பக்கம்:அலைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 O லா. ச. ராமாமிருதம்


தொலையட்டும். என்னுள் எல்லாவற்றின் மேலும் ஒரு சீற்றம் எழுந்தது.

லெவல் க்ராஸிங் கதவை மூட, வேலன் எப்பவோ போயாச்சு. இப்போது வருவது “குட்ஸ்."

வெளியே வந்து துண் அருகே தொங்கும் தண்டவாளத் துண்டை ஆணியால் தட்டினேன்.

யாருக்காகத் தட்டினேன்? யார் இருக்கிறார்கள் என் தட்டலைக் கேட்க? அர்த்தமற்ற இந்தக் காலி சத்தத்தை எதற்காக எழுப்புகிறேன், குண்டலி போலவே எல்லாம் கேலிக்கூத்தாய்ப் போச்சு. ஏனோ இப்படி வாழ்க்கையில் அவமானச் சின்னமாய் நிற்கிறோம்?

என் மனைவி அறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்களில் வெறி கூத்தாடிற்று. கைகளை வீசிக்கொண்டு இருப்புப் பாதையை நோக்கி ஓடினாள். ஏதோ அவளிடமிருந்து தெறித்தது.

“குண்டலி செத்துப்போனாள்! குண்டலி செத்துப் போனாள்!! செத்தேபோயிட்டாள்!!" அவள் குரல் கீறீச்சிட்டு உடைந்து சுக்கல்களாய் உதிர்ந்தன. ஒடிப்போய்த் தாங்கிக் கொண்டேன். இல்லாவிட்டால் விழுந்திருப்பாள்.

ரயில் இரும்புக் கிராதியின் எல்லையுள் கடந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தின்மேல் குண்டலங்கள் இரண்டு வெய்யிலில் தகதகத்தன.

☐☐☐
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/60&oldid=1287249" இலிருந்து மீள்விக்கப்பட்டது