பக்கம்:அலைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 லா. சா. ராமாமிருதம்


பளிச்சென்றிருப்பாள். என் உள்ளத்தில் படர்வாள். அவளை நான் நினையாத நேரமில்லை.

***

இருந்தும் என் மனைவிமேல் இருந்து புழுத்துப்போன ஆசை என் மூளையைக் குடைகையில் நான் தவிக்கிறேன்.

துரோகி,

நான் அம்பாளைத் துரோகம் செய்யேன். நானே அவள். அவளே நான். நான் முக்தன்.

நான் தெளிந்த பிறகும் எனக்கு ஏன் உடலும் உள்ளமும் குளிரவில்லை?

இன்னேரம் நாடகம் நடந்துகொண்டிருக்கும்.

“கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை

கற்காரிகையே வகையறியேனே...'"

'அம்பா! என் நெஞ்செல்லாம் நெருப்பாய் எரிகிறது. நீ இதற்கு ஒரு வழி சொல்லு!’

அவள் என்னை மெளனமாய் நோக்குகிறாள்.

என்னெஞ்சில் எரிவது நஞ்சு.

நான் நஞ்சுண்டவன்.

சிவன்.

※ ※

மறுபடியும் மாலை நேரம்.

தீபாராதனைக்கு இன்னமும் கொஞ்சநேரமிருக்கின்றது.

நெஞ்சக் கனலைத் தணிக்கவேண்டி நந்தவனத்தில் போய் நின்றேன்.

புதர்கள் முழங்கால் உயரம் நின்றன.

செடிகள் ஆள் உயரம். அவைமேல் பூக்கள் அடர்ந்து ஆடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/20&oldid=1284272" இலிருந்து மீள்விக்கப்பட்டது