பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ. பெ. விசுவநாதம்

11



வால் கயிறாகி, அது மூன்று சேர்ந்து தேர் இழுக்கும் வடக் கயிறாகித் தானே தேங்காயை உடைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. மிக அற்பமான இத்தூசியினிடத்திலிருந்து சேர்ந்து வாழும் அறிவை மனிதன் பெறுவானா? -பெற்றால், அவன் வாழ்வு சிறக்காதா?

அறிவின் பயன்

கடலின் ஆழமான இடத்து நீர் நீல நிறமாய்த் தோன்றும். ஆழம் குறைந்த இடத்து நீர் பச்சை நிறமாய்த் தோன்றும். அலைநீர் முத்தைப்போன்று வெள்ளை நிறமாய்த் தோன்றும். அள்ளிப் பார்த்தால், நிறமற்றுத் தோன்றும். உண்மை, என்னவெனில், நீருக்கு நிறமில்லை என்பதே. இதைக் கண்டுபிடித்து மகிழ்வதுதான் ஆராய்ச்சி அறிவின் செயலாகும். இதை அறிந்துதான் வள்ளுவர், “எந்தப் பொருள் எப்படித் தோன்றினாலும், நம்பாதே; அப்பொருளின் மெய்ப்பொருளைத் தேடிக் காண்பதுதான் அறிவு” எனக் கூறினார் போலும்!

மனிதன்

மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், பாம்பைப்போல ஊர்ந்து செல்லக்கற்றுக்கொண்டிருக்கிறான். மீனைப் போல நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். பறவையைப் போலப் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், மனிதனைப்போல வாழக் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொள்வது நல்லது.

பகைக்கு விதை

பறங்கிக் கொடிக்குப் பறங்கி விதையும், பாகற்கொடிக்குப் பாகல் விதையும் வேண்டும் என்பது எல்லோரும் அறிந்ததே. மற்ற எல்லாச் செடிகளும் அதனதன் வித்தில் இருந்தே முளைக்கின்றன. “விரை ஒன்றுபோடச் சுரை ஒன்று முளைக்குமா?” என்ற பழமொழியும் இதை வற்புறுத்துகிறது.

ஆனால், ‘பகை’ என்னும் செடி ‘நட்பு’ என்னும் விதையிலிருந்துதான் முளைக்கிறது. ‘நட்பு’ என்னும் விதையின்றிப் ‘பகை’ என்னும் செடி முளைப்பதே இல்லை, என்று துணிந்து கூறலாம்.