந்தச் செம்படவர்களிடம் “பக்கத்தில் ஏதாவது சத்திரம் கித்திரம் இருக்கிறதா?” என்று விசாரித்தார் காளமேகப் புலவர். “காத்தான் சத்திரத்திற்குச் செல்லுங்கள் ஐயா, ஒரு வேளை உணவு கிடைக்கலாம்” என்று அவர்களில் ஒரு செம்படவன் மறுமொழி கூறினான். போகும் வழியை விவரமாக அறிந்து கொண்டு செல்லத் தொடங்கினார் புலவர், விரைவில் நடு நடுவே வழி கேட்டறிந்து கொண்டு காத்தான் சத்திரத்தை அடைந்தும் விட்டார்.

★ ★ ★ ★

சாப்பாடு தயாராவதற்குச் சிறிது நேரமாகுமென்றும் அதுவரை காத்திருக்குமாறும் சத்திரத்தில் இருந்தவர் கூறினார். நடந்து வந்த களைப்பும் பசியும் ஒன்று சேர்ந்து கொண்டன. ஒரே ஓய்வாக வந்தது. திண்ணையில் காலை நீட்டிக்கொண்டு முடங்கியபடியே உறங்கி விட்டார் காளமேகம். எவ்வளவு நேரம் உறங்கினாரோ? அவருக்கு நினைவேயில்லை. தம்மை மறந்து தூங்கினார். சாப்பாட்டைப் பற்றிய நினைவுகூடத் தூக்கத்தில் ஐக்கியமாகிவிட்டது.

கண் விழித்தபோது புலவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. சுற்றி இருள் படர ஆரம்பித்திருந்தது. அந்திப் பொழுதுவரை தூங்கியிருந்தார். அதே கடலலைகளின் ஓசை முன்னிலும் பன்மடங்கு தூரத்திலிருந்து பேரொலி செய்து கொண்டிருந்தது. ‘சத்திரத்தில் சாப்பாடு தீர்ந்து போய்விட்டதோ?’ என்ற பயத்துடன் சுருட்டி வாரிக்கொண்டு உள்ளே நுழைந்தார் காளமேகம். ஆனால் நுழைந்த வேகத்தில் திரும்பி வர வேண்டியதாகப் போயிற்று. இன்னும் உள்ளே அடுப்புகூட பற்றவைக்கவில்லை என்று தெரிந்தது. ஏமாற்றத்தோடு திண்ணைக்கு வந்தார். அப்போதுதான் கூடை நிறையக் கொழி அரிசியுடன் உள்ளே நுழைந்தான் சத்திரத்து வேலைக்காரன்.